Wednesday, January 29, 2020

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு - முதல் ஆண்டு

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

ஆண்டவரை ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணித்த விழா


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


மலாக்கி 3: 1-4
எபிரேயர் 2: 14-18
லூக்கா 2: 22-40


திருப்பலி முன்னுரை


இன்றைய ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று, இறைவனைத் தொழுதிட கூடியிருக்கின்ற இறைமக்கள் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இறைஇயேசுவின் அன்பும் சமாதானமும் நிறைந்து நிலைத்திட வாழ்த்துகிறோம்.

"ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்னும் திருச்சட்டத்தை நிறைவேற்றும் வண்ணமாக, குழந்தை இயேசுவை ஆலயத்திற்கு எடுத்து வந்து அர்ப்பணம் செய்த நிகழ்வினை அன்னையாம் திருஅவை இன்று விழாவாகக் கொண்டாடுகின்றது. இந்த நாளில் இறைமகன் இயேசு தம்மீது நம்பிக்கை கொண்ட தம் மக்களை சந்தித்து, தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். தூய ஆவியாரின் ஏவுதலால் கோவிலுக்கு வந்த முதியோரான புனிதர்கள் சிமியோனும், அன்னாவும், அதே ஆவியாரால் உள்ளொளி பெற்று, அவரை ஆண்டவர் என அறிந்து அக்களிப்புடன் அறிக்கையிட்டனர். இந்த இரு புனிதர்களின் தளராத இறைநம்பிக்கையும், ஜெபவாழ்வும், மீட்பரை அடையாளம் கண்டுகொள்ள துணை செய்தன. 


ஆழமான நம்பிக்கையோடு, இடையறாத இறைவேண்டலில் கடவுளுக்கு உகந்த வாழ்வை மேற்கொண்டிருந்தால், ஆண்டவரை அடையாளம் கண்டுகொள்ளும் இறைஅனுபவத்தை நாமும் பெற்றிடுவோம் என்பது திண்ணமே. ஆண்டவரை ஆலயத்தில் அர்ப்பணித்த இன்றைய நாளில், தங்களையே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ்கின்ற குருக்கள், துறவறத்தார் மற்றும் அருள்சகோதரிகளுக்காக இந்த திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.



வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை


உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற மீட்பர் எப்போது வருவார்? அவரது வல்லமை எத்தகையது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதல் வாசகம் முன்வைக்கிறது. “நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரென்று தம் கோவிலுக்கு வருவார்; அவரது வல்லமை புடமிடுகின்ற நெருப்பு போன்றது; தம் மக்களை பொன், வெள்ளியைப் போல புடமிட்டு தூய்மையாக்குவார்” என்று இறைவாக்கினர் மலாக்கி இந்த முதல் வாசகத்தில் முன்னறிவிக்கிறார்.


இரண்டாம் வாசக முன்னுரை


இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமை குருவாகிய இறைமகன் இயேசு, தம் மக்களுக்கு பாவத்திலிருந்து விடுதலை தர இவ்வுலகில் அவதரித்தபோது, இரத்தமும், சதையும் கொண்ட சாதாரண மனித உருவிலே அவர்களோடு உறவாட திருவுளம் கொண்டார். சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையை, தனது சாவினாலே அழித்து, அடிமைப்பட்டிருந்த தம் மக்களை விடுவித்தார். விண்ணிலும், மண்ணிலும் எல்லா அதிகாரங்களையும் கொண்டிருந்த கிறிஸ்து, வானதூதருக்கு துணை நிற்காமல், நம்மில் ஒருவரானார் என்று திருத்தூதர் புனித பவுல் எபிரேயருக்கு எழுதியத் திருமடலில் எடுத்துரைக்கிறார்.


பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 51: 12-13. 14-15. 16-17

பல்லவி: தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே, கடவுளே! படைத்தருளும்.


கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். (பல்லவி)

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். (பல்லவி)

கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். (பல்லவி)


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. திருப்பொழிவு செய்யப்பட்டவர்களை, அனைத்து தீங்கிலிருந்தும் விடுவித்துக் காக்கும் எம் இறைவா! திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரையும் உமது இறைதூதுப்பணியாளராக நீர் விடுத்த அழைப்பை நன்கு உணர்ந்து உமது அன்பும், உடனிருப்பும் எங்களுக்கு இவ்வுலகில் எல்லா வெற்றிகளையும் தேடித்தரும் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டிய வரங்களை வழங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உயர்ந்த இடத்தில் எம்மை நிலையாய் நிற்கச் செய்யும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உமது அன்பை நிறைவாய் பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும் வாழவேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்ற எம் தந்தையே இறைவா! அன்பே பிரதானம் என்பதை எம் நாட்டு தலைவர்களும் மக்களும் உணர்ந்திடவும்; பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் பெற்றுச் சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பே உருவான இறைவா, இன்றைய நாட்களில் உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கியக் காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அகதிகளாய் பிறநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டி அடைக்கலமும், அவர்களின் தனித்தன்மைகள் போற்றப்படவும், எல்லோரையும் தம் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ளும் நல் எண்ணங்களை அருளவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment