Tuesday, April 11, 2023

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 16.04.2023

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 16.04.2023

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 2:24-47
1பேதுரு 1:3-9
யோவான் 20:19-31

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறும் இறைஇரக்கத்தின் ஞாயிறுமான இன்று உள்ளத்தில் எழும் ஐயங்கள் நீங்கி இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளவும், பகிர்ந்து வாழ்ந்திடவும் நம்மை அழைக்கின்றது. இயேசுவின் வார்த்தைகளை அருகிலிருந்து கேட்டுணர்ந்தச் சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து நடுங்கி முடங்கிக் கிடந்தபோது, மகதலா மரியா இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை அறிவித்தும்,  நம்பிக்கையில்லாக் கோழைகளாக இருந்த தம் சீடர்களைக் காண, அவர்களைத் தேற்ற, இயேசு அவர்கள் முன் தோன்றித் தன் சமாதானத்தை அளிக்கின்றார். இரக்கத்தின் தேவனாகிய இயேசு அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஒளியை ஏற்றித் தான் இரக்கத்தின் தேவன் என்பதை உணர செய்தார். தோமாவின் ஐயம் களையப்பட்டபோது உயிர்ப்புக்கு அடித்தளம் கிடைத்தது. அவர் அவரோடு தன்னை இணைத்துக் கொண்டார். இறுதி மூச்சுவரை அவருக்காய் சாட்சி பகிர்ந்திடும் உறுதியான உள்ளத்தின் உந்துத்தால் நம் இந்திய நாட்டில் இறைசாட்சியாக மரிக்க முடிந்தது.

ஐயம் தவித்து நம்பிக்கைக் கொண்டவர்களாய், அச்சம் நீங்கி ஆனந்தம் அடைந்தவர்களாய், கண்டவர்களைவிட காணாமல் நம்புகிறவர்களாய், பகிர்ந்துண்டு வாழும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாய், இறைஇரக்கத்தைப் பெற்றவர்களாய் வாழ்ந்திட சமாதானத்தின் தேவனாம் உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

நம்மில் விசுவாசம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளத் திருத்தூதர்பணிகள் நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகம் எடுத்துக்காட்டுகிறது. ஆதிகிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் போதனைகளுக்குச் செவிமெடுத்தார்கள். கூடிச் செபித்தார்கள். அப்பத்தைப் பிட்பதிலும் இறை வேண்டலிலும் உறுதியாக இருந்தார்கள். தங்கள் உடமைகளை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தனர். பகிர்வதே கிறிஸ்துவ வாழ்வு என்று வலியுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

உயிர்ப்பு அனுபவம் ஆதி கிறிஸ்தவர்களின் தனிநபர் அனுபவமாக மட்டுமில்லாமல், அது அவர்களின் குழுவாழ்விலும் செயல்வடிவம் பெற்றது. ஆகையால்தான், 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் அவர்கள் உறுதியாய் நிலைத்திருந்தனர். இதனால் அவர்கள் பொன் போன்று புடமிடப்பட்டார்கள். எனினும் நம்பிக்கைக் கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள் என்று எடுத்துக்காட்டும்  பேதுரு எழுதிய இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பை பெறுக்கொள்ள அழைக்கின்றது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்று தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் உறவுகள் மேன்பட்டு, வரவிருக்கும் நாட்களில் எங்கள் குடும்ப ஒற்றுமையால் உயர்ந்திடவும் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! வாழ்வில் நம்பிக்கை இழந்த எம்விவசாயபெருமக்களின் வாழ்வாதரங்கள் சிறப்படையவும், அவர்கள் மனித நேயத்துடன் நடத்துப்படவும், இயற்கை வளங்கள் காக்கப்படவும் தேவையான அரசியல் ஞானத்தை எம் ஆட்சியாளர்களுக்குக் கொடுத்து, உமது அன்பின் விழுமியங்கள் வெற்றிபெறத் தேவையான உமது இரக்கத்தைப் பொழிந்து, அவர்கள் மனம் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! இன்று திருச்சபைக் கொண்டாடும் இறைஇரக்கத்தின் நாளின் பொருளுணர்ந்திடவும், உலகில் குறைந்துகொண்டேபோகும் சகிப்புத்தன்மை உமது இரக்கத்தால் உயர்ந்திடவும், உலகமாந்தர்கள் அனைவரும் தமக்கடுத்திருப்போரை அன்பு செய்து, நீர் கொடுத்த அமைதிப் பகிர்ந்திடும் நலமனம் கொண்டவர்களாய் வாழ்ந்திட உமது பேரிரக்கத்தை இறைஇரக்கத்தின் தினமான இன்று எங்களுக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

www.anbinmadal.org


Print Friendly and PDF

3 comments: