பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 03.09.2023
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எரேமியா 20: 7-9
உரோமையர் 2:1-2
மத்தேயு 16:21-27
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
இன்று தத்தம் சிலுவைவைச் சுமந்து கொண்டு இயேசுவின் சீடர்களாய் பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருப்பலியில் கலந்து கொண்டு, கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாகத் தங்களைப் படைக்க வந்துள்ள இயேசுவின் அன்பிற்குரியவர்களே! உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொல்லிக் கிறிஸ்துவிடம் பாராட்டுப் பெற்ற திருத்தூதர் பேதுருவை “என் கண்முன் நில்லாதே சாத்தானே” என்று கடிந்து கொள்கின்றார் இறைமகன் இயேசு. தன்னைச் சிலுவையிலிருந்து பிரிக்க நினைத்த பேதுருவைக் கிறிஸ்து "சாத்தானே" என்று அழைத்தார். அன்று கிறிஸ்துவைக் கோபுரத்திலிருந்து குதிக்கச் சொன்னச் சாத்தான், அவரைக் கடைசியாகச் சிலுவையிலிருந்து இறங்கிவரச் சொன்னான். ஆனால் சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவில்லை. மாறாகச் சிலுவையில் தொங்கி நம்மை மீட்டார். சிலுவையின் மூலம் விடுவிப்பார்.!.
கிறிஸ்து சிலுவையால் மாட்சிமை அடைந்தார். சிலுவையில் அவர் உயர்த்தப்பட்டார். சிலுவையிலிருந்து மாந்தர் அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொண்டார். ஒவ்வொரு துன்பமும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி மாட்சிமை அடையச் செய்கிறது என்ற நம்பிக்கையில் பக்குவப்பட்டவர்களாய் இறைவார்த்தை நமக்கு உறுதியையும் ஊக்கத்தையும் தர இன்றைய திருப்பலியில் ஒருமனதோராய் மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது. என்று சொல்கிறார் எரேமியா. ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்து போனோன் என்று மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் எசாயா நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
திபா 63: 1. 2-3. 4-5. 7-8
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக் கொள்ள நமக்கோர் அற்புதமான வழியைக் காட்டுகிறார். கடவுளுக்கு உகந்த, துய, உயிருள்ள பலியாக உங்களை ஒப்புடையுங்கள் என்கிறார் பவுலாடியார். கிறிஸ்தவ வாழ்வுக்காக நம் உள்ளத்தைப் புதுப்பித்துக் கொள்ள அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. எங்களுக்குத் துணைச் செய்பவரும், விடுதலை அளிப்பவருமாகிய எம் இறைவா! எம்திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துயவியர், பொதுநிலையினர் அனைவரும் உமக்குச் சாட்சியம் புரிய, உன்னத மக்களாகத் திகழ்ந்திட, திருஅவை எதிர்நோக்கும் சவால்களையும், துன்பங்களையும் ஏற்றுத் துணிவுடன் திருஅவையைப் பேணிக்காக்கத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
2. துன்பங்களை வென்ற நாயகனே, எம் இறைவா! துன்பங்களை நாம் கண்டு துவண்டுவிடாமல் அதளை மேற்கொள்ளத் தனிமனித முயற்சியோடு உம் இறைநம்பிக்கை அதிக முக்கியம் என்பதனை உணர்ந்து நாங்கள் துன்பப்படுவோர்க்கு, எப்போதும் உதவிகரம் கொடுக்கக்கூடிய நல்மனதையும் கடவுளுக்க ஏற்புடைய நற்காரியங்களை மேற்கொள்ளத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்
3.அனைத்தையும் அமைத்தாளும் எம் இறைவா, எங்கள் அருகிலிருக்கும் ஏழைகள், துன்புறுவோர், கைவிடப்பட்டோர், தனிமையில் வாழ்வோருக்கு நாங்கள் உதவ முன்வர எங்களுக்குத் தன்னலமற்ற சேவைச் செய்வும், அவர்களின் பொருளாதாரத் தேவைகளைச் சந்திக்கவும் இரக்கமுள்ள நல்ல இதயத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.அருள்கொடையின் நாயகனே எம் இறைவா! இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், காலங்களையும், யுகங்களையும் கடந்த கடவுள் நம்மோடு நம்மில் செயலாற்றுகிறார் என்பதைப் புரிந்து, இறைவார்த்தையின் ஆழத்தை அதிகமாக அறிந்துச் சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.
5. "சமத்துவம் தான் நான் படைத்த தத்துவம்" என்பதை எம்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் உணர்ந்து சாதி –சமயம் - இனம் -மொழி கடந்து உமது இயேசுவின் பாதையில் இறையரசு பயணம் மேற்க்கொள்ள உமது தூய ஆவியாரின் ஆற்றல் எங்கும் நிறைந்திட, ஓரே மேய்ப்பனும் மந்தையுமாக வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம் மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment