Tuesday, November 1, 2016

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 06/11/2016

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2மக்கபேயர் 7:1-2,9-14
2 தெசலோனிக்கர் 2:16-3:5
லூக்கா 20:27-38

முன்னுரை


திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க மறுவாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் அன்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு, மறுவாழ்வு பற்றிய சீரிய கருத்துகளை நம் முன் வைக்கின்றது. கடந்த இரு வார வாசகங்களில் பரிசேயர்களைப் பற்றியும், வரிதண்டுபவர் பற்றியும் அறிந்த நமக்கு, இன்று சதுசேயர்களின் கேள்விகள் மூலம் உயிர்தெழுதலைப் பற்றியும், மறுஉலக வாழ்வைப் பற்றியும் இயேசு நல்ஆசானாகப் போதிக்கின்றார். இவ்வுலக வாழ்வில் திருமணம் - பிள்ளைபேறு இவை உண்டு. ஆனால் மறுமையில் அங்கே உறவுகள் இல்லை. அனைவரும் இறைவனில் ஒன்றே. அங்கே கொடுப்பதுமில்லை. வாங்குவதுமில்லை. அங்கு அனைவரும் சமம் என்பதைப் பதிவு செய்கின்றார். இவ்வுலக வாழ்வின் அடிதளமே நமது மறுமையின் அளவுகோல். எனவே இவ்வுலகில் வாழும்போதே அறச்செயல்களினால் மறுமைவாழ்வின் மேன்மைக்கு அடிதளமிடுபோம். நாம் வாழ்வோரின் கடவுளைக் கொண்டுள்ளோம் நம் நிலைவாழ்வில் என்பதை உள்ளத்தில் பதிவு செய்துகொள்வோம்.
உயிர்த்தெழுதலும், வாழ்வு நானே என்ற இயேசுவிடம் மறுஉலகில் நிலைவாழ்வை பெற்றிட உருக்கமுடன் வேண்டி  இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் அடிப்படையில் தான் அன்று யூத வீரதாயும், அவரது ஏழு மகன்களும் பன்றி இறைச்சியை உண்ண மறுத்து தாங்கள் சாகத் தயங்கவில்லை. இரண்டாவது மகன் பலியாகுமுன் இறந்தபின், என்றென்றும் வாழும் அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் என்று விர முழக்கமிட்டு மடிந்ததை பதிவு செய்யும் மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வரும்  இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


ஆண்டவரின் மீது நம்பிக்கை கொண்ட நாம் நல்லதையே சொல்லவும், செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று பவுலடியா நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆகால் ஆணடவர் நம்பிக்கைக்குரியவர். கடவுளின் அன்பும், கிறிஸ்துவின் மனஉறுதியும் நம்மிடையே இருக்கவேண்டும் என்று ஆவலாய் வேண்டும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்கு  கவனமுடன் செவிமெடுப்போம்.
.

பதிலுரைப்பாடல்


விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
திருப்பாடல்17: 1, 5-6, 8, 15

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.  பல்லவி

என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். பல்லவி
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.   பல்லவி மன்றாட்டுகள்


1. ஆதியும் அந்தமும் ஆன எம் இறைவா! இன்றைய காலக்கட்டத்தில் திருச்சபையில் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்நிலைச் சார்ந்த அனைவரும் எதிர்கொள்ளும், பிரச்சினைகளால் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வேதனையுறும் எம் அருள்நிலை தலைவர்கள் அனைவருக்கும் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வேதனைப்பட்டபோது நீர் அவர்களுடன் இருந்து பாதுகாத்து வழிநடத்தியது போல இன்றும் நீர் உம் உடனிருப்பைத் தொடர்ந்து வாரி வழங்கிப் பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒளியான எம் இறைவா! எங்கள் நாட்டிலும் உலகளவிலும் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களால் பல்வேறுபாதிப்புக்குள்ளாகி உறவுகளை இழந்து உடமைகளை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள எம் உடன்பிறவாச் சகோதரசகோதரிகளுக்கு ஆவியின் அருளைப் பொழிந்துத் தேவையான நலன்களையும் வளங்களையும் தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம் இந்தியத் திருநாட்டில் அனைத்து விவசாயப் பெருமக்களும் படும் வேதனைகளைப் பாரும். தங்கள் வாழ்வை இழந்து, நீர்வளம், நிலவளம் வரட்சியால் தவிக்கும் எம் மக்களின் கவலைகளைப் போக்கி நல்ல மழையைப் பொழிவித்த அவர்களின் வாழ்வை மேம்படச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4ஏழைகளின் பெலனே எம் இறைவா! உமடமை மட்டும் நம்பி வாழும் இவர்களுக்கு, தேவையில் உழல்வோருக்குச் செல்வம் படைத்தவர்கள் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து இவர்களின் வாழ்வுச் சிறக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நிறைவாழ்வை வழங்கிய எம் இறைவா எம் குடும்பங்களில் உள்ள முதியேவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, சுதந்திர இழந்து அகதிகளாக அவர்கள் படும் வேதனைகளை, உம் பார்வையினால் அவர்களின் வாழ்வுத் துலங்கவும் ஊதியம் இல்லாத வேலைக்காரர்களாக அவர்களைப் பயன்படுத்தும் அவலநிலை மாறி, அவர்கள் அமைதியோடும், நிம்மதியோடும் உம் திருஇல்லம் வந்து சேரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                www.anbinmadal.org


No comments:

Post a Comment