Tuesday, September 10, 2019

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.விடுதலைப் பயணம் 32:7-11,13-14
1திமொத்தேயு 1:12-17
லூக்கா 15:1-32திருப்பலி முன்னுரை:


 காணாமல் போன ஆட்டைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்ளும் இறைவனைத் தேடி இன்று ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் மகிழ்ச்சிக்குரிய அன்பர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் மனமாற்றத்தோடு, மன்னிப்பையும் பெற அன்புடன் வாழ்த்துகிறோம்.

பொதுவாக நாம் ஒரு பொருள் காணாமல் போய், மீண்டும் தேடிக் கண்டு, அதைப் பெறும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்படி இருக்கத் தான் படைத்த மானிடர் தன்னை விட்டு வெகுதூரம் சென்றவர் மீண்டும் மனமாற்றம் அடைந்துத் தன்னிடம் வருதைக் காணும் தந்தையாம் கடவுளின் மகிழ்ச்சிக்கு எப்படி இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்கின்றன.

விடுதலைப் பயணநூலில் மோசே கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்களின் மேல் உள்ளதை அறிந்து அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுட்டி மக்களைக் காப்பாற்றினார். திருத்தூதர் பவுல் இயேசுவிற்கு எதிராய் நடந்தாலும் கடவுள் தனக்காக மனமிரங்கியதை நினைவுகூர்கின்றார்.

இந்த நாளில் இறைவனின் மகிழ்ச்சிக்குக் காரணமான நம் மனமாற்றத்தையும் அதன் பலனாக மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. இறைஇரக்கத்தை வேண்டுவோம்..


வாசகமுன்னுரை:முதல் வாசக முன்னுரை:


இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளுக்கு எதிராகக் கன்றுக்குட்டியை வழிபாட ஆரம்பித்தனர். உண்மைக் கடவுளிடமிருந்து வெகுதொலைவுக்குச் சென்றனர். எனவே கோபம்  கொண்ட கடவுள் மோசேயிடம் தன் மக்களை அழிக்கப்போவதாகக் கூறியபோது, மோசே கடவுளிடம் அவரின் அன்புக்குரிய இறையடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நினைவுக் கூர்ந்து மக்களுக்காக மன்றாடித் தண்டனையிலிருந்து காப்பாற்றியதை எடுத்துரைக்கும் முதல்
வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராய் நடத்திய போரட்டத்தை உணர்ந்தும் கடவுள் அவருக்குக் காட்டிய இரக்கத்தை நன்றியோடு பதிவுச் செய்கிறார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொள்ள இருப்போருக்கு அவர் முன்மாதிரியாய் விளங்க அருள் புரிந்ததைப் பெருமிதத்துடன் நமக்கு விவரிக்கும்  இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்தலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..பதிலுரைப்பாடல்


திருப்பாடல் 51:1-2,10-11,15,17
பல்லவி: நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்.

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.  என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்-பல்லவி

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.  உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.  -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:1. என்றென்றும் இரக்கமுள்ள எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தையும், மன்னிப்பின் மாண்பையும் உணர்ந்தவர்களாய், அடுத்திருப்பவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் தந்தையின் மனபாக்குவத்தையும், அன்பையையும் பெற்றுச் சாட்சியவாழவு வாழத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அருளே உருவான எம் இறைவா! புனித அன்னை தெரசாள் போல் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மீது அளவில்லா அன்பும், நம்பிக்கையும் கொண்டு தன்னலமற்ற சேவையில் அவரைப் போல் எமக்கு அடுத்திருப்பவர்களை இறைமகன் இயேசுவாகப் பாவித்துத் தொண்டுள்ளம் தொண்டவர்களாய் பணிவிடைச் செய்து வாழ்ந்திட அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! கைவிடப்பட்ட சிறார், நோயாளர், வயதானவர்கள், உணவு அல்லது வேலையின்றி இருப்போர், வீடற்றவர், கைதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் என, உதவி தேவைப்படும் அனைவருக்கும், பணிபுரிந்து வருபவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும், பொருளாதார உதவிகளைப் பற்றிடவும்,  உம் அன்பில் என்றும் நிலைத்திருந்துப் பணியாற்றிட வேண்டிய நல்ல சூழல் அமைந்திடத் தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் வாழும் எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். தேவையில் இருக்கும் எம் சகோதர, சகோதரிகள் முன்பாக, எங்கள் பார்வையைக் குறைத்து, எம் இதயங்களைக் கடினப்படுத்தும் தன்னலத்தைத் தோற்கடிக்கவும், குடும்பங்களில் ஆரோக்கியமும், நட்புறவும், சமாதானமும், ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்திட வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. பரிவன்புமிக்க எம் இறைவா! எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றித் தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment