Friday, July 9, 2021

பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு - ஆண்டு 2

     பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு - ஆண்டு 2

 

See the source image

இன்றைய வாசகங்கள்


ஆமோஸ் 7: 12-15
எபேசியர் 1:3-14
மாற்கு 6: 7-13

திருப்பலி முன்னுரை


இறைஇயேசுவில் அன்பார்ந்தவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு ஆன இன்று நாம் அனைவருமே இறைவாக்கினர்களாக, இறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்கள் தாம் என்று உணர்த்துகின்ற இன்றைய வாசகங்கள், நம் அனைவருக்குமே தேவையான பாடங்களைச் சொல்லித்தருகின்றன. கவனமாகப் பயில முயல்வோம்.

போலி இறைவாக்கினர்கள் மத்தியில் ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு, வாழ்வைத் தேடுவது வேறு என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்க்கைப்பாதையைப் பிறருக்கும் காட்டிவரும் இறைவாக்கினர்கள் இன்றும் நம் மத்தியில் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இருவராய் இப்பணிகளில் ஈடுபடும்போது, ஒருவர் தன்னையே வானளாவ உயர்த்திக் கொண்டால், அடுத்தவர் அவரைப் பத்திரமாக மீண்டும் தரைக்குக் கொண்டுவர முடியும். சுயநலத்தில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகியுள்ள நம் உலகிற்கு, இணைந்துச் செயல்படுவதாலேயே சாதிக்க முடியும் என்று இயேசு சொல்லித்தரும் இந்தப் பாடம் மிகவும் தேவை.

காலில் படிந்த தூசியைத் தட்டுவது போல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களைத் தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு நம்மை இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பை ஏற்று இறைவனின் பணியாளராய் வாழ உறுதி கொண்ட நெஞ்சமும், அன்பு நிறை உள்ளமும் வேண்டி இத்திருப்பலியில் இறைவனை இறைஞ்சிடுவோம் வாரீர் உறுதியுடன்....

வாசக முன்னுரை


முதலாம் வாசக முன்னுரை

 
 முதல் வாசகத்தில் தகுதியற்றவர் இறைஅழைப்பை ஏற்றக்கொண்டபின் அவருக்குக் கிடைக்கும் ஞானத்தையும் ஆற்றலையும் துணிவையும் இறைவன் அவர்களுக்கு அளித்துப் பணிவாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும், ஆடுமேய்ப்பவனையும் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினராக மாற்றிய அற்புதத்தையும் ஆமாஸ் இறைவாக்கினர் நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 85: 8-9. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


பாமரமக்களே கிறிஸ்துவுடன் இணைந்தபின் ஆற்றலும் திறைமையும் உடையவர்களாக மாறினார்கள். நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றும் முன்னே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். இவ்வார்த்தைகளே மனதில் பதிவு செய்து இன்றைய இரண்டாம் வாசகம் புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தை வாசிக்கக் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!  அல்லேலூயா.
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

   
திருச்சபைக்காக:
பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டு ஆற்றலும், திறமைகளும் நிறைந்தவர்களாக மாறப் போதுமான வல்லமை இவர்களுக்கு பொழிந்து இயேசுவின் இறையரசு மண்ணகம் கண்டிட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

நாட்டிற்காக:
உலக நாடுகளின் இராஜாதி ராஜனே! எமது நாட்டு அரசியல் தலைவர்கள் ஊழலை ஓழிப்பபதாகக் கூறி வந்தவர்கள் அனைவரும் ஊழலில் மூழ்கி மக்களை மறந்துத் தங்களைப் பற்றியே நினைக்கும் நிலை மாறிப் புதிய சமுதாயத்தை எம் நாட்டில் உருவாக்கிடவும், தொற்றுநோயிலிருந்து விடுவிக்கவும், மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்திடவும் அவர்களுக்கு நல் மனம் தந்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:
எமக்குப் புத்துயிர் அளிக்கும் எம் அன்பு நேசரே! இறைவா! உமது நற்செய்தியின்படி இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப மனமாற்றத்தை ஏற்படுத்த எங்களை உம் அன்பு சீடர்களாய் இவ்வுலகில் அனுப்பும். அதையே உம் அன்பு கட்டளையபாக ஏற்று அதன்படி இன்றைய சூழலில் வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.
 
இளைய சமுதாயத்திற்காக :
கரிசனை அன்பு கொண்ட எம் இறைவா! உமது பிள்ளைகள் எழுந்து ஒளிவீசிடத் தடையாக உள்ள தொற்றுநோய் உலகமெங்கும் நிறைந்து, சிறுகுழந்தைகள் தொடங்கிச் சமுதாயத்தின் அனைத்து மக்களை ஆட்டிப்படைக்கும் வேளையில் தங்கள் வாழ்க்கையில் நிலைத் தடுமாறும் நிலை உள்ள இன்றைய இளைய சமுதாயம் காப்பாற்றப்படவும், அவர்கள் உமது நேரிய இறையரசு பாதையில் பயணித்திடவும், அனைவரும் நோயிலிருந்து காக்கப்படவும்  இறைவா உமை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment