Wednesday, August 5, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 09-08-2015

ஆண்டின்  19ஆம் ஞாயிறு

 திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவின் அருமையான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரையும் ஆண்டின் 19ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். நிறைவாழ்வு தரும் உணவைப் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.  அன்று பாலை நிலத்தில் மன்னா உண்டவர்கள் எல்லோரும் மடிந்து விட்டனர்.  பிறந்த யாவரும் இறக்க வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. ஆனால் இயேசு தன்னையே மானிடருக்கு உணவாகி முடிவில்லா வாழ்வு அளிக்கிறார்.

எலியாவுக்கு சோர்வு ஏற்பட்டபோது உணவு தேவைப்பட்டது போல பயணிக்கும் இன்றைய திருச்சபையிலிருக்கும் நமக்கும் உணவு தேவைப்படுகிறது. வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் களைப்பு, ஏக்கம், மனச்சோர்வு ஆகியவை நீங்க வழங்கும் உணவு தான் அவரது அருள்வாக்கும் அவரது திருவுடலுமாகும். இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலாது. அதுபோல இயேசுவும் நாமும்  இணைந்திட அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.வாசக முன்னுரை:

 முதல் வாசகத்தில்  எலியா சோர்ந்து போய் தன் உயிரை எடுத்துக்கொள்ள யாவே கடவுளை வேண்டினார். ஆனால் பாலைநிலத்தில் ஒரு கூரைச் செடியின் அடியில் அவரை உறங்கவைத்து அவருக்கு உணவு கொடுத்து உற்சாகப்படுத்தி அவரது இறைவாக்கினரின் பயணத்தை தொடரவைத்தார். இதுபோல நம் வாழ்விலும் நாம் இப்போது ஓடிக்கொண்டே இருப்பது போல தோன்றினாலும், பாலைநிலம் போல வாழ்வின் எதார்த்தங்கள் சுட்டெரித்தாலும் நம்மையும் எழுப்பி, உணவு பரிமாற கடவுள் ஒரு வானதூதரை அனுப்புவார் என்ற நல்நம்பிக்கையில் அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8


பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

இரண்டாம் வாசகத்தில் எனக்கும் எனக்கும் உள்ள உறவு,  எனக்கும் பிறருக்கும் உள்ள உறவு, எனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு என்று  மனிதர்களுக்குள்ள அன்புறவுகளை சீர் தூக்கிப் பார்த்து உறவுகளை மேன்படுத்தினால், அடுத்தவரை மன்னித்து ஏற்றுக்கொண்டால், நாம் கடவுளின் பிள்ளைகளாக, நற்மணம் வீசும் காணிக்கையாக மாறமுடியும்.  இவ்வாறு கிறிஸ்துவின் உடலில் துலங்கும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விளக்கும் புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.

விசுவாசிகள் மன்றாட்டு:

திருச்சபைக்காக:

எம் நிலைவாழ்வுக்கு உணவாக உம் மகனையே தந்த இறைவா!  எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் தங்களிடையே உள்ள உறவுகளை மேன்படுத்தி, வாழ்வு தரும் உணவான இறைமகனின் வீழுமியங்களை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து உம் சாட்சிகளாக வாழ வேண்டிய வரத்திற்காக இறைவா உமை மன்றாடுகிறோம்.

மக்களுக்காக:

அன்பால் எமை ஆளும் எம் தேவாதிதேவனே!  நாங்கள் ஒருவருக்கொருவர் உண்மையான பரிவன்பு காட்டவும் குறிப்பாக ஏழைகள், அனாதைகள், முதியோர், கைவிடப்பட்டோருக்கு எங்களால் இயன்ற உதவி செய்யும் தாராள மனத்தைத் தந்தருள வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

 எங்கள் குடும்பங்களுக்காக:

அன்பு தந்தையே இறைவா!  எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உம் வார்த்தைகளில் ஊன்றி நிலைத்திடவும், அருமருந்தாம் உம் திருஉடலைப் பெற்ற நாங்கள் எமக்கு அடுத்திருப்பவர்களை ஏற்று வாழவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்ளும் வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.

கிறிஸ்துவுக்காக துன்பபடுவோருக்காக:

எங்கள் அன்பு தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய இவர்கள் உம்மை தங்களின் மீட்பராக ஏற்று கிறிஸ்துவராக வாழ்வதற்காக படும் இன்னல்கள் எண்ணிலாடங்கா. இவர்கள்  தாங்கள் நாடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் வேளையில் இவர்களில் பாதுகாவலவும், தேற்றவாகவும் நீரே இருக்கவேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment