Sunday, January 12, 2020

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - முதல் ஆண்டு

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - முதல் ஆண்டு

 

 

 *இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசாயா 49:3,5-6
1கொரிந்தியர் 1:1-3
யோவான் 1:29-34


*திருப்பலி முன்னுரை*


இன்று பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசுகிறிஸ்துவுக்குச் சான்றுப் பகர்ந்திட வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

“கடவுளின் ஆட்டுடிக்குட்டி” என்று கூறும் திருமுழுக்கு யோவான் இயேசுகிறிஸ்துவிற்குச் சான்றுப் பகிர்வதின் மூலம் மெசியாவை இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தூயஆவி புறாவடிவில் இறங்கி வந்து யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூயஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று அடையாளம் காட்டப்பட்டவரை “நானும் கண்டேன்” என்று பதிவுச் செய்கிறார்.

இறைவனின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று இயேசு வருணிக்கப்பட்டதை நாளும் திருப்பலியில் திருவிருந்திற்கு முன் நினைவூட்டப்படுகிறது. பாவங்களை மன்னிப்பதை மட்டுமல்ல. புண்ணியங்களாக மாற்றுவதே இயேசுவின் பணி. மனிதகுலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. இந்நிலையில் இயேசு செம்மறியாக நமக்காகத் தன்னையே கையளித்தார்.

பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல பாவத்திலிருந்து விடுதலையடைந்துப் புனித வாழ்வு வாழ அழைப்பும் விடுக்கின்றார். இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்து அவரது சீடர்களாக வாழ உறுதி எடுப்போம். அதற்குத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். வாரீர்! *வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*

யாக்கோபின் கோத்திரங்களைக் கட்டியெழுப்ப, எஞ்சினோரைக் கூட்டிச் சேர்க்க, இறைவனால் அழைக்கப்பட்ட இறை ஊழியர்கள் பலர் வந்தார்கள். ஆனால் இஸ்ரேயல் குலம் தன் இனத்தை மட்டுமே மீட்க மெசியா வருவார் என்று எண்ணியது. ஆனால் இவ்வூழியன் அனைத்துக்குலத்திற்கும் மீட்பராவார்: ஒளியாவார் என்று இயேசுவைக் குறித்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் மனதில் பதிவு செய்வோம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகத்தில் தம் மக்களை மீட்டுக் கொணர இறைவன் இறைவாக்கினர்களை அழைத்ததுபோல, தம் ஏகமகனை இறை ஊழியனாக அழைத்துதுபோலத் தம்மையும் அழைத்துள்ளார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றார் திருத்தூதர் பவுலாடியார். நாமும் திருமுழுக்கால் கிறிஸ்துவுக்குள் தூயவர் ஆக்கப்பட்டவர்களே! அழைக்கப்பட்டவர்களே! நன்றி உணர்வுடன் மனதில் பதிவுச் செய்வோம்.வாழ்ந்துக் காட்டுவோம் வாரீர்.


 பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே உம் அடியான்; உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
திருப்பாடல் 40:1 மற்றும் 3, 6-7, 7-8, 9நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.  புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; - பல்லவி


 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.  எனவே, 'இதோ வருகின்றேன்; - பல்லவி


என்னைக்குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;  என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;  உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' - பல்லவி


என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


 1.  சீயோனிலிருந்து நல் ஆசீர் வழங்கும் எம் இறைவா! உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் தூயஆவியில் புத்துணர்வுப் பெற்று எம் மீட்பராம் இயேசுவின் மாட்சிமையை உணர்ந்துத் தங்கள் வாழ்க்கையின் மூலம் உலகம் மாந்தர்கள் அனைவரும் தம் அழைப்பை ஏற்று இயேசுவின் சீடர்களாய் அன்பைப் பகிர்ந்துடும் மக்களாய் வாழ்ந்திட அருளாசீர் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. உம் திருமலையிலிருந்து எமக்குப் பதிலளிக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களின் தேவைகளை அறிந்து எம் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்தருளும். நாங்கள் உம்மிடம் வேண்டிக்கேட்பதைவிட மேலானவற்றைப் பொழிந்து எம் குடும்பங்களில் அன்பும் நட்பும் மலர அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டிய ஞானத்தையும் விவேகத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. எம் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமுமான எம் இறைவா! வல்லரசுகளால் போர் எழும் ஆபத்துகளிலிருந்து இவ்வுலத்தை காத்து, அனைத்துலக ஆட்சியாளர்களின் உள்ளத்தில் பகைமை எண்ணங்கள் நீங்கி அன்பும் அமைதியும் ஏற்பட்டு. அவலங்கள் நீங்கி வளமைப் பெற்ற வாழ வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. உம் இறக்கைகளின் பாதுகாப்பில் எம்மை அரவணைக்கும் எம் இறைவா! உலகெங்கும் உள்ள இளையோர்களை மாற்றங்களால் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகச் சுகபோகவாழ்க்கையிலிருந்து மீட்டுத் தன்னலமற்ற சேவை வாழ்க்கையில் ஈடுபடவும், சமுதாயத்தில் தங்களின் தூயவாழ்வால் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. எம் வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா! எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க, உதவிட வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 www.anbinmadal.org

No comments:

Post a Comment