பொதுக்காலம் நான்காம் ஞாயிறு
ஆண்டவரை ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணித்த விழா
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
மலாக்கி 3: 1-4
எபிரேயர் 2: 14-18
லூக்கா 2: 22-40
திருப்பலி முன்னுரை
இன்றைய ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று, இறைவனைத் தொழுதிட கூடியிருக்கின்ற இறைமக்கள் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இறைஇயேசுவின் அன்பும் சமாதானமும் நிறைந்து நிலைத்திட வாழ்த்துகிறோம்.
"ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்னும் திருச்சட்டத்தை நிறைவேற்றும் வண்ணமாக, குழந்தை இயேசுவை ஆலயத்திற்கு எடுத்து வந்து அர்ப்பணம் செய்த நிகழ்வினை அன்னையாம் திருஅவை இன்று விழாவாகக் கொண்டாடுகின்றது. இந்த நாளில் இறைமகன் இயேசு தம்மீது நம்பிக்கை கொண்ட தம் மக்களைச் சந்தித்து, தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். தூய ஆவியாரின் ஏவுதலால் கோவிலுக்கு வந்த முதியோரான புனிதர்கள் சிமியோனும், அன்னாவும், அதே ஆவியாரால் உள்ளொளி பெற்று, அவரை ஆண்டவர் என அறிந்து அக்களிப்புடன் அறிக்கையிட்டனர். இந்த இரு புனிதர்களின் தளராத இறைநம்பிக்கையும், ஜெபவாழ்வும், மீட்பரை அடையாளம் கண்டுகொள்ள துணை செய்தன.
ஆழமான நம்பிக்கையோடு, இடையறாத இறைவேண்டலில் கடவுளுக்கு உகந்த வாழ்வை மேற்கொண்டிருந்தால், ஆண்டவரை அடையாளம் கண்டுகொள்ளும் இறைஅனுபவத்தை நாமும் பெற்றிடுவோம் என்பது திண்ணமே. ஆண்டவரை ஆலயத்தில் அர்ப்பணித்த இன்றைய நாளில், தங்களையே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ்கின்ற குருக்கள், துறவறத்தார் மற்றும் அருள்சகோதரிகளுக்காக இந்தத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை
உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற மீட்பர் எப்போது வருவார்? அவரது வல்லமை எத்தகையது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதல் வாசகம் முன்வைக்கிறது. “நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரென்று தம் கோவிலுக்கு வருவார்; அவரது வல்லமை புடமிடுகின்ற நெருப்பு போன்றது; தம் மக்களைப் பொன், வெள்ளியைப் போலப் புடமிட்டு தூய்மையாக்குவார்” என்று இறைவாக்கினர் மலாக்கி இந்த முதல் வாசகத்தில் முன்னறிவிக்கிறார்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். - பல்லவி
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமை குருவாகிய இறைமகன் இயேசு, தம் மக்களுக்குப் பாவத்திலிருந்து விடுதலை தர இவ்வுலகில் அவதரித்தபோது, இரத்தமும், சதையும் கொண்ட சாதாரண மனித உருவிலே அவர்களோடு உறவாடத் திருவுளம் கொண்டார். சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையை, தனது சாவினாலே அழித்து, அடிமைப்பட்டிருந்த தம் மக்களை விடுவித்தார். விண்ணிலும், மண்ணிலும் எல்லா அதிகாரங்களையும் கொண்டிருந்த கிறிஸ்து, வானதூதருக்குத் துணை நிற்காமல், நம்மில் ஒருவரானார் என்று திருத்தூதர் புனித பவுல் எபிரேயருக்கு எழுதியத் திருமடலில் எடுத்துரைக்கிறார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துக்காட்டுவதுபோல, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து நம்மைப் புனிதப்படுத்துகிறார். அவ்வாறே, திரு அவையின் தலைவர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மட்டுமின்றி, நாம் யாவருமே, இந்த யூபிலி ஆண்டிலே, இரக்கமும் நம்பிக்கையின் நிறைந்த திருப்பயணிகளாய் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. தெரிந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலுக்குப் பெருமையாகவும், பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாகவும் துலங்கிடும் இறைமகன் இயேசு, உலகிற்கு அமைதி அருளவும், அனைத்துலக, மற்றும் நம் தேசத்தின் தலைவர்கள் மனதிலே, நேரிய எண்ணங்களை விதைத்து, சீரிய திட்டங்களைச் செயல்படுத்தி, அறநெறியில் ஆட்சி புரிந்து மக்களுக்கு நற்பணி ஆற்ற, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன” என மனநிறைவு எய்திய சிமியோன் அன்னாள் போல, எம்குடும்பங்களில் வாழும் பெரியோர் மற்றும் முதியோர் மகிழவும், திருச்சட்ட நியமங்களை நிறைவேற்றுவதில் கருத்தாயிருந்த சூசை மரியாள் போல, எம்பெற்றோர் தம் கடமைகளைச் சரிவரச் செய்யவும், வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்திருந்த இயேசுவைப் போல எம்குழந்தைகள் விளங்கவும், எங்கள் குடும்பங்கள் அனைத்துமே இறைவனுக்கு உகந்த திருகுடும்பங்களாய் விளங்கவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆண்டவர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவினை, அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவறத்தாரின் நாளாக சிறப்பிக்கும் நாங்கள், துறவியர் அனைவரும், தம் அர்ப்பண வாழ்வில் பிரமாணிக்கயிருக்க மன்றாடுகிறோம். அதே வேளையில், இன்னும் பலர், தேவ அழைத்தலை உணர்ந்து, தாராள மனதோடு, தம்மையே அர்ப்பண வாழ்விற்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.