Wednesday, November 1, 2017

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 05/11/2017*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


மலாக்கி 1: 14 - 2: 1-2, 8-10 

1 தெசலோனிக்கர் 2: 7-9
மத்தேயு 23: 1-12

 *முன்னுரை*


அன்புடையீர்,
பொதுக்காலத்தின் 31ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்போடு வரவேற்கிறோம்.
தற்பெருமையில் ஊறி, மயக்கத்தில், தூக்கத்தில் உள்ளவர்களை, அல்லது மற்ற உயரிய எண்ணங்களுக்கு மரத்துப் போய் உள்ள யூதக் குருக்களையும், மதத்தலைவர்களையும் இயேசு இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக் காட்டுகிறார். அவர்கள் போதித்த போதனைகளுக்கும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இப்படி வாழ்ந்தவர்களைப் பார்த்துத்தான் இயேசு தனது சீடர்களிடம் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள். ஆனால் அவர்கள் செய்வது போலச் செய்யாதீர்கள் ஏனெனில் அவர்கள் சொல்வார்கள். செயலில் ஈடுபட மாட்டார்கள் என்றார். பரிசேயர்களின் போலித்தனத்தையும், அவர்களின் இரட்டை வேடத்தையும் உண்மைக்குப் புறம்பான வாழ்வையும் இயேசு சாடுகிறார் என்பது தெளிவாகிறது.
கிறிஸ்தவ வாழ்வு என்பது கற்பித்தலில் மட்டுமல்ல, மாறாக அதனைச் செயல்படுத்துவதில் தான் பொருள் பெறுகிறது. நம்மிலெத்தனை பேர் நம் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் வேறுபாடு இன்றி நாம் வாழ்கிறோம். சுய ஆத்ம சோதனைகளை செய்து பார்க்க அழைக்கப் படுகின்றோம். நம் வாழ்வில் காணப்படும் வெளிவேடங்களை அகற்றி இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ முன்வருவோம். அதற்கு தேவையான அருளை வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற மன்றாடுவோம். வாரீர்!

வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*

பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் போலித்தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பதை இன்றைய முதல் வாசகமாகிய மலாக்கி நூலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் எழுதப்பட்ட காலகட்டத்தில் இஸ்ரயேல் மக்களிடையே குருகுலத்தோருக்கு பெரும் மதிப்பு இருந்தது. ஆனால் அவர்கள் கடமைகளை மறந்து, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்த சூழ்நிலையைக் கண்ட இறைவாக்கினர் மலாக்கி அவர்களைக் கண்டித்து 'நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்.' என்று இறைவாக்கினர் மலாக்கி கடவுளின் கோபத்தை எழுதியுள்ள இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் இறைபணியாளர்களின் மேன்மையை எடுத்துக் கூறுகிறார். உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள் என்று மக்களோடு மக்களாய் இணைந்துவிட்டதை எடுத்துரைக்கும் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

 *பதிலுரைப்பாடல்*

பல்லவி:
என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும். பதிலுரைப்பாடல். திபா 131: 1. 2. 3

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு.  பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! ‘உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.’  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் தங்கள் வார்த்தைகளிலும், செயல்பாடுகளிலும் ஒன்றிணைந்துச் செயல்படவும், எங்கள் வாழ்வில் காணப்படும் வெளிவேடங்களைத் துறந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் வாழவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 எங்களைக் காத்துப் பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றச் சமயவாழ்வு வாழவும், நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நிலைக்கு ஏற்பச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, உலகத்தால் கறைபடாதபடி எம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

4. எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா! தமிழகம் எங்கும் நல்ல மழையைக் கொடுத்த இதே வேளையில் இயற்கை அழிவுகளால், இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகளால் உண்டான துன்பங்களாலும் பெரும் அவதிப்படும் முதியோர்களையும், குழந்தைகளையும், வீடு, பொருள் இழந்தோர் அனைவரையும் நோய்நொடியிலிருந்தும், பொருளாதரச் சரிவிலிருந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment