Sunday, July 30, 2023

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 06.08.2023

 பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 06.08.2023




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

தானியேல் 7: 9-10,13-14
2 பேதுரு 1:16-19
மத்தேயு 17: 1-9

திருப்பலி முன்னுரை.

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு. இயேசுவின் தோற்ற மாற்றம் விழா கலந்து கொண்டு இயேசுவைப் போல் நாமும் மாட்சிமை மிகுந்த மாற்றம் அடைய விரும்பி இவ்வாலயதிற்கு நல்வரவுத் தந்துள்ள அனைத்து இறைமக்களை அன்புடன் இனிதே வரவேற்கிறோம்.
இன்றைய நற்செய்தி நிகழ்வான இயேசுவின் தோற்றமாற்றத்தைப் பற்றி எல்லா நற்செய்தியாளர்களும் இயேசு எருசலேம் செல்லும் வழியில் இந்நிகழ்வு நடந்த்தாகவும் இயேசு தம் பாடுகளை முன் அறிவித்தபின்பு இந்நிகழ்வு நடந்த்தாகும் கூறியிருப்பது சற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். துன்பத்தின் முடிவில் இன்பம் உள்ளதைத் தோற்றமாற்ற நிகழ்வு நமக்கு வெளிப்படுத்துகின்றது. சிலுவையின்றி உயிர்ப்பு இல்லை. அதுபோல் துன்பமின்றி மகிழ்ச்சி இல்லை.
இயேசு எந்த அளவுக்கு இறைத்தன்மையோடு விளங்கினாரோ அதே அளவு மனித் தன்மையோடு விளங்கினார். நமக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் அவருக்கு இருந்தன. அவரும் தன் வாழ்வில் ஒரு சராசரி மனிதனாக இன்பத் துன்பங்கள் வேதனை, சோதனைகள், மனக்குழப்பம், விருப்பு வெறுப்புகள் என்றும் அனைத்தையம் எதிர்கொண்டார்.
இயேசு தந்தையோடு செபவாழ்வில் ஒன்றித்திருந்ததே அவரின் வெற்றிக்குக் காரணம். எனவே நாமும் இத்தைகையச் செபஉறவில் தந்தையோடு நிலைத்திருந்து இயேசுவின் பாதையில் வழி நடந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை.

முதல் வாசக முன்னுரை.

இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இரவில் தான் கண்டக் காட்சிகளைப் பற்றி விவரிக்கின்றார். இன்றைய நற்செய்தி நிகழ்வுகளுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் மானிட மகன் அங்கு வரப்பட்டதும், அவருக்கு ஆட்சியுரிமையும் மாட்சியும் வழங்கப்பட்டது மற்றும் அவரது உடை வெண்பனி போலவும் இருந்தது எனப் பல நிகழ்வுகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்.

உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
திருப்பாடல் 97: 1-2. 5-6. 9
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி.
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி.
ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி.

இரண்டாம் வாசக முன்னுரை.

இன்றைய இரண்டாம் வாசகம் இன்றைய நற்செய்தி ஆண்டவரின் தோற்றமாற்றத்திற்குச் சாட்சியாக அமைகின்றது. ஏனெனில் திருத்தூதர் பேதுரு தன் காட்சிகளை மக்களுக்கு “பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அஃது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது” என்று விவரிக்கின்றார். தந்தை தன் மகனில் பூரிப்படைந்ததையும், அவர்கள் கண்ட மாட்சிமையையும், இறைவாக்கினர்களின் கூற்று மெய்யானது என்று மகிழ்வுடன் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி.

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் அல்லேலூயா!.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்.

1. மகிமையும் மாட்சியும் நிறைந்த எம் இறைவா! கிறிஸதுவும் தன் மனிதவாழ்வில் எதிர்கொண்ட இன்பதுன்பங்கள், விருப்புவெறுப்பு, வேதனைகள், சோதனைகள் அனைத்தையும் இறைவேண்டல் மூலம் எப்படி வென்றாரோ போல உம் திருஅவையை வழிநடத்தும் எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் உமது இறைஆசியாலும் தமது இறைவேண்டுதலாலும் இயேசுவின் மகிமையிலும் மாட்சிமையிலும் பங்கு கொள்ளத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. என் அரசு இவ்வுலகைச் சார்ந்த்து அல்ல என்றுரைத்த எம் இறைவா! எம் இந்தியத் தேசத்தில் குறிப்பாக வட மாநிலங்களில் உம் இறைப்பணிக்கு எதிராக வன்முறைகள் நடைப்பெற்றாலும் எம் இறைப்பணியாளர்கள் தியாக வாழ்வில் இறைபணிக்காக அர்ப்பணித்து, தங்கள் சொல்லாலும், செயலாலும் சான்றுபகரும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும், காயப்படுத்தியவர்களைத் தண்டிக்காமல் அவர்கள் உம் அன்பின் வழியைப் பின்பற்றி மனமாற்றம் அடைந்தவர்களாக வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புத் தந்தையே எம் இறைவா! புனித வியான்னி ஆர்வமிக்க மேய்ப்புப் பணியாளராகவும், பங்குதந்தையாகவும் வாழ்ந்து போல் எம்பங்குதந்தையாகள் அர்ப்பணத்திலும், அருள் வாழ்விலும், சிறந்த மேய்ப்புப் பணியாளராக வலம் வரவும், எங்கள் பங்குகளிலே பங்குத் தந்தையருக்கும் மக்களுக்குமிடையே நல்லுறவு நாளும் வளரச் செய்யவும் உம் அருள் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இன்பத்திலும் துன்பத்திலும் எங்களோடு இருக்கும் எம் இறைவா! துன்பத்தின் முடிவில் இன்பம் உண்டு என்பதை உணர்ந்து எங்கள் குடும்பங்களின் துன்ப வேளைகளில் இயேசுவைப் போல் உம்மோடும் செபத்திலும் இன்பவேளையில் நன்றியுடன் மகிழ்ச்சியில் உம்முடன் ஒன்றித்து வாழவும், அன்பில் எல்லோரிடமும் கலந்து இறைமகன் இயேசுவின் சாட்சியாய் வாழ உமதருள் வேண்டி மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

5. அமைதிக்கும் ஆறுதலுக்கும் ஊற்றாகிய எம் இறைவா, எம் இளையோர் தம் இளமையில் உம்மைத் தேடவும் துன்பவேளையில் வழிதவறிவிடாமலும், பொறுமையுடன் இருந்து இன்பத்தை வெற்றிகனியாகத் தம் வாழ்நாட்களில் பெற்றுப் பிறருக்குப் பலன் தரும் கனியாக மாறிட ஞானத்தையும், இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment