தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூல் 22:1-2,9-13,15-18
உரோமையர் 8:31ஆ-34
மாற்கு
9:2-10
திருப்பலி முன்னுரை:
அன்பார்ந்த இறைமக்களே!
சென்ற ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில்
இயேசுவைச் சந்தித்த நாம், இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க
வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் இரு வேறுபட்ட,
முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இந்த ஞாயிறு, நமது சிந்தனைக்கு தரப்பட்டுள்ளன.
இவ்விரு நிகழ்வுகளில் ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையை நமது
சிந்தனைகளின் மையமாக்குவோம்.
மகனைப் பலி கேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு
மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள
மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின்
உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை
எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும், இறை
அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்க தயாராவதும் வாழ்வில் நாம்
சந்திக்கும் ஓர் உண்மை.
மலையின் உச்சியில் இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத
உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கிய சீடர்களைப்போல், நாமும் இந்த இறை
அனுபவத்தை இத்திருப்பலியில் பெற்று சராசரி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும்.
அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாமல்
தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
உருமாறிய
இறைமகனைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு, இயேசு மலையிலிருந்து
இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும்
இணைவோம் வாருங்கள்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
ஆபிரகாமை இறை நம்பிக்கையின் தந்தை என்கிறோம். நமது இறை நம்பிக்கை எத்தகையது? இன்னல், இடர்ப்பாடுகள் நேரும்போது கடவுளை முழுமையாக நம்புகிறோமா? நமது இறை நம்பிக்கை எத்தகையது என்பதைச் சிந்திக்க இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் ஒரு கொடுமையான சோதனையை சந்திக்கிறார். இதனைக் கவனமுடன் கேட்டு நம்மைச் செம்மைப்படுத்த வேண்டிய காலம் இத்தவக்காலம் என்பதை உணர்ந்துச் செயல்படுவோம்.
பதிலுரைப்பாடல்
திபா 116: 10,15. 16-17. 18-19
பல்லவி:
உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
`மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு
இருந்தேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக
மதிப்புக்குரியது. -பல்லவி
ஆண்டவரே! நான் உண்மையாகவே உம்
ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து
விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத்
தொழுவேன். - பல்லவி
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின்
முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; உமது
இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என்
பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியானர் கடவுள் நம்மோடு
இருக்கையில் நமக்கு எதிராக யார் செயல்பட முடியும்? என்ற வினா எழுப்புகின்றார்.
அவரின் உடனிருப்பு நம்பும் பொழுது நம்மை யார் குற்றம் சொல்லமுடியும? சிலுவையில்
தன் சாவை ஏற்று இறந்த பின் உயிருடன் கடவுளின் வலப்பக்கம் இருக்கும் இயேசுவின்
உடனிருப்பை நம்பும்படி நம்மை அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர்
இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.''
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. அருட்கொடைகளின் நாயகனே எம் இறைவா! எம் திருஅவையின் திரு
ஆட்சியாளர்கள், தங்கள் வாழ்வில் உம் சொற்களால் ஊட்டம் பெற்று நம்பிக்கை
வாழ்வில் தளர்ச்சியுற்ற வேளையில் சோர்ந்து விடாமல், உம் நம்பிக்கை உன்னை
நலமாக்கியது என்றும் வார்த்தையை வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
2. எம்மில் என்றும் வாழும் இறைவா! மாந்தரின்
சிறப்புக்கு அளவுகோலான பிற மாந்தருக்கும், பிற உயிரினங்களுக்கும் அவர் காட்டும்
அன்பு, இரக்கம், மன்னிப்பு, சமாதானம், சமத்துவம் என்பவைகளை எம் வாழ்வில்
கடைப்பிடித்து இயேசுவின் சாட்சிகளாய் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. அனைத்திற்கும் ஊற்றான எம் இறைவா! இன்று எம்
நாட்டில் நிலவும், சிறுபான்மை மத மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை,
தீவிரவாதம் இவைகள் உம் அருள் இரக்கத்தினால் ஒழிந்திடவும், எல்லோரும் இந்தத்
தேசத்தின் மன்னர்கள் என்ற தெளிந்தச் சிந்தனையை மதவாத சக்திகள் புரிந்து கொண்டு
செயல்பட உம் தூயஆவியினால் அனைவரும் உண்மையான மனமாற்றத்தை உணரத் தேவையான அருளைப்
பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஏழைகளின் அருள்
துணையே எம் இறைவா! ஏழைகளுக்கு உதவுகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்
என்ற வார்த்தைக்கு ஏற்ப எம் சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்றுப் பகர,
ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் திருஅவையில் இன்னும் ஒரு கொடிய நோயாகவே
இருக்கின்றது. இந்த நிலை மாற நீர் அனைத்து மாந்தரும் மனமாற்றம் பெற்றுத் தளரா
மனதுடன் ஏழைமக்களுக்கு உதவி புரியத் தாராள மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுன்றோம்.
5. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!
எம் இளையோர், இயேசுவின் சிலுவை நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு
துவண்டு விடாமல், மலை அனுபவத்தில் 'இவருக்குச் செவி கொடுங்கள்!' என்ற உமது
கட்டளையை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம்
புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
Would like to get coming Sunday's early
ReplyDelete