Monday, October 28, 2019

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்


சாலமோனின் ஞானம் 11: 22 - 12: 2
2திமோத்தேயு 1:11 – 2:2
லூக்கா 19:1-14

முன்னுரை


திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடானது, இரு கண்களாக நம் மனமாற்றம், இறைவனின் மீட்பு இவ்விரண்டையும் நம் சிந்தனைக்கு விருந்தாகத் தருகின்றது! ஒன்று சக்கேயுவின் கண்கள் மற்றென்று இயேசுவின் கண்கள். கண்கள் சந்தித்தன. மனமாற்றம் விரைவாக ஏற்பட்டது. இயேசுவின் வரவால் அவர் இல்லத்திற்கு மீட்பு உண்டானது. குள்ளமான சக்கேயு இன்று உயர்த்தப் பட்டார். எழுந்து நின்றுத் தவறுகளை ஏற்றுக்கொண்டு அதற்குக் கைம்மாறுச் செய்யவும் தயாரானார். சக்கேயு காட்டு மரத்தில் ஏறினார் எரிக்கோவில். இயேசு கல்வாரி மரத்தில் ஏறினார் எருசலேமில். சக்கேயு ஏறியதால் அவருக்கு மீட்பு கிடைத்தது. இயேசு ஏறியதால் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்பு கிடைத்தது.

திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்திருக்கும் நமக்கு இந்நிகழ்வுகள் எத்துணை அற்புதமாக உணர்வுகளைத் தருகின்றது. இந்த நிலை உயர வேண்டுமென்றால் முதலில் இயேசுவின் கண்களும், நம் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அதற்காக இத்திருப்பலியில் நற்கருணை நாதரை உற்று நோக்குவோம். நிலைவாழ்வுக்கான மீட்பை அவரிடம் பெற்றிடுவோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

இறைவனின் கண்பார்வை மனுக்குலத்தின் மேல் உள்ளது. தீமை, பாவம், குற்றம் என விரிசல் விழும் நேரங்களில் அங்கே அவரின் பரிவிரக்கம் நிறைவையும், முழுமையையும் கொண்டுவருகிறது. உயிர்கள் மீது அன்புக் கூர்கின்றவர் எல்லாவற்றையும் வாழ விடுகின்றார். தவறு செய்பவர்களை மெல்ல மெல்லத் திருந்த அவகாசம் தருகிறார் என்று சாலமோன் கடவுளின் பரிவிரக்கத்தை எடுத்துரைக்கும் சாலமோன் ஞானநூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக எதிர்நோக்குடன் காத்திருந்த தெசலோனிக்கியத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலும் இன்று உங்கள் அழைப்புக்கு ஏற்ப உங்களைத் தகுதியாக்குங்கள் என்றும் நல்லெண்ணத்தால் தூண்டப்பெறும் நற்செயல்களில் நிலைத்திருங்கள். ஆண்டவரின் நாள் வந்துவிட்டது என்ற கூறினால் உள்ளம் கலங்கவேண்டாம் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எழுதுகின்றார். தூய பவுலடியாரின் இவ்வேண்டுகோளைக் கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப்பாடல்

என் கடவுளே, என் அரசே! உம் பெயரை என்றும் போற்றுவேன்.
திருப்பாடல்145: 1-2. 8-9. 10-11. 13

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.  பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.   பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

உன் ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்பு இறைவா! எம் திருஅவைத் தனது சொல்லாலும் செயலாலும் தன் கடமையிலும், நெறிதவராது, இவ்வுலகில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்து வாழ்ந்த வாழ்வை இவ்வலகிற்குப் பிரதிபலிக்கக் கூடியவர்களாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. நேர்மையின் நாயகனான எம் இறைவா! எங்கள் நாட்டில் நிலவும் மதம், மொழி, இனவேறுபாடுகள் இவைகளைக் களைந்து நாட்டு நலனில் அக்கறை கொண்டு மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான, வேலைவாய்ப்புகள், கல்வியறிவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்துச் சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. உலகில் நிலவும் பஞ்சம் கொலை, கொள்ளை, தீவிரவாதம், மதச்சண்டைகள் இவை அனைத்தும் மனிதனின் சுயநலத்திற்காக. இப்படிபட்டத் தீமையான செயல்களில் தங்களை ஈடுபடுத்தாமல் அமைதியோடும், சமாதானத்தோடும் வாழத் தேவையான நல்ல மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. ஒளியான எம் இறைவா! இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலக நாட்டங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கிப் பரிவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


                                                   www.anbinmadal.org

No comments:

Post a Comment