Wednesday, August 11, 2021

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி 

வாசகங்கள். 

1. நீதிமொழிகள் 9:1-62.
2.எபேசியர் 5:15-20
3.யோவான் 6:51-58 

திருப்பலி முன்னுரை: 

இறைஇயேசுவில் அன்பு வாழ்த்துக்கள்! நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். உண்மையான அழியாத உணவை தேர்ந்துக்கொள்ள இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது.

 அறிவிலியாக இல்லாமல் விவேகமுள்ளவர்களாக வாழ அழைக்கின்றது ஞானம். பகுத்து உணரும் பண்பை அணிந்து கொள்ளுங்கள். அதுதான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நமக்கு துணை நிற்கும் என்று பவுலடியார் சுட்டிக் காட்டுகிறார். ஆம் அன்பர்களே! இறைமகன் இயேசுவின் தன்னையே அழியாத உணவாக நமக்கு தருகிறார். இத்திருவுடலை உண்டு இரத்தத்தைக் குடிப்பது என்பது நற்கருணை உட்கொள்வது மட்டுமல்ல, இயேசுவின் உணர்வுகளையும், மதிப்பீடுகளையும் உள்வாங்கி அதற்கேற்ப வாழ்வை மாற்றிக் கொள்வதற்கு நம்மை அழைக்கிறார்.

 கடவுளின் கொடைகளில் ஒப்பற்ற மிக மேலான கொடை ஒன்று உண்டு என்றால் அது நற்கருணை மட்டுமே. இத்தகைய கொடையின் அருமை பெருமைகளை உணர்ந்து இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாருங்கள் இறைமக்களே! 

வாசகமுன்னுரை: 

முதல் வாசக முன்னுரை

முதல் வாசகத்தில் இறைவனின் ஞானம் நம்மை அறிவிலிகளாய் இராமல் ஞானமுள்ளவர்களாக வாழ அழைக்கிறது. அதுபோல மதிகேடர்களையும் தான் கட்டிய வீட்டிற்கு வந்து விருந்துண்ண அழைக்கிறது. வாழ்வைச் சுவைக்க புத்தியுடன் ஞானமும் தேவை என வலியுறுத்தும் நீதிமொழிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்திற்கு செவிமெடுப்போம். 

  பதிலுரைப் பாடல் 

திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14 

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். 

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி 

ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. -பல்லவி 

 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? -பல்லவி 

அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. -பல்லவி

இரண்டாம் வாசக  முன்னுரை

இரண்டாம் வாசகத்தில் இந்த நாட்கள் பொல்லாதவை. காலத்தை முற்றும் பயன்படும் முறை அறியவும், தாறுமாறான வாழ்வுக்கு வழிவகுக்கமால் பார்த்து கொள்ளவும், ஆவியால் ஆட்க்கொள்ளப்பட்டு இயேசுவின் பெயரால் கடவுளுக்கு நன்றி கூறி ஞானத்துடன் வாழ அறிவுரைகளை எபேசியர் திருமுகத்தின் வழியாக பவுலடிகளார் இங்கே பதிவு செய்கிறார். கவனமுடன் கேட்போம். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

 ஞானமுள்ளவர்களாக வாழ எங்களை அழைக்கும் அன்பு இறைவா! பொல்லாத காலத்தில் தவிக்கும் திருச்சபையை திறம்பட நடத்திச் செல்ல எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் ஞானத்தையும் விவேகத்தையும் கொடுத்து இயேசுவின் விழுமியங்களைக் கடைப்பிடித்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

கரிசனை அன்பு கொண்ட எம் இறைவா, தெளிவில்லாத அரசியல் சூழல் காரணமாக பரிதவிக்கும் எம் மக்களுக்கு ஞானத்தையும், விவேகத்தையும் அளித்து, எதிர்வரும் பொல்லாத காலத்தை சமாளிக்கவும், என்றும் மறவாமல் உமக்கு நன்றி கூறும் நல்ல உள்ளத்தைத் தருமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் இறைவா.. 

நற்கருணை வழியாக எங்கள் மத்தியில் வாழும் இறைமகன் இயேசுவே! நாங்கள் உமது அன்பின் கட்டளைகளை கடைபிடித்து நிறைவாழ்வு தரும் உணவாகிய உமது சதையையும், இரத்தத்தையும் நீர் எமக்கு அளித்த உன்னத கொடை என்பதை உணர்ந்து, அந்த அன்பை எமக்கு அடுத்திருப்பவருடன் பகிர்ந்து, இணைந்து வாழ வழிநடத்திமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.. 

  உலகை மனிதனுக்காக படைத்த அன்பு இறைவா! நீர் படைத்த வளங்கள் நிறைந்த இவ்வுலகில் வாழ்வது கொஞ்கக்காலம் என்று, பேராசையால் தானே எல்லாவற்றையும் அனுபவிக்காமல் உலகின் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினருக்கும் விட்டுக்கொடுத்து வாழவும், இவற்றின் வளங்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள நல்ல ஞானத்தை தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment