Thursday, October 23, 2025

பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு

பொதுக்காலம்  30 ஆம் ஞாயிறு 

Blog | Ebenezer Baptist Church

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் : 35: 12-14, 16-18
2திமோத்தேயு 4: 6-8, 16-18
லூக்கா 18:9-14 

திருப்பலி முன்னுரை:

திருவழிபாட்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு இறைவனுக்கு ஏற்புடையோரின் மன்றாட்டைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது.
ஆண்டவர் நடுவராய் உள்ளார். அவரிடம் ஒரு தலைச்சார்பு இல்லை. அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிபுரிவரின் மன்றாட்டு முகில்களை எட்டும் என்பதைச் சீராக் ஞான நூல் எடுத்துரைக்கின்றது.  திருத்தூதர் பவுலடியார் தனது பணியை முடித்து விட்ட மகிழ்ச்சியில் ஆண்டவரின் ஆற்றல் தன்னை எவ்வாறு வழிநடத்தியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.
இறைமகன் இயேசு பரிசேயர் – வரிதண்டுபவர் உவமைமூலம் இறைவன் முன்னிலையில் எப்படி நம் செபங்களை அவருக்கு ஏற்புடையவனாக அமைப்பது என்று நல் ஆசானாகப் போதிக்கின்றார். தன்னையே உயர்த்தித் தம்பட்டம் அடித்துப் பெருமையுடன் செபிப்பதைக் காட்டிலும் தாழ்ச்சியுடன் தன்னைப் பாவி என்று தாழ்த்திச் செபித்த செபமே இறைவனுக்கு ஏற்புடையது. அதுவே முகில்களை ஊடுருவிச் செல்லும். இக்கருத்துகளை மனதில் பதிவு செய்து இன்றைய வழிபாட்டில் தாழ்ச்சியுடன் நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுத்து அவரின் ஆற்றலை வேண்டி நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், கைவிடப்பட்டவருக்கும் தன் நீதியை வெளிப்படுத்துகிறார். தாழ்ச்சி நிறைந்த இறைவேண்டல் வான் முகில்களை ஊடுருவிச் செல்லும் எனக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர் பல்லவி

ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய வாசகத்தில் புனித பவுலடியார் தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறார். 'மற்றவர்கள் தன்னைவிட்டு அகன்றாலும், இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்தியதற்காக நன்றி நவில்கின்றார். விண்ணரசில் சேர்வதற்கான மீட்பைப் பெற்றுவிட்டதை நம்பிக்கையுடன் இங்குப் பதிவுச் செய்கிறார். இந்த வெற்றி வாகையைப் பகிர்ந்து கொள்ளும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌

1. நீதியுள்ள நடுவராம் ஆண்டவர், அவர் தோன்றுவாரென விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே, வெற்றியின் மணிமுடியைத் தருவார் என்கிற பவுலடியாரின் நம்பிக்கை, தாயாம் திரு அவையையும், அதன் தலைவராகத் திகழும்   திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும் உறுதிப்படுத்த, அந்த உறுதியுடனேயே, நாங்கள் அனைவரும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிச் சென்றிட, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது” என்கிறது இன்றைய முதல் வாசகம். இறைவனிடம் உள்ள நீதியும், ஒருதலைச்சார்பின்மையும், ஏழைகள்பால் பரிவும், புலம்பெயர்ந்தார் மீது கரிசனையும், அனைவருக்குமான நீதியும், இவ்வுலகினையும் எம்நாட்டினையும் ஆள்கிற தலைவர்களிடமும், மக்கள் அனைவரிடமும் துலங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்” என்கிற சீராக் நூலின் ஞானமும், “இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்” என்கிற திருப்பாடல் வரிகளும், உடைந்த உள்ளத்தார்,  நைந்த நெஞ்சத்தார், வறுமையில் வாடுவோர், துயரில் தவிப்போர், கண்ணீரில் மிதப்போர் ஆகியோரைத் தேற்றவும்,  அனைத்து துன்பங்களிலுமிருந்தும் அனைவரும் விடுபட்டு வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்கிற நற்செய்தி உவமையைப் புரிந்தவர்களாய், எங்களையே   “நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும்” பரிசேயத்தனத்தைத் துறந்து, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என மன்றாடுகிற  தாழ்ச்சிநிறை உள்ளத்தை,  நீர் தாமே எங்களுக்குத் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.      

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்… விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” எனப் பவுலடியாரைப் போலச் சொல்லத் தகுந்த, நேரிய, நம்பிக்கை குன்றாத, பிரமாணிக்கம் நிறைந்த வாழ்வையும், வாழ்கின்றபோது எங்களையே பலியாகப் படைக்கிற தியாகத்தையும், வாழ்வின் இறுதிவரை நல்லதொரு போராட்டத்தில் ஈடுபடுகிற நெஞ்சுரத்தையும் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment