Monday, January 6, 2020

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா - முதல் ஆண்டு

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா

 


திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. இறைமகன் இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர் இப்பொழுதுப் பொதுவாழ்வில் நுழையும் முன் அவருக்குத் தேவைப்பட்டது தூய ஆவியாவனர் ஆற்றலும், துணிவுடன் தன் மூன்று ஆண்டுக் காலப் பொது வாழ்வில் மக்களைச் செம்மைப்படுத்த, தந்தையாம் கடவுளின் அருளும் தேவைப்பட்டபோது, அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறும் வேளையில் ஆவியானவர் இறங்கி வர, தந்தை தன் ஓரே மகனிடம் புரிப்படைவதையும் வானத்திலிருந்து கேட்டக் குரலொலிச் சுட்டிக்காட்டுகின்றது.

திருமுழுக்குப் பெற்ற நாம் இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசகம்இறைவாக்கினர் எசாயா இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தெளிவாக இன்றைய வாசகத்தின் வழியாகப் பதிவுச் செய்கிறார். இதோ என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது என்ற ஆண்டவர் பெருமிதம் கொள்கின்றார். அவர் வழியாக நாம் அடையவிருக்கும் நன்மைகளை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்டுச் சிந்தித்து ஆண்டவரில் பூரிப்படைவோம்.


இரண்டாம் வாசகம்இந்த இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட, பெறப்போகும் அருள்வளங்களை எடுத்துரைக்கின்றார். கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. அலகையின் சோதனைகளிலிருந்து நம்மை விடுவித்து என்றும் நன்மை செய்துகொண்டே இருக்கின்றார். இறைவாக்கினார் எசாயாவைப் போல் புனித திருத்தூதர் பேதுருவும் ஆண்டவரின் அருள்கொடைகளை ஆழமாக நம் உள்ளத்தில் பதிவுச் செய்யும் இவ்வாசகத்தைக் கவனித்து இறையருள் பெறுவோம்.


பதிலுரைப் பாடல்

திபா 29: 1-2. 3ac-4. 3b,9c-10 (பல்லவி: 11b)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!

இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி


ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி


ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நலம் தரும் புத்தாண்டை அளித்த எம் இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம் கனிவானத் தந்தையே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே இறைவா! எம் அரசியல் தலைவர்கள் , அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா! இளைஞர் ஆண்டுக் கொண்டாடும் எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment