Tuesday, March 9, 2021

தவக்காலம் நான்காம் ஞாயிறு

தவக்காலம் நான்காம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்:

குறிப்பேடு 36:14-16,19-23  |   எபேசியர் 2:4-10   |   யோவான் 3:14-21

திருப்பலி முன்னுரை:


அன்பார்ந்த இறைமக்களே!
தவக்காலத்தின் உயிர் நாடியாக விளங்கும் கருத்து, மாற்றம்தானே! வெளிப்புற மாற்றம் அல்ல, உள்ளார்ந்த மாற்றம். மனமாற்றம், அதன் விளைவாக உருவாகும் வாழ்வு மாற்றம். இதனைப் பெற்றுக்கொள்ளவே நாம் இன்று ஆலயத்தில் கூடியுள்ளோம்.

இன்றைய நற்செய்தியில், இயேசு தன் வருகை "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல" என்று நமக்கு நினைவுறுத்துகிறார். உண்மைக்கேற்ப வாழும் போது, நாம் ஒளியிடம் வருகிறோம். நமது பாவங்களால், நாம் குற்ற உணர்வுக் குறைந்து, சுயக் கெளரவம் அதிகமாகி , பாவசங்கீர்த்தனம் செய்வது செல்வதில்லை நாம். குற்ற உணர்வு, நாம் மனம் திரும்பி, மாற்றம் அடைவதற்குப் பெரிய தூண்டுதலாக இருக்கும். நாம் நமது பாவங்களை நினைத்து அவமானம் அடைகிறோம், அதனால், நமது பாவங்கள வெளியே தெரிந்துவிடும் என நாம் பயப்படுகிறோம்.

எனினும், இயேசு, நம் சுயகெளரவத்தையும், நமது பயத்தையும், போக்க நாம் அனுமதித்தால், இயேசு அதனையெல்லாம் போக்கி மகிழ்ச்சித் தருவார். குருவானவர் மூலமாக இயேசு நம்மிடையே பேசி, மன்னிப்பையும், இரக்கத்தையும், நிபந்தனையற்ற அன்பையும் நமக்கு வழங்குகிறார். இன்றைய நற்செய்தியில்,இயேசு "உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்."என்றும், அவர்மீது நம்பிக்கைக் கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை" என்றும் நினைவூட்டுகிறார்.

நாம் நமது குற்றங்களை ஒத்துக் கொள்ளும்போது, கிறிஸ்துவின் பணியாளிடம் (குருவிடம்) சொல்லும்போது, நாம் இயேசுவினால் காப்பாற்றப்படுகிறோம். குருவின் குரல் மூலம், இயேசு நம்மிடம் பேசுவதைக் கேட்கிறோம். மேலும் பாவங்களைச் செய்யாமல் இருக்க இயேசுவிடமிருந்து, ஆற்றலைப் பெறுகிறோம். இருளிலேயே ஏன் இன்னும் துன்புற்று இருக்க வேண்டும்? இயேசு நம்மை மீட்க வந்துள்ளார்! என்பதை உணர்ந்து முழுமனமாற்றத்தைப் பெற இறைவனை இறைஞ்சுவோம்.


வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும் தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார். கல்தேயரின் மன்னன் வழியாக கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்தார். கடவுள் தன் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று உரைக்கும் முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். 


பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 137:1-2, 3, 4-5, 6.
பல்லவி: 'உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!"

பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். -பல்லவி

ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ' சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். -பல்லவி

ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம்; பாடுவோம்? எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! -பல்லவி

உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபேசியர்களுக்குப் புனித பவுல் எழுதிய கடிதத்தில் கடவுளுடைய அன்பும், தாராள மனப்பான்மையும், மிகுந்த இரக்கத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மிகுந்த இரக்கமுடைய கடவுள் நம்மீது அன்புக் கொண்டதால் நாம் மீட்கப்பட்டோம். நாம் கடவுளின் கலைப்படைப்பு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம். முற்றிலும் கடவுளுடைய ஒப்புயர்வற்ற அன்பின் கொடைகள் இவைகள்! என்று உரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்:


"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்".


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. நாங்கள் நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இன்றைய வாசகங்கள் மூலம் உணர்த்திய அன்பும் அருளும் மிக்க எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் இத்தவக்காலத்திலும் அதன் பின்பும் நாளுக்கு நாள் நற்செயல்கள் புரிவதில் வளர அன்பையும் அருளையும் நிறைவாய் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.  நிலைவாழ்வை வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

3.கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

4.நல்ஆலோசனை கர்த்தரே! எம் நாட்டில் நிலவும் அரசியல், பண்பாடு, மொழி, இனவேறுபாடுகள் வேரறுக்கப்பட்டு உம் மதிப்பீடுகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் சேர்ந்த நல்ல ஆட்சி அமைக்க தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

5.நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளைனோரை பாதுகாத்து உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment