Thursday, September 5, 2019

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு


 பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

 

சாலமோனின் ஞானம் 9:13-19
பிலமோன் 1:9b-10,12-17
லூக்கா  14:25-33

அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா  
திருப்பலி முன்னுரை


நமது தாய் திருச்சபை அன்னை மரியாளின் மகத்துவத்தை ஐந்து பெருவிழாக்கள் – மூன்று திருவிழாக்கள் – பதினேழு நினைவு நாட்கள் மூலம் பறைசாற்றிக் குதுகலிக்கிறது. நாம் மகிழ்ந்துக் கொண்டாடும் விழாக்களில் ஒன்றுதான் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா.

“அன்னை மரியாவை நாடாமல் இறையருளைப் பெறுவதற்கான விருப்பம் என்பது சிறகுகளின்றிப் பறக்க விரும்புவதைப் போன்றது.” என்றார் திருத் தந்தை 12ம் பத்தி நாதர்.

அமல உற்பவியாய் – அழகின் முழுமைக் கொண்டவளாய் – அலகையின் தலை மிதிக்க முன் குறிக்கப் பட்டவளாய் – அகிலம் உருவாகும் முன்னரே ஆண்டவரின் திட்டத்தில் இடம் பெற்றவளாய்த் திகழ்ந்தவள் நம் அன்னை,

‘’ அருள் நிறைந்தவரே வாழ்க “ என்று ஆண்டவரின் தூதராலும் – ‘’ பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே “ என்று அன்பு உறவினர் எலிசபெத்தாலும் அன்னை புகழ்ந்தேற்றப் படுகிறார்.

தாழ் நிலை நின்றத் தன்னை, தலைமுறைகள் போற்றும் பேறுடையாளாக உயர்த்திய இறைவனின் கருணையை எண்ணி, இதயம் களி கூர்ந்து அன்னையின் இதழ்கள் உதிர்த்தவையே இவ்வார்த்தைகள். “ என் ஆன்மா ஆண்டவராம் கடவுளை ஏற்றிப் போற்றுகிறது.”

தாழ்ச்சியையும் நன்றி உணர்வையும் நமக்கு உணர்த்தும் இவ்வார்த்தைகளை , நாமும் நமது உள்ளத்தில் இறுத்தி ஆவியிலும் உண்மையிலும் அதனைத் தியானிப்பவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம். இறையருளைப் பெற்றுச் செல்வோம்.வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


” நான் உம் அடியான்: வலுவற்ற மனிதன்: குறுகிய வாழ்வினன்: நீதித்தீர்ப்பும் திருச்சட்டமும் பற்றிச் சிற்றறிவுப் படைத்தவன்” என்று தன்னிலை உணர்ந்து அதே வேளையில் யூதர்களின் முரட்டுத் தனத்தையும் உணர்ந்துக் கடவுளிடம் ஆசிரியர் கேட்ட ஒரு வேண்டுதல் என்னவாகயிருக்கும்? அது தான் இறைவனின் அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும் என்பதே. சாலமோனுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்த ஞானத்தை நிறைவாய் நாமும் பெற்றிட இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்து இறைவனை வேண்டுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலிருந்தபோது கொலோசை நகர நண்பரான பிலமோன் என்பவருக்கு எழுதிய இக்கடிதத்தில் பிலமோனின் அடிமை ஒனேசிம் என்பவரை மன்னித்து அன்புடன் சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப் பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமைச் செய்தோரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரியக் கருத்தை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

பதிலுரைப்பாடல்


திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.


மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;  அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.  எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:1. அனைவரும் மீட்படைய விரும்பும் எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை உள்ள அனைவரும் உமது திட்டத்தையும், உமது திருவுளத்தையும் உய்த்துணர்ந்துத் திருஅவையைத் திறம்பட நடத்திடத் தேவையான ஞானத்தையும், தூய ஆவியாரின் அருளும் பெற்றிடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. புனிதரின் பேரின்பமாகிய எம் இறைவா! அன்னை மரியாளைப் போல தாழ்ச்சியும், பொறுமையும், அன்பும், தொண்டுள்ளமும் பெற்று அவரைப்போல் என்றும் தொண்டாற்றி அன்னைப் போல் உம்மை எம் உள்ளத்தில் வைத்துக் கொள்ள அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மரியாளை அன்னையாக எமக்கு தந்த இறைவா! பெண்மையைப் போற்றி மதித்து, பெண்சிசுக்களும் சமூகத்தில் வாழ உரிமைப் பெற்றவர்களே என்பதனை உணர்ந்து, கரு அழிப்பு, கலைப்புச் செய்யாது நீர் தரும் பரிசினைப் போற்றிப் பாதுகாத்திடவும், பிறப்பின் அர்த்தம் நிலைநாட்டப்பட, உமது திருவுளம் அறிந்து நடந்திடவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கை, எம் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், அன்னைg; பக்தனாக இல்லாமல் சீடராய் வாழ்ந்து, உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டும் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எல்லாரும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக உள்ள எம் ஆசிரியர் பெருமக்களை உம் அன்பு அரவணைப்பில் ஒப்படைக்கின்றோம். அவர்களை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் அருள் வாழ்வில் சிறந்து விளங்கிடவும், நலமும், வளமும் பெற்றுச் சிறப்புடன் உழைக்கவும், சிறந்த நல்சான்றோர்களை இவ்வுலகிற்கு இன்னும் அதிகமாக வழங்கிடத் தேவையான ஞானத்தையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


No comments:

Post a Comment