பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எசாயா 55:1-3
உரோமையர் 8: 35,37-39
மத்தேயு 14: 13-21
திருப்பலி முன்னுரை:
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று நாம் ஆண்டின் 18ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம்.
பகிர்ந்து வாழும் பண்பை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால் இருப்பவர், இல்லாதவர் என்ற நிலைமாறும். இதைத்தான் ஆதிகிறிஸ்தவர்கள் செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை மாற்றினார்கள். பகிர்ந்து வாழும் பண்பை மக்கள் மனத்தில் உருவாகி ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய சாதனை நம் ஆண்டவர் இயேசு ஒருவருக்கு மட்டும் தான் உண்டு.
அப்பம் பலுகுதல் நிகழ்வைத் திருப்பலியோடு ஒப்பிடுகின்றார்கள் மறைநூல் ஆராய்ச்சியாளர்கள். இயேசுவைப் போல நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற பண்பை ஒவ்வொரு திருப்பலியும் நமக்குத் தருகிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் பகிர்வு மனப்பான்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே இயேசுவின் திருவிருந்தில் பங்கு கொள்ளும் நாம் பகிர்வு வாழ அதற்குத் தடையானவற்றை நம்மிடமிருந்து அகற்றி நம்மைப் புனிதர்களாக மாற்ற வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம். இந்தப் பகிர்வில்புத்துணர்வுப் பெற்றவர்களாக மாறிடுவோம்.
வாசக முன்னுரை
முதல் வாசக முன்னுரை:
இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தால் நசுக்கப்பட்டு வாடியபோது இறைவாக்கினார் எசாயா வழியாக இறைவன் கூறும் ஆறுதல் மொழியாக உள்ளது. இங்கு தானியங்கள், திராட்சை, பால் முதலியவை இறைவன் தருகின்ற அளவற்ற வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அடையாளமாக இருக்கின்றன. மகிழ்ச்சி அளிக்கும் இவ்வார்த்ததைகளை கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 145: 8-9. 15-16. 17-18 . (பல்லவி: 16)
பல்லவி: ஆண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி
எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். - பல்லவி
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இறை இரக்கத்தின், அன்பின் வரலாற்று சாட்சியம்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்று திருத்தூதர் பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். அவரோ தம்முடைய ஆவியை நமக்குள் ஊற்றி நம்மோடு இரண்டறக் கலந்து, நம்மோடு இணைந்து வாழ்கின்றார்; நமக்கு உதவி செய்ய, நம் வாழ்வில் புதுமை செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நாம் கொடுக்க முன்வர வேண்டும்! வாரீர் பகிந்துக்கொள்வோம் இறைமகனின் அன்பை...
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டு:
திருச்சபைக்காக:
பகிர்ந்தளிக்க எம்மை அழைக்கும் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் ஓரே உடல்: ஓரே தூயஆவியானவர்: ஓரே கடவுள்: ஓரே நம்பிக்கை என்ற உயரியப் பண்பில் தங்களின் அழைப்பை உணர்ந்து வாழ்ந்திடவும், பணியாற்றிடவும் வேண்டிய வரத்திற்காக இறைவா உமை மன்றாடுகிறோம்.
உலக மக்களுக்காக:
நலம் அளிக்கும் வல்லவரே! எம் இறைவா! உலகமெங்கும் தொற்று நோயால் அல்லல்படும் உம் மக்களைக் கண்ணேக்கியருளும். இந்த நோயால் ஏற்பட்டுள்ள சகல இழப்புகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் மீண்டு வந்து தங்களின் இயல்பு வாழ்க்கைத் தொடரவும், நலமும், வளமும் பெற்று மகிழ்வுடம் வாழத் தேவையான அருள் வரம் தந்திட வேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.
நாட்டிற்காக:
உம் படைப்புகளைப் பலுகிப் பெருகச் செய்யும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழைஏளிய மக்களைப் பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழப் பகிர்ந்தளிக்கு நல்ல மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.
மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:
பண்பாளரே எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்துப் பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப்போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திட வரம் வேண்டி உமை மன்றாடுகிறோம்.
இளைய சமுதாயத்திற்காக :
எங்கள் அன்புத் தந்தையே இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.
மறையுரை சிந்தனைகள்
No comments:
Post a Comment