Tuesday, July 11, 2023

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2023

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 55:10-11
உரோமையர் 8: 18-23
மத்தேயு 13: 1-23

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு. நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற 'விதை விதைப்பவர் உவமையை இன்று கேட்க அழைக்கப்பட்டுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி, கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. கதைகளுக்குள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.
புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. உவமைகள் தானே, கதைகள் தானே என்று ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, 'விதை விதைப்பவர் உவமையின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார்.
விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்கு இன்றைய திருப்பலி வழியாகத் துணைப் புரிவாராக!


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

மழையும் பனியும் நிலத்தை நனத்து எல்லோருக்கும் பலன் தராமல் திரும்பப் போவதில்லை. அதைப் போலவே நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிப்பதை கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப்பால்

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல்: 65:9.9-10.11-12.13

மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி

நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி

 
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை
பவுலடியார் இரண்டாம் வாசகத்தில், துன்புறுவதும் அழிவதும், உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார். விதைகள் மண்ணில் விழுந்து மடிந்துத் தான் புதிய செடியாக மாறுகிறது. மீட்பு, துன்பத்திலும், மரணத்திலும் இருந்து வருகிறது. கடவுள் நமக்குத் தூயஆவியின் வழியாக மீட்பைத் தருகின்றார். நாம் நம்மையே இந்தத் திட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டு, கடவுளிடம் வேண்டி, நம்மை வளர்த்துக் கொண்டால் தான், நாம் முழுமையாகப் பலன் தருவோம். இக்கருத்துகளை மனதில் இருத்தி,  இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அருள் வளங்களின் ஊற்றாகிய எம் இறைவா! விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை என்பதை திருஅவையில் உள்ள அனைவரும் உணர்ந்து உம் வார்த்தைகளை வாழ்வாக்கிடவும் இதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கின்ற உம் மகன் இயேசுவின் சீடர்களாய் உழைத்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. மகத்துவமிக்க எம் இறைவா! இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் நிலைவாழ்வுக்கான விளைச்சல்! என்ற கருத்துகளை எங்கள் குடும்பங்களில் செயல்படுத்த உம் ஆவியின் அருள்வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களைக் கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்துச் சுயநலமற்ற சேவைகளில் ஈடுபடவும், மக்களின் குறைத்தீர்த்து, நல்லாட்சித் தந்திடவும் வேண்டிய வரத்தைத் தர உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆற்றல் மிக்க எம் இறைவா! எம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களை நல்ல விளைநிலங்களாக மாற்றி நூறுமடங்கு பலன்களை அளிக்குமாறு செய்து தங்கள் குடும்பத்திற்கும், இச்சமுதாயத்திற்கு ஏற்றமிகு நல்வாழ்வையும், இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை விதைப்பவர்களாகவும் இவ்வுலகில் வலம் வரத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment