Tuesday, July 3, 2018

*ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *

*ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு *


*இன்றைய வாசகங்கள் *

 


திருப்பலி முன்னுரை


ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடத்தில் பங்கேற்க வந்ள்ள இறைகுலமே நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவத்தை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... நிராகரிப்பு, புறக்கணிப்பு!

மனித அனுபவங்களிலேயே மிக ஆழமான காயங்களை உருவாக்குவது நிராகரிப்பு, புறக்கணிப்பு. அதிலும், காரணங்கள் எதுவும் இல்லாமல், அல்லது, நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும். தன் சொந்த ஊரிலேயே இறைமகன் இயேசு பிறக்கணிக்கப்படுகின்றார்.

அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு எண்ணங்களை அகற்றி, முற்றிலும் மூடிய கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக இன்றையத் திருப்பலியில்மன்றாடுவோம்.

வாசக முன்னுரை


முதலாம் வாசக முன்னுரை


ஆண்டவருக்கு எதிராய் கலகத்தில் ஈடுபட்ட வன்கண்ணும், கடின இதயமும் கொண்ட இஸ்ரயேல் மக்களிடையே எசேக்கியேல் இறைவாக்கினராக யாவே கடவுள் அனுப்பி வைக்கிறார். அவர்கள் இறைவாக்கினரின் குரல் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இறைவாக்கினர் அனுப்பிவைக்கப்படுவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


புறக்கணிப்புகள், துன்பங்கள், துரோகங்கள், காயங்கள், வலுவற்றநிலை இவற்றின் மூலமாகவே நாம் கடவுளின் பலமுள்ள ஆயுதங்கள் ஆகிறோம் என்ற உண்மையை உணர்ந்து நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் இறைப்பணியாற்ற அழைக்கும் புனித பவுலின் குரலுக்கு இரண்டாம் வாசகத்தின் வழியாகச் செவிசாய்போம்.

பதிலுரைப் பாடல்

 

திபா 123: 1. 2. 3-4
பல்லவி: ஆண்டவரே! எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். -பல்லவி

பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். -பல்லவி

எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். -பல்லவி
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டு:


1.வாழ்வின் ஊற்றே இறைவா! நிலையான குணமடைவதற்கென நாங்கள் மகிழ்வுடன் குடும்பமான இணைந்து வந்துள்ளோம். எங்களின் முன்மாதிரியான சாட்சியவாழ்வால் உலகிற்கெல்லாம் நலம் தரும் மருந்தாக மாறிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.கருணைக் கடலே இறைவா! நிராகரிப்பு, புறக்கணிப்பு போன்ற காரணங்களால் இச்சமுகத்திலிருந்து விலகி வாழும் ஏழை எளியோர்கள், கைவிடப்பட்ட பெற்றோர்கள், அனாதைகள் மீண்டும் அன்பின் உறவில் இணைந்திடவும், புது வாழ்வுப் பெறவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றென்றும் இரக்கம் காட்டும் இறைவா! இத்திருஅவையிலுள்ள அனைவரும் புனித தோமாவைப் போல் ஐயம் நீங்கித் தெளிவுப் பெற்று நம்பிக்கைப் பெற்றவும், துணிவுடன் இறையரசை அறிவிக்கவும் தேவையான வலிமைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

4. நாங்கள் நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து எம் இளையோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நற்செயல்கள் புரிவதில் நாளுக்கு நாள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.





No comments:

Post a Comment