Tuesday, November 22, 2016

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு 27/11/2016

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு  
இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44


முன்னுரை

திருவழிப்பாட்டின் புதிய ஆண்டைத் தொடங்கும் இவ்வேளையில் திருவருகைக்கால முதல்ஞாயிறு ஆன இன்று இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள்.
கிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடத் தயாராகும் நாம் அவரின் இரண்டாம் வருகைக்கு நம்மை நாமே தயாரிக்க வேண்டியநிலையில் உள்ளோம். இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகைக்காக இறைமக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். இறைமகனின் வருகையை எதிர்நோக்கி வாழ வேண்டும் என்ற கருத்துகளை வலிறுத்திக் கூறுகின்றன. நற்செய்தி வாசகம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து, விழிப்பாய் இருக்க அழைப்பு விடுக்கின்றது.
இன்று ஏற்றப்படும் திருவருகைக் கால முதல் மெழுகுவர்த்தி நம்பிக்கையைக் குறிக்கின்றது. இருள் ஒளி அகற்றி அக ஒளி ஏற்றி இறைவனின் ஒளியின் மக்களாய் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்குத் தயாராகும் வேளையில் அவரின் இரண்டாம் வருகை எதிர்நோக்கிப் புனிதப் பயணம் மேற்கொள்வோம். இயேசுவின் வருகை எப்போது என்று தெரியாதநிலையில் நாம் விழிப்புடன் இருந்திட வேண்டிய ஞானத்தையும், இறுதிகாலத்தை நினைவில் கொண்டு நாம் மீட்பிற்கான செயல்களில் ஈடுபடவேண்டிய அருளையும் பெற்றிட உருக்கமுடன் வேண்டி இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

மெசியா வரும்போது எல்லா மக்களுடைய கதியையும் நிர்ணயிப்பதில் எருசலேமுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என இன்றைய வாசகம் தெரிவிக்கிறது. மனிதரிடையே அமைதியைக் கொணர மனிதருடைய முயற்சி மட்டுமே போதாது. கடவுள் தம்முடைய அருளை நமக்கு அளித்து, மனித உள்ளங்களில் அமைதி உணர்வை எழுப்பி, மனிதர் ஒருவர் ஒருவர் மட்டில் அன்புறவு கொண்டு வாழ்ந்திட அழைக்கின்றார். அந்த அழைப்பை மனிதர் ஏற்றுச் செயல்படும்போது அங்கே கடவுள் கொடையாக அளிக்கின்ற அமைதி தழைத்தோங்கும். இதையே எசாயா யூதா நாட்டினர்க்கு அறிவுறுத்தினார். எசாயா விடுக்கும் அழைப்பை எடுத்துரைக்கம் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உரோமை நகரக் கிறிஸ்தவ சபைக்குப் பவுல் எழுதிய கடிதத்தில் பவுல் ''இறுதிக்காலம்'' பற்றிப் பேசுகின்றார். இயேசு கிறிஸ்து மனிதராக நம்மிடையே வந்து ''இறுதிக்காலத்தை'' ஏற்கெனவே தொடங்கிவைத்தார். அவருடைய வருகையால் உலகில் கடவுளின் உடனிருப்பு ஒரு சிறப்பான நிலையை எய்தியது. உலகில் ஒரு புதிய விடியல் தோன்றியது. என்றாலும், மனித வாழ்க்கையிலிருந்து இருள் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. பாவத்தின் சக்தியும் நம்மைவிட்டு முழுமையாகப் பிரியவில்லை. இருளையும் பாவத்தையும் அறுதியாக முறியடித்து வெற்றிகொள்ளும் கட்டம் இயேசுவின் இரண்டாம் வருகையின்போதே நிறைவுறும் என்று எடுத்துரைக்கும்  தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்கு  கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்

அகமகிழ்வோடு  ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

திருப்பாடல்122: 1-2, 4-5, 6-7, 8-9


"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.  எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்..  பல்லவி

 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.  அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி 


எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; "உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!  உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!  பல்லவி
உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.  நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். பல்லவி

மன்றாட்டுகள்

1. உம்மை எதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார் என்றுரைத்த  எம் இறைவா!  உம் இரண்டாம் வருகையை எதிர்நோக்கியிருக்கும் இத்திருஅவை உமது ஒளியில் பயணிக்கும் திருஅவையாய், இறைமகன் இயேசுவை அணிந்தவர்களாய், ஊனியல்பின் நாட்டங்களை விடுத்து விழிப்புடன் இருந்து  உம்மை வரவேற்க ஆயத்தமாய் இருக்க வேண்டிய ஞானத்தையும், விழிப்புணர்வோடு இருக்கவேண்டிய அருளையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களின் நலமும் வளமும் நிலைவாழ்வுமான எம் இறைவா! புதிய திருவழிபாட்டு ஆண்டில் வரவிருக்கும் உமது வருகைக்குத் தயாராகவும், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு எங்களைத் தகுந்த முறையில் தயார்படுத்திக் கொள்ளவும், தன்னலமற்றுப் பிறருடன் பெற்ற வளங்களைப் பகிர்ந்திடவும், நற்செயல்களால் ஏழைஎளியோர்களின் நலங்களைப் பேணும் உறுதியான நல்மனதினை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் குற்றங்களை மறந்தாலும் எங்களை ஒருபோதும் மறவாத எம் இறைவா! மரித்தோரை நினைவுகூறும் இந்நாட்களில் அவர்களின் குற்றங்குறைகளை மறந்து, மன்னித்து அவர்களை உமது புனிதர்கள் கூட்டத்தில் சேர்த்து உம்மைப் போற்றிடவும், எமக்காய் மன்றாடவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எம் நாட்டில் நிகழும் இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள், பொருளாதாரச் சீர்கேடுகளால் தம் இன்னுயிரை இழந்தவர்களின் குடும்பங்களுக்காய் மன்றாடுகின்றோம். அக்குடும்பத்தினருக்கு ஆறுதலும் தேற்றுதலுமாய் இருந்து மீண்டும் நல்வாழ்வுப் பெற்று, உமது இரக்கம் என்றும் அவர்க்கு உண்டு என்ற நம்பிக்கையை அவர்களது இதயத்தில் விதைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உமது அளவற்ற இரக்கத்தால் எம்மை ஆட்கொண்ட  எம் இறைவா! நாங்கள் ஒப்புரவு மற்றும் மன்னிப்பிற்கான கதவுகளை ஒரு நாளும் மூடாமல், மற்றவர்க்கு நம்பிக்கையின் பாதையாகச் செயல்படவும், இறைஇரக்கத்தின் ஆண்டில் பெற்றுக் கொண்ட கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து இறைஇயேசுவின் சீடர்களாய் தொடர்ந்து வாழ்ந்திடத்  தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.                                www.anbinmadal.org

No comments:

Post a Comment