Tuesday, July 17, 2018

பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு


*பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு - 22-07-2018* 

*இன்றைய வாசகங்கள்*:


ஏரேமியா 23:1
எபேசியர் 2:13-18
மாற்கு 6: 30-34


*திருப்பலி முன்னுரை*:


அன்பார்ந்த இறைமக்களே!
பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு  திருப்பலியில் பங்கேற்க ஆலயத்தில் குடும்பமாக இணைந்து வந்துள்ள அனைவருக்கு இறைஇயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்.

இன்றைய உலகில் பொய்க்கு இருக்கிற வரவேற்பு உண்மைக்கு இல்லை. இன்றைய மக்கள் உண்மையான தலைவர்களைத் தேடுகிறார்கள். ஆனால், அவர்கள் சந்திக்கும் தலைவர்கள் உண்மையும் நேர்மையும் பரிவும் பாசமும் இல்லாத பாசாங்குகாரர்களாக இருக்கிறார்கள்! இன்றைய எதார்த்தம் மட்டுமல்ல; அன்றைய நிலையும் இதுதான் என்பதைக் காட்டுகிறது இன்றைய வாசகங்கள்.

இறைவாக்கினர் எரேமியாஸ் ஆயனில்லா ஆடுகளைப் போல் தவிக்கும் மக்களுக்குக் கடவுளால் வரவிருக்கும் பொற்காலத்தை முன்னறிவிக்கிறார். இறைவாக்கினர் முன்னறிவித்ததைப்போல ஆயனில்லா ஆடுகளாக அலைந்த மக்களைக் கண்ட இயேசு அவர்கள் மீது மனமிரங்குகிறார். அவர்களுக்கு நெடுநேரம் போதிக்கிறார். சிதறிப்போன ஆடுகளிடமே செல்லுங்கள் என்று தம் சீடர்களுக்குக் கட்டளை தருகிறார்.

இயேசுவின் வாழ்வுக்கும் வார்த்தைக்கும்  அடித்தளமாக அமைந்தது அவரது செபவாழ்வு. செபத்தின் மூலமே தந்தையோடு ஒன்றித்தார். வல்லமையோடு  போதித்தார் ! வல்ல செயல்களை நிகழ்த்தி மக்கள்  பணியாற்றினார். எனவே தான் தன் சீடர்களையும்  இன்றைய நற்செய்தியில் தனிமையான இடத்திற்கு சென்று ஓய்வெடுக்கப் பணிக்கிறார். இயேசு குறிப்பிடும் ஓய்வு இறைவனோடு செபத்தில் ஒன்றித்திருப்பதாகும்.  அந்த ஒன்றிப்பு இன்றைய இறமக்கள் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாததாகும். வாருங்கள் இயேசுவின் பாதையில் பயணிப்போம். புதியதோர் உலகம் படைப்போம்....


*வாசக முன்னுரைகள்*


*முதல் வாசக முன்னுரை*:


முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாஸ் மக்களை நன்னெறியில் வழிநடத்தும் ஆயர் பணியைச் சரிவர நிறைவேற்றாத அரசர்களுக்கு எதிராக இறை வாக்குரைக்கிறார். ஆடுகளைச் சிதறடித்துப் பாழாக்கும் உண்மையற்ற அக்கறையற்ற ஆயர்களை இடித்துரைத்துச் சாபமிடுகிறார். ஆயனில்லா ஆடுகளைப் போல் தவிக்கும் மக்களுக்குக் கடவுளால் வரவிருக்கும் பொற்காலத்தை முன்னறிவிக்கிறார். போலி ஆயர்களை நீக்கிவிட்டுப் புதிய ஆயர்களை ஏற்படுத்துவோம் என்று கடவுள் பெயரால் அறிக்கையிட்டு வரவிருக்கும் மெசியாவை முன் குறிக்கிறார். அவர் வார்த்தைகளின் உள்ளார்ந்த இறைஅன்பைச் சுவைத்திடுவோம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*:


தொலையில் இருந்தவர்கள் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டுள்ளோம். பிரித்து நின்றப் பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து அனைவரையும் ஒன்றுபடுத்தினார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஒருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க அவர் செய்த அருங்கொடைகளால் நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுல் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.


*பதிலுரைப் பாடல்*

திபா 23: 1-3a. 3b-4. 5. 6

பல்லவி: *ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை*.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -*பல்லவி*

தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்; சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -*பல்லவி*

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -*பல்லவி*
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -*பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன*. அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1. அன்பின் இறைவா! உம் அன்புக் குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்றுப் பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இயந்திரமாக இயங்கும் இந்தச் சமுதாயவாழ்க்கை முறையில் வேலைகளில் மூழ்கித் தத்தளிக்கும் நாம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனுக்கும், நம்முடைய நலனுக்கும் தகுந்த இடத்தை வழங்கவும், அடுத்தவர் தேவை அதிகம் என்பதை உணர்ந்து, நமது தேவைகளை ஒதுக்கிவிட்டு, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

3. இன்று உலகில் நடைபெறும் மாற்றங்களால் நலிவடையும் என் விவசாயப் பெருமக்களை உம் முன் வைக்கிறோம். அரசாங்கத்தாலும், மற்றவர்களாலும் அவர்கள் உழைப்புச் சுரண்டப்படாமல், உழைப்புக்கேற்றப் பலனையும் மதிப்பையும் அடையவும், பொருளாதர வளர்ச்சிக் கண்டு இன்புறவும்,அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உம் பணிக்கு எம்மை அழைத்த இறைவா! தேவ அழைத்தல் எந்த நிலையிலும் உண்டு என்பதை உணர்ந்து, உமது பணிச் செவ்வனே செய்யவும், எம் தாய்நாட்டிலிருந்து உம் சேவைக்காய் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆயனின் பணிகளைச் சிறப்புடன் செய்திட நல்ல மனதையும், உடல்நலத்தையும், உம்மேல் உறுதியாக நம்பிக்கையுடன் அருட்பணிகள் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நாங்கள் தூயவராக வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். இதுவே எங்களுக்கு உமது திருவுளம் என்பதைத் திருத்தூதர் பவுல் வழியாக எங்களுக்கு எடுத்துரைத்தீரே நாங்கள் தூயவராக வாழ்ந்து உமது திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்குத் தூயதோர் உள்ளத்தைப் பெற ஆவியாரின் கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org

No comments:

Post a Comment