Monday, May 13, 2024

தூய ஆவியாரின் பெருவிழா 19.05.2024

தூய ஆவியாரின் பெருவிழா

 இன்றைய வாசகங்கள்:

1. திருப்பணி 2:1-11
2. 1கொரி 12:3,7,12-13  
3. நற்செய்தி யோவான் 20:19-23

திருப்பலி முன்னுரை

ஆவியிலும்‌, உண்மையிலும்‌ வழிபட வந்திருக்கும்‌ இறை இயேசுவில்‌அன்புக்குரிய சகோதரர்‌ சகோதரிகளே! தூய ஆவியாரின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாட கோவிலில்‌ குழுமியிருக்கும்‌ உங்கள்‌ அனைவரையும்‌ பெருமகிழ்வுடன்‌ வரவேற்கின்றோம்

இன்று தாயாம்‌ திருஅவையின்‌ பிறந்த நாள்‌ ! கிறிஸ்துவின்‌ மறையுடலாக விளங்கும்‌ திருஅவையின்‌ தொடக்க நாள்‌! அன்னை மரியாவுடன்‌ செபத்தில்‌ இணைந்திருந்த சீடர்கள்‌ நடுவில்‌ தூய ஆவியார்‌ இறங்கி வந்தபோது திருஅவை பிறந்தது. இயேசுவின்‌ உயிர்ப்பு, விண்ணேற்றம்‌, தூய ஆவியாரின்‌ வருகை என்ற இந்த மூன்று நிகழ்வுகளும்‌, நமது கிறிஸ்தவ நம்பிக்கையின்‌ அடித்தளமான உண்மைகள்‌. இவை மூன்றும்‌ நம்‌ வாழ்வில்‌ நல்ல மாற்றங்களைக்‌ கொண்டுவரும்‌ பெருவிழாக்கள்‌ !

தூய ஆவியார்‌ என்பவர்‌ ஓர்‌ ஆற்றல்‌ ! வேறுபாடுகளைக்களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வல்லவர்‌. தூய ஆவியார்‌ மூவொரு கடவுளின்‌ மூன்றாம்‌ ஆளாக விளங்குகிறார்‌. இவர்‌ இறைத்தந்தையுடனும்‌, இறைமகன்‌ இயேசுவுடனும்‌ ஒன்றாக ஆராதனையும்‌ மாட்சியும்‌ பெறுகின்றவர்‌. தூய ஆவியாரின்‌ வல்லமையால்தான்‌ அன்னை மரியாவின்‌ கருவில்‌ இயேசு உருவானார்‌. இயேசு திருமுழுக்குப்‌ பெற்றபோது தூய ஆவியார்‌ புறா வடிவில்‌ அவர்மீது இறங்கி வந்தார்‌.

தூய ஆவியாரின்‌ பெருவிழா நாளில்‌ அவர்‌ தங்கியிருக்கும்‌ நம்‌ உடலைத் தூய்மையாகப் பேணவும்‌, ஆற்றல்களையும்‌, திறமைகளையும்‌ பொது நன்மைக்காகப்‌ பயன்படுத்தவும்‌, தூய ஆவியாரின்‌ செயல்களுக்கு இசைந்து நடந்து இயேசுவின்‌ சாட்சிகளாக வாழவும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ தொடர்ந்து செபிப்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

இறை இயேசு உயிர்த்த ஐம்பதாம்‌ நாளன்று அவர்‌ வாக்களித்தபடியே ஒரே இடத்தில்‌ கூடியிருந்த சீடர்கள்‌ அனைவரையும்‌ பிளவுபட்ட நாவு வடிவில்‌ தூய ஆவியார்‌ ஆட்கொண்டதையும்‌ அவரின்‌ தூண்டுதலால்‌ சீடர்கள்‌ பல்வேறு மொழிகளில்‌ பேசும்‌ ஆற்றல்‌ பெற்றதையும்‌ இயேசுவின்‌ நற்செய்தி உலகில்‌ பலருக்கும்‌ அவரவரது தாய்‌ மொழிகளிலேயே அறிவிக்கப்பட்டதையும்‌ எடுத்துரைக்கும்‌ முதல்‌ வாசகத்திற்கு செவிசாய்ப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1,24 29-30. 31,34
பல்லவி : ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. - பல்லவி

 
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி 


ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

தூயஆவியார் ஒருவரே செயல்பாடுகள் பல வகையுண்டு. ஊனியல்பின்‌ இச்சை தூய ஆவியாருக்கு முரணானது என்றும்‌, அந்த இச்சைகளில்‌ ஈடுபடுவோர்‌ இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்றும்‌, தூய ஆவியின்‌ துணையால்‌ வாழ்வதால்‌ அவர்‌ காட்டும்‌ நெறியில்‌ நடக்க முயலுவோம்‌ என்றும்‌ எடுத்துரைக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.

****தொடர் பாடல்* பாடல் இசையுடன்********

 

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1.திருஅவைக்காக…
துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள, குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
2. நாட்டிற்காக…
எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பைத் தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
3.அமைதிக்காக…
கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்குத் துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.
4.மாணவ செல்வங்களுக்காக…
வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களைக் கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்புகள் நல்ல தரமான கல்வி கூடங்களில் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.
5. இளைய சமுதாயத்திற்காக...
நன்மை பயக்கும்‌ இறைவா! உலகில்‌ உள்ள அனைத்து இளைஞர்களும்‌ இளம்‌ பெண்களும்‌ நல்ல பண்புகளை வளர்த்துக்‌ கொள்ளவும்‌, தீயப்‌ பழக்கங்களில்‌ சிக்காகமல்‌ விழிப்புடன்‌ இருக்கவும்‌, நாட்டுக்கும்‌ வீட்டுக்கும்‌ நன்மை பயப்பவர்களாக வாழவும்‌, எரிச்சல்‌ அடையாமலும்‌, சினம்‌ கொள்ளாமலும்‌, பொறுமையாகவும்‌, கனிவாகவும்‌, உதவும்‌ மனப்பான்மையுடனும்‌ பணியாற்றவும்‌, ஒருவர்‌ மற்றவரை மன்னித்து, மதித்து, விட்டுக்கொடுத்து வாழவும்‌ அவர்களுக்கு மனமாற்றத்தைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF

youtube coding


No comments:

Post a Comment