ஆண்டவரின் திருமுழுக்கு விழா
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எசாயா 40:1-5,9-11
தீத்து. 2:11-14,3:4-7
லூக்கா 3: 15-16,21-22
திருப்பலி முன்னுரை:
ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்கு விழா. இறைமகன் இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர். இப்பொழுதுப் பொதுவாழ்வில் நுழையும் முன் அவருக்குத் தேவைப்பட்டது தூய ஆவியாவனர் ஆற்றலும், துணிவுடன் தன் மூன்று ஆண்டுக் காலப் பொது வாழ்வில் மக்களைச் செம்மைப்படுத்த, தந்தையாம் கடவுளின் அருளும் தேவைப்பட்டபோது, அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறும் வேளையில் ஆவியானவர் இறங்கி வர, தந்தை தன் ஓரே மகனிடம் புரிப்படைவதையும் வானத்திலிருந்து கேட்டக் குரலொலிச் சுட்டிக்காட்டுகின்றது.
திருமுழுக்கு பெற்ற நாம் இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை:
முதல் வாசகமுன்னுரை:
இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா மூலமாகக் கடவுளின் அன்புக் கட்டளைகளுக்கு வாழ மறுத்து அந்நியநாடுகளில் ஊதாரியாக அலைந்து திரிந்த மக்களுக்குக் கடவுள் புது வாழ்வை அறிவிக்கின்றார். மன்னிப்பும் வழங்குகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார் என ஆறுதல் மொழிகளைத் தருகிறார். இறைவனின் இரக்கமும் அன்பும் நிறைந்த இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசகமுன்னுரை:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்த தம்மையே ஒப்படைத்தார். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் என்ற இறைஇயேசுவின் இரக்கத்தைப் பதிவுச் செய்யும் திருத்தூதரின் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்:
திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
1. என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். -பல்லவி
2. நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். -பல்லவி
3. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. -பல்லவி
4. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. -பல்லவி
5. நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. நலம் தரும் புத்தாண்டை அளித்த இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம் கனிவானத் தந்தையே இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே இறைவா! எம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா! எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.கருணையே வடிவான எம் இறைவா! கிறிஸ்துவத்திற்கு எதிராய் உலகெங்கும் செயல்படும் மக்களைக் கண்ணோக்கும். அவர்கள் மனமாறி தங்கள் வன்முறையிலிருந்து விடுபட்டு, தனிமனித உரிமைகளை மதிக்க, அவர்களுக்கு நல்மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
No comments:
Post a Comment