Sunday, July 18, 2021

பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு ஆண்டு-2

 

 பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு ஆண்டு-2


 இன்றைய வாசகங்கள் :


2அரசர்கள் 4: 42-44
எபேசியர் 4: 1-6
யோவான் 6: 1-15

திருப்பலி முன்னுரை :


அன்பார்ந்த இறைமக்களே!
பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறுத் திருப்பலியில் அன்பின் பகிர்வைப் பெற்றிட தெய்வத்தின் திருவடிகள் நாடி வந்துள்ள அனைவருக்கும் இறைஇயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்.

இன்று பகிர்தல் என்னும் அழகிய பண்பை இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு கற்றுத் தருகிறார். பாலை நிலத்தில் தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு விருந்துப் பரிமாறச் சொல்கிறார் இயேசு. இயேசுவின் அந்த ஆர்வத்திற்கு எதிராக, கேள்விகள் எழுகின்றன, ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் தந்த உணவு அங்கு நிகழ்ந்த அற்புதத்தைத் துவக்கிவைத்தது.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தார் என்பது, புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு, மக்களைப் பகிரச் செய்தார் என்பதை, நாம் இங்கு மாபெரும் ஒரு புதுமையாகப் பார்க்கலாம். பயன்படுத்தியது போக, மீதியைப் பாதுகாப்பதும் நமது கடமை என்று இயேசு ஆற்றிய புதுமையின் இறுதிப் பாகத்தில் சொல்லித் தருகிறார்.

நாம் வாழும் இன்றைய உலகில் இந்தப் பகிர்வுப் புதுமை அதிகம் தேவைப்படுகிறது. வளங்கள் பலவும் நிறைந்த இன்றைய உலகில் இன்றும் கோடான கோடி மக்கள் பசியிலும் பட்டினியிலும் தொற்றுநோயினாலும் மடிகின்றார்கள். இந்தத் தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்கவேண்டும்.

சிறுவன் வழியாக, இயேசு சொல்லித்தரும் பகிர்வு என்னும் அற்புதக் குணத்தைக் கற்றுக்கொள்ள நமக்கு இறைவன் பணிவான மனதைத் தரவேண்டுமென்று இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரைகள்


முதல் வாசக முன்னுரை :

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகத்தில் எலிசா இறைமகன் இயேசு நிகழ்த்தவிருந்த அற்புதச் செயலுக்கு முன்னோடி இருந்தார். இருபது வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவு அளித்தார். அதன் பின்பு ஆண்டவர் வாக்களித்தபடி மீதி உணவு இருப்பதைக் கண்டார்கள். இந்த வாக்குமாறத் தெய்வத்தின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம். அவரில் நம்பிக்கைக் கொள்வோம்.

பதிலுரைப் பாடல்


பதிலுரைப்பாடல்: திபா. 145: 10-11, 15-16, 17-18
பல்லவி:  ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.  பல்லவி

பல்லவி எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.  பல்லவி

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர் தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.  பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்காகக் கைதியாக இருக்கும் திருத்தூதர் பவுல் நம்மை நாம் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப வாழும்படி வேண்டுகோள் விடுக்கின்றார். அனைத்துக் கிறிஸ்தவ நற்பண்புகளையும் கடைப்பிடித்துத் தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டை நாம் காத்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுல் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா!  நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.   அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. எம் தாகம் தீர்க்கும் அன்பின் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் பகிர்ந்துச் செயல்பட ஆரம்பிக்கும்போது இறைவனும் நம்மோடு இணைந்து செயல்படத் தொடங்குகிறார் என்பதை உணர்ந்து எமது உழைப்பையும், பகிரும் மனநிலையாலும் எம் வழியாய் நற்செய்தியைப் பரப்பிட அருள்வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அரவணைக்கும் அன்பின் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் தனிப்பட்ட துறையில் "எனக்கோ எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், மற்றவரோடு பகிராமல் சுயநலமாக உள்ளேனா?" என்று தங்களைப் பற்றி ஆய்வு செய்து எமக்கு அடுத்திருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை உதவிகள் தேவையான இக்காலத்தில் இறைவன் நமக்குத் தரவேண்டும் இறைவா உம்மை என்று மன்றாடுவோம்.

3. இன்றைய நற்செய்தியிலே வரும் சிறுவனைப் போல, எலிசாவிற்குக் கீழ்ப்படிந்தப் பணியாளனைப் போல உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு மேல் உள்ளதை ஏழை எளியோருடன் பகிர்ந்தளித்து வறுமையும் தொற்றநோயும் இல்லாத எதிர்காலத்தைச் சிறப்பாக அமைய வேண்டிய தாராள மனதினைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பண்பாளரே எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்துப் பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப்போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திட, தொற்றுநோய் காலத்தில் அனைவரையும் அணைத்து செல்ல வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் அன்பு தந்தையே இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் "எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே" என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், எதிர்காலம் கேள்விகுறியதாக இருக்கும் காலகட்டத்தில் உம் அருளால் அதனைச் சிறப்பாக வெற்றிக் கொள்ள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 www.anbinmadal.org


No comments:

Post a Comment