பொதுக் காலம் ஆண்டின் இரண்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எசாயா 62:1-5
கொரிந்தியர் 12:4-11
யோவான் 2:1-12
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இயேசுவின் முதல் புதுமை! அவரின் பொதுவாழ்வில் அன்னை மரியாளின் கரிசனை அன்பால் ஓர் இனிய சுவையாகப் புதுமையுடன் வெளிப்படுகின்றார். அடுத்தவரின் துயரம் அறிந்த அன்னையாக "அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்" என்று அழைக்கின்றார். ஆம் அன்னையின் அழைப்போடு இயேசுவும் தன் பொதுவாழ்வைத் தொடங்குவதாக இந்த நிகழ்வு அமைகின்றது.
வெறும் தண்ணீரை, குணம் மணம் இல்லாத் தண்ணீரை இரசமாக மாற்றி மகிழ்ச்சி நிறைந்தோட செய்கிறார். இயேசுவின் வருகைச் சோகத்தை இன்பமாக மாற்றுகிறது. நம் உப்புச் சப்பற்ற வாழ்வை இயேசுவிடம் ஒப்படைத்தால் மட்டும் போதும் அதை இரசனையுள்ள வாழ்வாக, மகிழ்ச்சி நிறைந்த, குறிக்கோள் நிறைந்த வாழ்வாக மாற்றுவார். இயேசு வந்தால் நம் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நிறைவாகக் கலந்து கொண்டு மன்றாடுவோம். யூபிலி ஆண்டில் மாற்றத்தைக் காண்போம். வாரீர்.
வாசகமுன்னுரை
முதல் வாசகமுன்னுரை
சீயோன் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அதன் மீட்பும், வெற்றியும் மீட்பின் செயல்கள் அனைத்தும் வெளிப்படும் வரை கடவுளின் மௌனம் வெளிப்படுகின்றது. அந்த மீட்பினால் வரும் மகிழ்ச்சியைப் பிற இனத்தார் மன்னர் அனைவரும் காண்பது பற்றியும், கடவுளின் திருக்கரத்தில் மணிமகுடமாய் விளங்குவது பற்றி ஒரு நாளும் கைவிடப்பட்ட நிலையால் இருக்கப்போவதில்லையென நலம் நல்கும் நம்பிக்கையின் வாக்குறுதியைத் தரும் முதல் வாசகமான எசாயாவின் இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 96: 1,2. 2-3. 7-8. 9-10
பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். -பல்லவி
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி
இரண்டாம் வாசகமுன்னுரை
இறைவன் தன்மகன் இயேசு வழியாகப் புதுயுகம் ஒன்று நம் மத்தியில் புலரச் செய்கிறார்… அவர் தூயஆவியின் கொடைகளால் நம்மை நிரப்புகிறார். அவைகள் வலுக்குறைந்த நமக்கு வலிமையூட்டுகின்றன. நம்பிக்கைத் தருகின்றன. பல்வேறு அருள்கொடைகளைத் தூய ஆவி வழங்குவது திருஅவையின் பொது நலனுக்காகவே, அதன் வளர்ச்சிக்காகவே. எனவே இவ்வரங்களைப் பெற்ற எவரும் இறுமாப்புக் கொள்ளவோ, தம்மைத்தாமே உயர்ந்தவராகக் கருதவோ கூடாது என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் வெளிப்படுத்தப்பட்டும் கருத்துகளைக் கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலுயா அல்லேலுயா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலுயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. “ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்” என்கிற முதல் வாசக ஆசியின்படி, யூபிலி ஆண்டினைக் கொண்டாடும் திரிவையை, எதிர்நோக்கின திருப்பணிகளாய் வழி நடத்தும் திருத்தந்தை உள்ளிட்ட திரு அவை தலைவர்கள், இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழவும், இறைமக்களாகிய எங்களைக் கட்டியெழுப்பவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்” என்கிற ஏசாயாவின் கூற்றுப்படி, எங்கள் தாய்த் திருநாடும், குறிப்பாக, தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்துள்ள எம்தமிழ் நாடும், சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி, சமயச் சார்பின்மை ஆகிய விழுமியங்களைப் பேணிக்காத்து, 'தைப்பிருந்தால் வழி பிறக்கும்' என்ற எதிர்நோக்கு மிக்கவர்களாய் வாழ, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே” என்கிற பவுலடியாரின் வார்த்தைகளை உணர்ந்தவர்களாய், நாங்கள் எல்லோரும், எங்கள் திறமைக்கேற்ப எம்மடமைகளை ஆற்றி, எல்லோரும் எல்லாமும் பெற்றிட வழிவகை செய்யவும், சேற்றில் இறங்கி எமக்குச் சோறு படைக்கும் விவசாயிகள் உள்ளிட்ட அத்துணை உழைப்பாளிகளையும் மதித்து மாண்புடன் நடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ``அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்கிற அன்னை மரியாவின் அறிவுரைப்படி நாம் நடந்தால், அதே அன்னையின் பரிந்துரையை, ஆண்டவராம் இயேசு ஒருபோதும் தட்ட மாட்டார் என்கிற நம்பிக்கையும் எதிர்நோக்கும் உள்ளவர்களாய், இங்கே கூடியுள்ள நாம் அனைவரும் திகழவும், குறைகள் யாவும் நீங்கப்பெற்று, சுவைமிகு திராட்சை ரசம் போல் நம் வாழ்வு இனிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment