Monday, September 16, 2019

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 25 ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.ஆமோஸ் 8:4-7
1திமோத்தேயு 2:1-8
லூக்கா 16:1-13

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் அன்பர்களே! நிலைவாழ்வைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

யாருக்குப்பணிச் செய்வது?, நிறைவாழ்வு அடையத் தேவையான முன்மதி என்ன?, செல்வத்திற்காக விவேகத்துடன் வாழ தெரிந்த நாம் அருள் வாழ்வு வாழ எடுக்கும் முயற்சி என்ன? நம் வாழ்வின் இலக்கு - பணமா? இறைவனா? என்று பல கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் பதில் தேட உதவுகின்றது.

வாழ்க்கைக்குப் பணம் தேவை. ஆனால் விவேகமாய்ப் பணம் தேடும்போது நாம் அருள்வாழ்வை இழந்து விடுகிறோம். நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்துக் கொள்வதை விட, சொத்துக்களைச் சேர்ப்பது, நம்முடைய குறிக்கோளாக இருந்தால், கடவுள் நமது தலைவர் அல்ல. இந்த உண்மை, நம்மிடம் உள்ளச் சொத்துக்களுக்கும் மட்டுமல்ல, நம்மிடம் உள்ள மற்றத் திறமைகளையும் சேர்த்துத் தான் குறிப்பிடப்படுகிறது. நாம் எல்லாரும், ஏதாவது ஒரு திறமையோடு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்தத் திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்கப் போகிறோம்?

நிரந்தரமற்ற இவ்வுலகப் பொருள்களையும், நிலைவாழ்வுக்குரிய திடமான நம்பிக்கை, ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்தப் படுகிறது. இந்த நாளில் இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களாக மாறிடப் பொறுப்புள்ள பணியாளராக வாழ்ந்திட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. நம்பதக்கவராய், பெறுப்புள்ள பணியாளராய் வாழ்ந்திடுவோம்...

வாசகமுன்னுரை:முதல் வாசக முன்னுரை:பழைய ஏற்பாட்டின் காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவாக்கினர் ஆமோஸ் இஸ்ரயேலரிடமிருந்த சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். வறியோரை ஏமாற்றி அவர்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு, கள்ளத் தராசினைப் பயன்படுத்துவோர்க்கு எதிராக யாவே கடவுள் தனது கோபத்தைக் வெளிக்காட்டுகின்றார். எச்சரிக்கை விடுக்கின்றார். அதே நிலையில் தான் இன்றும் நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி, அடுத்தவரை ஏமாற்றுபவர்களுக்குக் கடவுளின் கோபத்தை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் பவுல் நாம் நம்மைச் சுற்றியிருக்கும் அனைவருக்காகவும் பரிந்துரைத்து இறைவனை மன்றாட, நன்றி கூறிட அன்புடன் அழைக்கின்றார். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்படையதாமாகும் என்கிறார். கடவுளுக்கும் மானிடருக்கும் இடையே அமைந்துள்ள பாலம் தான் இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசு கிறிஸ்துவின் திருத்தூதராகவும், நற்செய்திப் போதகராகவும் பணியாற்றும் திருத்தூதர் பவுல் தூய உள்ளத்தோடு, கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்ய அழைக்கும் திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

பதிலுரைப்பாடல்
ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
திருப்பாடல் 113: 1-2. 4-6. 7-8


ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி


மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி


ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. எங்கள் மீட்பராகிய இறைவா! வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது என்ற இறைவாக்குக்கு இணங்கச் செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாத்து நல்ல உடல் சுகத்தையும் ஆன்மீகப் பலத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கல்வாரியை நோக்கி வாருங்கள், கல்வாரியைப் பாருங்கள் என்று புனித எஞ்சலினா கூறியதுபோல் நாங்கள் உம் கல்வாரி நோக்கி வரவும், நல்ல கள்வனின் சிலுவையில் மீட்பு பெற்றது போல நாங்களும் மீட்படையவும், சிலுவையை உற்று நோக்கிப் பாவங்களிலிருந்தும், நோயிலிருந்தும் விடுதலை அடையவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா! நாங்கள் உம் ஞானத்தையும், இரக்கத்தையும், உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய், நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும், நீர் எமக்குக் கொடுத்த திறமைகளைப் பிறருக்காய் பயன்படுத்தவும் அதற்குத் தேவையான ஞானத்தை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 4. அல்லனவற்றை அழித்து நல்லன செய்யும் இறைவா! நேர்மையானவாழ்வு வாழவும்,  ஆணவபோக்கை விட்டு விட்டு குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும் அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..


www.anbinmadal.org

1 comment: