Monday, December 12, 2022

 திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு 18/12/2022

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 7:10-14
உரோமையர் 1:1-7
மத்தேயு1:18-24

திருப்பலி முன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு -அமைதியின் ஞாயிறு. இறைவனின் ஆசீரை நாடி அவரின் இல்லம் வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.

திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் மெழுகுதிரி 'அமைதி' என்ற மதிப்பீட்டைக் குறிக்கிறது. இயேசுவின் வாழ்க்கை 'அமைதி' என்ற வார்த்தையில் தொடங்கி, அதே வார்த்தையில் நிறைவு பெறுவதாக இரக்கத்தின் நற்செய்தியாளர் லூக்கா எழுதுகின்றார். இயேசுவின் பிறப்புச் செய்தி இடையர்களுக்கு அமைதியின் செய்தியாக வழங்கப்படுகிறது. தான் விண்ணேற்பு அடையும் முன் இயேசு தன் சீடர்களுக்குத் தன் அமைதியை விட்டுச் செல்கின்றார்.

இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வில் உடல் நலம் பொங்கியது. உள்ள அமைதிப் பொங்கியது. உயிர்ப்புப் பொங்கியது. உன்னத வாழ்வு பொங்கியது. இதே இயேசு நம்மையும் சந்திக்க வருகிறார். நாம் தயாராக உள்ளோமா?

'நமக்காக, நம்மோடு அவர்' என்பதே அவரின் வாக்குறுதி. எனவே அவர் தரும் அமைதியான நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்க, அவரைச் சந்திக்கத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் அமைதி என்றும் நம்மில் நிலைப் பெறுமே!

 வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் யூதா நாட்டைப் போர் மேகம் சூழ்ந்திருக்கும் நேரத்தில் ஆகாசு அரசன் அமைதி இழந்தச் சூழலை வாசிக்கின்றோம். வெளியிலிருந்து வந்த பகைவர்களால் தன் அமைதியை இழந்தார் ஆகாசு. ஆண்டவரிடம் அடையாளம் கேட்கத் தயங்கிய ஆகாசுக்கு 'இம்மானுவேல்' எசாயா மூலம் அடையாளம் தரப்படுகிறது. கடவுள் நம்மோடு என்றால் நம் செயல்கள் கடவுளுக்குரிய செயல்களாக இருக்க வேண்டும். இதனை மனதில் கொண்டு இவ்வார்த்தைகளை அமைதியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்: மாட்சிமிகு மன்னர் இவரே.
திருப்பாடல்: 24:1-2. 3-4. 5-6
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை: நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்: ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே. பல்லவி

ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்: பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: பல்லவி

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் அருளும் அமைதியும் உரித்தாகுக என்று உரோமை வாழ்மக்களை வாழ்த்திடும் திருத்தூதர் பவுல் இறைமகன் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அனைத்து இனத்தவரையும் இயேசுகிறிஸ்துக்கு உரியவர்களாய் இருக்க அழைக்கவிடுக்கிறார். இறைவாக்கினர் வழியாக நற்செய்தியைத் தருவதாகத் திருமறை நூலில் வாக்களித்திருந்தார் இறைவன். அந்த நற்செய்தியே மீட்ராம் இயேசுகிறிஸ்து என்பதை உணர்ந்து அமைதியுடன் இவ்விரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. என் இதய தெய்வமே! அமைதியின் இறைவா! உமது வருகையை எதிர்நோக்கியுள்ள உம் திருஅவையில் நீர் தரும் அமைதியைத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் பெற்று மகிழவும், அந்த அமைதியை இவ்வுலகம் பெற்றிட அனைவரும் இணைந்துச் செயல்பட உமது உடனிருப்பையும், சேவைமனப்பான்மையையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நேர்மையின் சிகரமே எம் இறைவா!  எம்குடும்பங்களில் அனைவரும் 'யோசேப்பு போல் நேர்மையாளராய், வெளியே இருந்து கொடுக்கப்பட்ட சட்டத்தையும் தாண்டிய மனச்சான்றின் சட்டத்தையும், சக மனிதரின் மாண்பையும் உயர்வாக நினைக்கின்ற நல்ல இதயத்தையும், சுயநலமற்று உறவுகளைப் போற்றிட வளர்த்திட வேண்டிய நல்வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் காக்கின்ற எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எம் இளையோர் சட்டங்களையும் தாண்டித் தங்கள் மனச்சான்றுக்கும், பிறரது மாண்புக்கும் மதிப்புக் கொடுத்து, அதன்படி நலமும் வளமும் அருளும் உம்முடைய உண்மை ஊழியர்களாய் எம்சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை நீக்கி உழைத்திடும் சேனையாய் மாறிட வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எந்நாளும் எங்களோடு இருக்கும் இறைவா! உலகெங்கும் திக்கற்றவர்களாய் பல்வேறு காரணங்களால் தவிக்கும் உம் மக்களைக் கண்ணேக்கியருளும். அவர்களின் தேவைகள் நிறைவுப் பெற்றவும், வரவிருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாடங்களில் நிறைவான மன அமைதியைப் பெற்றுத் தாங்கள் இருக்குமிடத்தில் முழுஅங்கிகாரம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org
 
Print Friendly and PDF

No comments:

Post a Comment