Thursday, July 30, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 02-08-2015


ஆண்டின்  18ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று நாம் ஆண்டின் 18ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். நிலையான இன்பம் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. நிலையற்ற உலகில் மனிதன் அடையும் இன்பமும் நிலையற்றவை தானே! மின்விளக்குகளின் பிரகாசம் சூரியன் முன்னால் காணாமல் போய்விடுமே! பாலைநிலத்தில் இஸ்ரயேல்மக்களின் முணுமுணுப்பை அறிந்த கடவுள் ஒரு நாள் மட்டும் நிலைத்திருக்கும் மன்னாவை கொடுத்தார். இயேசுவோ தன்னையே தந்தார் என்றும் அழியாத உணவாக...

நம் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட நாம் புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ள வேண்டும். இதற்காக இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டு அவர் தரும்  மதிப்பீடுகளின்படி வாழும்போது சந்திக்கும் தடைகளை உடைத்தெறிந்து வெற்றி நடைப்போட  இன்றைய திருப்பலி அழைக்கின்றது. இயேசுவின் உன்னதமான உணவைத் தேடி நாளும் செல்வோம். அருளாளர் இயேசுவின் உறவில் நிலைத்து வாழ்வோம்.
 

வாசக முன்னுரை:

 முதல் வாசகத்தில்  இஸ்ரயேல் மக்களின் விடுதலைப் பயணத்தில் மக்கள் உணவின்றி தவித்தப்போது கடவுள் அவர்கள் உண்பதற்காக மன்னாவை வானத்திலிருந்து மழையெனப் பொழியச் செய்து,  எகிப்திலிருந்து அவர்களை மீட்டு வந்த கடவுள் அவரே என்று தமது  மாட்சிமையை  அறியச்செய்தார் என்ற நிகழ்வை விடுதலை பயணநூலிருந்து வாசிக்க கேட்போம்.

இரண்டாம் வாசகத்தில் மனிதர்கள் கடவுளை மறந்து மனசாட்சி இன்றி குறுக்கு வழியில் சென்று பெரும் செல்வங்கள் சேர்க்க பார்க்கிறார்கள். தேவைகளைப் பெருக்குவதால் மன அமைதியை இழந்தவர்களாக தவிக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் தரக்கூடியவர் அன்பர் ஒருவர் உண்டு. அவர் தான் இறைமகன் இயேசு என்பதை விளக்கும் புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.பதிலுரைப்பாடல்: ஒலிவடிவில்விசுவாசிகள் மன்றாட்டு:

திருச்சபைக்காக:

மன்னாவை அளித்த வள்ளலே, இறைவா! உம் திருச்சபையிலுள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் உம்மைத் தேடவும், நிலைவாழ்வு தரும் உணவான இயேசுவின் உடலையும் இரத்ததையும் பெற்று அவரின் விண்ணக நிலைவாழ்வைப் பெற வேண்டிய வரத்திற்காக இறைவா உமை மன்றாடுகிறோம்.

நாட்டிற்காக:

மன்னிக்கும் மகத்துவமிக்க எம் இறைவா!  எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை கண்டடைய செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு  வாழ வழிவகை செய்திடவும் , நாட்டிற்கும் உலகிற்கும் பயன்உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

எங்கள் குடும்பங்களுக்காக:

உம் ஒரே மகனை எமக்கு உணவாக அளித்த இறைவா! எங்கள் குடும்பங்களில் நிலைவாழ்வு தரும் இயேசுவின் அன்பு உறவில் நிலைத்து வாழ்ந்திடவும்,  உலகக்காரியங்களிலிருந்து விடுபட்டு  புதுவாழ்வு பெறவும், எங்கள் மனங்கள்  புதிப்பிக்கப்படவும்,  உண்மையான நீதியிலும், தூய்மையிலும் வாழ வேண்டிய வரம் கேட்டு உமை மன்றாடுகிறோம்.

இளைய சமுதாயத்திற்காக :

எங்கள் அன்பு தந்தையே இறைவா! எமது பிள்ளைகள் தங்களின் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழாமல் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து புதிய மனிதருக்குரிய இயல்புகளை அணிந்து தூய்மையான புதியப் படைப்பாய் மாறிட  இறைவா உமை மன்றாடுகின்றோம்.

---oo0oo--

பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன் அவர்களுக்கு நன்றி

No comments:

Post a Comment