Monday, February 8, 2021

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு

  பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


லேவியர் 13:1-2, 44-46
1கொரிந்தியர் 10:31-11:1
மாற்கு 1: 40-45 

திருப்பலி முன்னுரை:

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறைகுலமே, இறைஇயேசுவில் திருவடியில் அமர்ந்து நலம் பெற உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் இயேசு கிறிஸ்து தொழுநோயாளி ஒருவருக்கு நலமளிக்கும் நிகழ்வே இன்றைய வாசகத்தின் மையக்கருத்து. தொழுநோயாளர் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். அவரது குணப்படுத்தும் ஆற்றலை நம்புகிறார். பரிவு கொண்டு அவரை இயேசு தொட்டுக் குணமாக்கினார். இயேசுவிற்குச் சாட்சியாகிறார்.

குணமளிப்பவர் இறைவனாக இருப்பினும் நம் நம்பிக்கையே, அதுவும் அசையா ஆழ்ந்த நம்பிக்கையே குணமளிக்கும் என்பதைக் கடந்த வாரங்களில் நாம் வாசிக்கக் கேட்டோம். இன்று உலகம் முழுவதும் ஆட்கொள்ளப்பட்ட தொற்றுநோய் காலத்தில் நமது நம்பிக்கையைச் சோதித்துப் பார்ப்போம் அது எவ்வாறு உள்ளது என்று?

குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதைப் பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்கான முதல் படி என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பயில்கிறோம். நாம் நம்பிக்கைப் பெறவும், சிறப்பாகக் கொரோனா நோயாளர்கள் அனைவரும் நலம் பெறவும் இன்றைய திருப்பலியில் இறைவனிடம் மனமுறுக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஒருவரின் வாழ்வில் நோய் அதுவும் தொழுநோய் வந்தால் அவர் படும் இன்னல்கள் எண்ணிலடங்கா. யூதச் சமுதாயத்தில் தொழுநோய் என்பது பாவத்தின் சம்பளமாகப் பார்க்கப்பட்டது. மோசேவின் கட்டளைப்படி அந்த நோயாளித் தனிமைப் படுத்தப்பட்டு நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவராய் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார் என்பதாகும். இவ்வாசகத்திற்குச் செவிமெடுக்கும் நாம் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு அனைவரும் நலமடைய வேண்டுவோம்.

பதிலுரைப்பாடல்


திபா 32: 1-2, 5, 11
பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். -பல்லவி

`என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். -பல்லவி

நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் தாம் கிறிஸ்துவைப் பின்பற்றி நடப்பது போல நம்மையும் அவ்வாறு நடக்க அழைக்கிறார். எதைச் செய்தாலும் அதை இறைவனின் மாட்சிக்காகச் செய்யுங்கள் என்கிறார். அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்டு நாமும் வேறுபாடுகளைக் களைந்து இறைமாட்சியில் மகிழ்ந்திடுவோம்.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. ஆண்டவர் உருவாக்கும் புதிய உலகில் நீதித் தழைத்தோங்கும் என்ற எங்களுக்கு வாக்களித்துள்ளீரே இறைவா! அத்தகைய நீதி நிறைந்த உலகை உருவாக்கும் பணியில் திருஅவையில் உள்ள அனைவரும் ஆர்வமுடன் இணைந்து உமக்கு உண்மையான கருவிகளாகச் செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரிவன்பமிக்க எம் தந்தையே, இறைவா! எம் பங்கிலுள்ள ஏழைகள், திக்கற்ற எளியோர்கள், வறியோர்கள், முதியோர்கள், அனாதைகள் ஆகிய அனைவருக்கும் இரக்கம் காட்டும். அவர்கள் நோய்நெடியின்றி வாழவும், குறிப்பாகத் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படவும், நலம் வேண்டியும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 அனைவருக்கும் தந்தையாகிய இறைவா! சிறார் முதல் இளைஞர்கள் வரை உமது பொற்பாதங்களில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் ஏறெடுக்கும் கல்வி மற்றும் கலாச்சாரம், நமது பண்பாட்டிற்கும், வாழ்க்கைத் தரத்திற்கும் ஏற்றதாகவும், பயிலும் மாணாக்கர்கள் தங்கள் கல்வியைச் சிறந்த முறையில் கற்றிட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா! கலாச்சார மாற்றங்கள், மின்னணுச் சாதனங்கள், நவீனத் தகவல் தொடர்புகள் மேலோங்கி இளைஞர்கள் நிலைத் தடுமாற வைக்கும் இந்நாட்களில் அவர்கள் பிறரன்புப் பணிச் செய்ய நல்ல மனநிலையும், சேவை மனப்பான்மையும் பெற்று நேரிய இறையரசுப் பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. உமது சிறகுகளில் அடைக்கலம் தந்த இறைவா! போராட்டமே வாழ்க்கையாகிப் போன இக்காலக்கட்டத்தில் மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் நலம் காக்க அரசியல்வாதிகளுக்கு நல்மனம் தந்து, மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுத்திடத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

 

No comments:

Post a Comment