Monday, May 23, 2022

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபிரேயர் 9: 24-28

லூக்கா 24 :46-53

திருப்பலி முன்னுரை:

 
அன்பு சகோதர சகோதரிகளே! ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒருமனப்பட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் குழுமியிருக்கும் அனைவருக்கும் எல்லாப் பெயர்களிலும் மேலான இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாற்பது நாட்களின் உடனிருப்பு முடிவுப்பெறும் வேளையில் தம் சீடர்களை அழைத்து, தனக்குப் பின் தந்தையின் இறையாட்சியை எப்படித் தூதுரைக்க வேண்டும்? அவர்களின் சாட்சியவாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்றும், அதற்குத் துணையாகத் தூய ஆவியாரின் வல்லமை மிகுந்த ஆற்றலைப் பெற்றுக் கொண்டு உலகின் கடைசி எல்லை வரை அறிவித்ததை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அண்ணாந்துப் பார்த்து நின்றச் சீடர்கள் வீறுக்கொண்டு எழுந்து, நிறைவாழ்வை இவ்வுலகில் முன் நிறுத்தி, உலக மாந்தர்கள் அனைவரையும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் மாற்றியது போல, நாமும் இயேசுவின் ஆற்றலால் இத்தகைய நற்செயல்களைச் செய்திட, அதனால் நாம் எதிர் நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்ள, இறைஇரக்கத்தின் திருமுகமாம் இயேசுவின் அருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள் மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களைத் துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் வலிமை மிக்கத் தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். வேறு எப்பெயருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். இவைகளை உணர்ந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! என்ற இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
 

நம்பிக்கையாளரின்மன்றாட்டுகள்:

1.இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஆண்டவர் இயேசுவின் ஆற்றலைப்பெறு இவ்வுலகில் அவரின் விழுமியங்களை உலகமெங்கும் சான்றுப் பகர, அவர் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்துக் காட்டிட எங்களுக்குத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2உறவை வளர்க்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சிப் பறைச்சாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமையாளும் அன்பின் அரசே! இறைவா! உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். உமது பணியின் நிமித்தம் துன்பப்படும் உமது ஊழியர்களையும் மற்றும் உம்மை ஏற்றுக் கொண்ட மக்களையும் பாதுகாத்து, அவர்களை இறைநம்பிக்கையில் வேருன்றி வளர்ந்திடவும், அவர்களைத் துன்புறுத்துவர் மனமாறி நல்ல வழியில் நடத்திடவும் உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் வாழ்வின் ஒளியும் வழியுமாய் இருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. வாழவளிக்கும் வள்ளலே எம் இறைவா! எங்கள் ஒன்றிய அரசும் மற்றும் மாநில அரசும் உமது விழுமியங்களை ஏற்று அனைவருக்கும் வளமான நலமான வாழ்வை அளித்து அனைத்து மக்களும் ஏற்றம் பெற உழைத்திட நல்மனமும் ஞானத்தையும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment