பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு.
இறந்த விசுவாசிகள் அனைவர்
இன்றைய வாசகங்கள்
சாலமோனின் ஞானம் 3:1-9
உரோமையர் 5:5-11
யோவான் 6:37-40
திருப்பலி முன்னுரை:
அன்பிற்கினியவர்களே ! இறைநம்பிக்கையாளர்கள் ஒருபோதும் இறப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் இறைவனில் வாழ்கின்றார்கள் என்கின்ற எதிர்நோக்கோடு வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
நாம் இறைவனிடமிருந்து வருகிறோம். இவ்வுலக வாழ்க்கைப் பயணம் முடிந்ததும், நாம் இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டும். கடந்த வருடம் கல்லறைத் தோட்டங்களில் நம்மோடு நடந்தவர்களில் சிலர் இந்த வருடம். நம்மோடு இல்லை. இவ்வுலகம் நிரந்தரமானது அல்ல என்பதையே ஒவ்வோர் இறப்பும், இந்த நாளும் நமக்கு உணர்த்துகின்றன. நமது பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்களின் ஆன்மாக்களுக்காக மன்றாட வந்திருக்கும் நாம், அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம். அவர்கள் வழியாக இறைவன் நமக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுவோம். நாம் மன்றாடும் இறைவேண்டல்களும், ஏற்றுகின்ற மெழுகுத்திரிகளும், ஒப்புக்கொடுக்கின்ற திருப்பலிகளும் அவர்களின் குற்றங்களை மன்னித்து, என்றைக்கும் இறைவனை முகமுகமாகத் தரிசிக்கின்ற மாபெரும் பேற்றினைப் பெற இப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை:
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இறைவனிடம் நம்பிக்கை கொண்டவர்கள், எத்தீங்கும் நேரிடாமல், கடவுளின் கைகளில் அமைதியில் இளைப்பாறுகிவர்கள், கடவுள்முன் ஒளி வீசுவார்கள் என்னும் நம்பிக்கையைத் தருகின்றது. இப்போது வாசிக்கப்படும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
அல்லது: (13): வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.
1.ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி
2.நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி
3. வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனில் நம்பிக்கைக் கொண்டு இறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வு உண்டு. இறைவனோடு என்றென்றைக்கும் இருக்கின்ற பெரும் மகிழ்ச்சியை இயேசு கிறிஸ்து தம் இறப்பினால் நம் அனைவருக்கும் அளித்தாரெனக் கூறும் இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தோலி:
மகனைக் கண்டு, அவரிடம் நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே, என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில், அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. வாகை சூடிய திருஅவையை நேற்றைய தினமும், துன்புறும் திருஅவையை இன்றைய தினமும் நினைவுகூர்கிற, பயணிக்கும் திருஅவையாகிய எங்களை, நீர்தாமே கண்ணோக்கியருளவும், எம்மை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார், ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும், இம்மையிலும் மறுமையிலும், வாழ்வித்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. திருஅவையின் மேய்ப்புப் பணியில், தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து, உம்மிடம் வந்தடைந்துள்ள திருத்தந்தையர், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், எங்களுக்குத் திருவருட்சாதனங்களை வழங்கிய மறைப்-பணியாளார்கள், எங்களின் விசுவாச வாழ்விற்கு துணை நின்று, இறந்து போன வேதியர், நற்செய்திப் பணியாளர், நல்மனம் படைத்த நல்லோர் ஆகிய அனைவரின் ஆன்மாக்களுக்கும், நீர்தாமே, முடிவில்லா பேரின்பத்தில் பங்குதர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. உலக அமைதிக்காகவும், நாடுகளின் விடுதைலக்காகவும், வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும், அனைத்துத் தரப்பினரின் மாண்புக்காகவும், நல்வாழ்வுக்காகவும் உழைத்து மரித்த உலகத் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்கள், சமூகப் போராளிகள் ஆகியோரும், அறிவியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளின் மூலம், மானுட வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து மரித்துப் போனவர்கள் ஆகிய அனைவரும், விண்ணக அரசில் தமக்குரிய வெகுமதியை பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் குடும்பங்களில் மரித்துப்போன எம்பெற்றோர், உறவினர், உடன்பிறந்தோர், பிள்ளைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரையும், எங்கள் வாழ்வு நலம்பெற உதவிய ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், படை வீரர்கள், காவலர்கள், அரசு மற்றும் தனியார் பணியாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணிகள் செய்வோர் ஆகியோரில், இறந்துபோனவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்து, அவர்களுக்கு நீர்தாமே நித்திய இளைப்பாறுதல் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இவ்வுலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, அழிந்துபோகும் செல்வங்களுக்கு அடிமைப்படாமல், அறவழியில் நடக்கவும் ‘விண்ணகமே எங்கள் தாய்நாடு’ என்கிற நம்பிக்கையோடு பயணிக்கும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாயிருக்க, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




