பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
செக்கரியா 9:9-10
உரோமையர் 8:9,11-13
மத்தேயு 11: 25-30
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு. இயேசுவின் எளிய நுகத்தை ஏற்று அவரின் திருவடியில் இளைப்பாற வந்துள்ள இறைமக்களே சோர்வை நீக்கிப் புத்துயிர் பெற மகிழ்வுடன் இத்திருப்பலியில் பங்கேற்க வரவேற்கிறோம்.
பெருஞ்சுமைச் சுமந்துச் சோர்ந்திருபவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாற்றுதல் தருவேன் என்று நம்மை அழைக்கின்றார். ஆம் நம் வாழ்வில் எத்தனை சுமைகளைச் சுமக்கவேண்டியதாய் இருக்கின்றது. கடன்தொல்லைகள், தொற்றுநோய்கள், உடல்நலக்குறைவு, பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்புகள், திருமணங்கள், சமுதாய மாற்றங்கள், போராட்டங்கள், அரசியல் மாற்றங்கள் என எத்தனை கவலைகளும், அச்சங்களும் நம்மை ஆடிப்படைக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகங்கள் உலகம் தேடுகின்ற நீதியையும், வெற்றியையும் அமைதியையும் இளைப்பாற்றியையும் ஆண்டவர் இயேசு எப்படித் தருகிறார் என்று எடுத்துக் கூறுகிறது. கிறிஸ்துவின் ஆவியின் வழியில் வாழ முன் வருகின்றவர்கள் இயேசு வாக்களித்த இளைப்பாற்றியை அடைவர் என்பதே இதற்குச் சான்று. என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது என வாஞ்சையோடு நம் ஒவ்வொருரையும் அழைக்கின்றார். ஏனென்றால் இயேசு ஒருவரால் மட்டுமே இதய அமைதியை, எளிய வாழ்வை, தூயஆவியின் நிறைவை எல்லாச் சூழல்களிலும் நமக்குத் தர முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைஇயேசுவின் அன்பில் இணைந்திடுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த இஸ்ரேயேல் மக்களோடு வந்தவர்களில் ஒருவர் தான் செக்கரியா. நாடு திரும்பிய மக்கள் முன்னால் காட்சி அளித்ததெல்லாம், எழுந்து நிற்க முடியாமல் விழுந்துக் கிடந்த அவர்களது நாகரிகமும், நகரங்களும். அவர்களது பெருமையின் சின்னமாக விளங்க வேண்டிய எருசலேம் ஆலயம், வறுமையின் சின்னமாகக் காட்சியளித்தது. மக்களின் மனதை அவநம்பிக்கையும் அச்சமும் ஆட்கொண்டன. அந்த நேரத்தில் தான் இறைவாக்கினர் செக்கரியா இஸ்ரயேல் மக்களைப் பார்த்து ”மக்களே, உங்களுக்கு நீதியையும், வெற்றியையும், சமாதானத்தையும் அளிக்க அரசர் ஒருவர் வருவார்" என்றார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இரண்டாம் வாசக முன்னுரை
ஊனியல்பு, தீய ஆவி நம்மிடம் இருக்கும்போது நமக்குத் துன்பம் துன்பமாகத் தோன்றுகிறது. தூயஆவி நம்மிடையே குடிகொள்ளும்போது துன்பம் நீங்கும். சுமை சுகமாகும். ஆதலால் ஒவ்வொருவரும் தூய ஆவியின் வரங்களைப் பெற்றுச் செயல்படவேண்டும் என இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார். நமது தனிப்பட்ட முயற்சியால் செய்ய முடியாத, அசாத்தியமான காரியங்களைக்கூடச் செய்வதற்கான ஆற்றலை இந்தத் தூய ஆவி தருகிறார் என நமக்கு முன்னுரைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: என் கடவுளே, என் அரசே!. உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்
திருப்பாடல்: 145: 1-2, 8-9, 10-11, 13-14
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. அன்பின் ஊற்றாகிய இறைவா! திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் யாவரும் சாந்தமும், மனத்தாழ்ச்சியும் கொண்டவர்களாகவும், தூயஆவியில் வழிநடத்தப்பட்டு உம் மகன் இயேசுவின் சீடர்களாய் இந்நானிலத்தில் அனைத்து மக்களையும் உம் அன்பால் அழைத்துவரும் மக்களாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
2. பேரின்பப் பரம்பொருளே! எம் இறைவா! நாள்தோரும் நாங்கள் சந்திக்கும் அவலங்களால் ஏற்படும் கவலைகள், மனசோர்வுகள், இயலாமையால் ஏற்படும் தோல்விகள், கோபங்கள், தொற்று நோயின் தாக்கங்கள் இவைகளால் எங்கள் குடும்பங்களில் உலாவும் பதட்டமான வாழ்வில் விடுதலைத் தரக்கூடியவர் நீர் ஒருவரே என்று உணர்ந்து எம் பாரத்தை உம்மில் இறக்கிவைக்கவும், அன்பின் நுகமாகிய எளிமையான சுகத்தை அடைந்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
3. அருள்வரங்களின் ஊற்றாகிய இறைவா! எம் சமுதாயத்தில் நாங்கள் இழந்த வரும் சகிப்புதன்மை, மனிதநேயம், அமைதி ஆகியவற்றை மீண்டும் நாங்கள் பெற்று மகிழ்ச்சியான, எளிமையான, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்திடவும் தொற்று நோயினால் வாடும் இல்லங்களுக்குத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..
4. . பேரின்பப் பரம்பொருளே! எம் இறைவா! எம் இளைய தலைமுறையினர் இவ்வுலகக் கவர்ச்சியால் தங்களை இழந்து, தங்கள் வாழ்வையும், தமக்கு அடுத்திருப்பவர்களையும் ஒரு சுமையாகக் கருதி அல்லல் படும்போது அவர்களுக்குத் தூயஆவியின் வழிகாட்டுதலும், நேரியவழியையும் அமைத்துத் தந்துத் தங்கள் வாழ்வைச் சுகமான சுமையான வாழ்வாக வாழ்ந்திடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
www.anbinmadal.org
No comments:
Post a Comment