Tuesday, March 3, 2020

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - முதல் ஆண்டு

தவக்காலம்  இரண்டாம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


தொடக்கநூல் 12:1-4
திமோத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
 தவக்கால இரண்டாம் ஞாயிற்றைச் சிறப்பிக்க மனமாற்றங்களைத் தேடி தெய்வத்தின் திருவடி நோக்கி வந்துள்ள இறைமகள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் நம்மை மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. மாற்றம் இல்லையேல் நம் வாழ்வில் ஏற்றமும் இல்லை. ஆபிரகாம் தன் நாடு, வீடு, உற்றார் உறவினர்கள் இவை அனைத்தையும் விட்டுவிட்டு அறியாத புதிய நாட்டிற்குச் செல்லும்போது பல துன்பங்களை அனுபவித்தார். இறுதியில் கிடைத்த பரிசு விசுவாசத்தின் தந்தை ஆனார்.

இறைவனின் மகிமையை இயேசுவின் உருமாற்றத்தின்போது திருத்தூதர்கள் மூவரும் நேரில் கண்டனர். ஆனால் தாபோர் மலை அனுபவம் அடையும் முன் இறைமகன் இயேசு ஒலிவமலை அனுபவமும், கல்வாரி மலை அனுபவமும் பெற வேண்டும் என்பதைச் சீடர்கள் அறியவில்லை. வரப்போகும் துன்பத்தை எதிர்கொள்ளும் துணிவுக்கு முன் அச்சாரமாக இந்த மகிமையான ஒளிமயமான உருமாற்றத்தைக் காட்டுகிறார் இயேசு.

மீட்பின் பாதை என்பது புதுமைகளின் பாதை அல்ல. மாறாகத் துன்பங்கள் மற்றும் மாடுகளின் பாதை என்பதை இயேசு நன்கு உணர்கின்றார். இயேசு சந்தித்ததை   நம் வாழ்வில் இத்தகைய சூழல்களைச் சந்திக்கின்றோம். இப்படிப்படச் சூழ்நிலையில் இயேசுவைப்போல் செபத்தின் வழியாக இறை உதவியை நாடும்போது நாம் செல்ல வேண்டிய வழியை இயேசு நமக்குச் சுட்டிக்காட்டி நம்மை வழிநடத்துவார்.



 வாசகமுன்னுரை



 முதல் வாசக முன்னுரை


தொடக்கநூலில் இறைவன் ஆபிரகாமை அவர் அறியாத நாட்டிற்குச் செல்லுமாறு அழைக்கின்றார். ஆனால் ஆபிரகாம் செல்ல வேண்டிய பாதை அவருக்குத் தெளிவாக் கொடுக்கப்படவில்லை. வாக்களிக்கப்பட்டவை நிறைவேறவில்லை இருந்தாலும் அவர் மனம் தளராமல் இறுதிவரைக் கடவுளின் மேல் நம்பிக்கைக் கொண்டார். உயர்ந்த நிலையை அடையவதற்காக ஒன்றை இழப்பது மிகக் கடினமாக இருந்தாலும் அஃது ஒரு சுகமான சுமையே என்பதை இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் மூலம் எடுத்துக்காட்டுகிறது..


 இரண்டாம் வாசக முன்னுரை


நற்செய்தியின் பொருட்டு உரோமைச் சிறையில் இருந்து திருத்தூதர் பவுல் தம் நண்பர் திமோத்தேயுவுக்கு எழுதிய மடலின் ஒரு பகுதியே இன்றைய வாசகம். துன்பத்தால் துவண்டுபோய் விடாதபடியும், மனவிரக்தியில் வெந்துப் போகாதபடி இருக்கும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறார். கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கின்றார். துன்பத்தின் வழியாகத்தான் நமக்கு மீட்பு உண்டு. நாம் எவ்வாறு துன்பத்தை எதிர்கொள்கிறோம் என்பதைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் தூண்டுகிறது

 பதிலுரைப் பாடல்

 பல்லவி : ஆண்டவரே! உமது பேரன்பு எங்கள் மீத இருப்பதாக!
திருப்பாடல்கள்: 33: 4-5, 18-19, 20, 22


ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.  அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
 
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
 
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!  பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


ஒளிரும் மேகத்தினின்று,தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்.

நம்பிக்கையாளரின்  மன்றாட்டுகள்


1 நம்பிக்கைக் கொள்வோரைச் சூழ்ந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! இத்தவக்காலத்தில் துன்புறும் உம் திருச்சபைக்காக வேண்டுகிறோம். உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டுத் துன்பங்களையும், தீவிரவாத்தையும் ஏதிர்கொள்ளும் திருச்சபையின் பணியாளர்கள் அனைவருக்கும் துன்பத்தால் துவண்டுபோய் விடாதபடியும், மனவிரக்தியில் வெந்துப் போகாதபடி இருக்கும்படியும் இருக்கவும், ஆபிரகாம் போல் தளராத நம்பிக்கையில் வாழவும் வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. எம் துணையும் கேடயமும்  ஆன எம் தந்தையே ! இறைவா! நீர் வாக்களித்த நாட்டையும் வாழ்வையும் அடைய ஆபிரகாம் கொண்ட பொறுமையும், நம்பிக்கையும் எங்கள் குடும்பத்தார் அனைவரும் உணர்ந்து, துன்பத்தின் முடிவில் வெற்றியையும், மகிழ்ச்சியையும் பெற இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்தி இறைமகன் இயேசுவைப்போல் பிறருக்காக உழைத்திடத் தேவையான நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நம்பிக்கைக் கொள்வோரைச் சூழ்ந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! எம் குடும்பங்களின் பிள்ளைச் செல்வங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். கல்வித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்கள் நிலை உணர்ந்துச் சிறப்பாகச் செயல்படவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கருத்தாய் கவனித்துக் கொள்ளவும், அதற்கு வேண்டிய நல்ல நற்சுகமும், அரவணைக்கும் அன்பையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் துணையும் கேடயமும்  ஆன எம் தந்தையே ! இறைவா!  பேராசையும் பொறாமையுமே சண்டை சச்சரவுக்குக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

5.  மருத்துவராய்  சூழ்ந்து நிற்கும் பேரன்பே!  இறைவா! தொற்றுநோயால்  அவதியில் உம் மக்களைக் கண்ணோக்கும். அனைவரும் விரைவில் நலமடைந்து  மீண்டும்  தத்தம்  குடும்பங்களுடன் இணைந்திடவும், எம் திருத்தந்தை  விரைவில் நலமடைந்து தம் பணிகளை சிறப்புடன் நிறைவேற வேண்டிய வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

  www.anbinmadal.org

No comments:

Post a Comment