Tuesday, August 18, 2020

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 22:19-25,
உரோமையர் 11:33-36,
மத்தேயு 16:13-20.

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு. இன்றைய திருப்பலியில் இறைஞானத்தால் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அவரே இறைமகன் என்று அறிக்கையிட அழைக்கப்பட்டு தெய்வத்தின் திருவடியில் அமர வந்துள்ள இயேசுவின் அன்பிற்குரியவர்களே! உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நமது விசுவாத்தின் தொடக்கமும் முடிவும் இறைவனே! அந்த இறைவனின் உதவியின்றி இயேசுவே ஆண்டவர் என்று நம்மால் அறிக்கையிட முடியாது. இன்றைய வாசகங்கள் இயேசுவைச் சரியாகக் கண்டுணர நம்மை அழைத்துச் செல்கின்றன. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்டக் கேள்விக்கு அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவியக் கருத்துக்களைப் பிரதிபலித்த்தபோது, பேதுரு மட்டும், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார் கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்.
இறைவனின் இரக்கப்பெருக்கத்திற்கு எல்லையில்லை. கடவுள் மனித அறிவுக்கு எட்டாதவர். எனவே இறைகொடைகளைத் தடையின்றிப் பெற்றுவரும் நாம் அவற்றின் வழியாக இறைமாட்சியடைய நம் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு இறைபிரசன்னத்தை உணர்ந்து நம் வாழ்வைத் தொடர இன்றைய திருப்பலியில் ஒருமனதோராய் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இறைவனது திட்டம்‌ மனிதருக்குப்‌ புதிராக இருக்கலாம்‌. ஆனால்‌, இறைத்திட்டத்திற்கு எதிராக யார்‌ செயல்பட்டாலும்‌ அவர்களும்‌ அவர்‌ தம்‌ திட்டங்களும்‌ தவிடுப்‌ பொடியாவது உறுதி. இவ்வாறே செபுனாவுக்கு  கண்டனம் தெரிவித்து விட்டு, எலியாக்கிமை அழைத்து அவர் கைகளில் தன் மக்களை ஒப்படைத்தார். இரக்கப் பெருக்குமிக்க இறைவனின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் எசாயா நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.      

    

பதிலுரைப்பாடல்


திபா 138: 1-2அ. 2-3. 6,8
பல்லவி : ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை


திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் இறைவனின் இரக்கப்பெருக்கத்திற்கு எல்லையில்லை. கடவுள் மனித அறிவுக்கு எட்டாதவர். நமது குறுகிய அறிவால் அவரை அறிந்துகொள்ள முடியாத ஒரு புதிர் . அவருடைய அறிவும் ஞானமும் ஆழமானவை. நம் அறிவுக்கு எட்டாதவை என்று வியப்புடன் எடுத்துரைக்கும் இவ்வார்த்தைகளை வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் நம்மைக் கைவிடமாட்டர் என்ற விசுவாசத்தோடு மனதில் பதிவு செய்வோம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. இரக்கப்பெருக்கத்தின் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையில் பணியாற்றும் அனைவரும் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்ககவும், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருந்தாலும் திருச்சபையை அன்புச் செய்யவும், கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்கவும் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா! ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளன்’ என்றும் மேடையில் முழங்கிக் கொண்டு, அதற்கு எதிர் மாறாகச் செயலாற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க, அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அருள இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3.துன்பத்தில் நல்தேற்றுதல் தரும் எம் இறைவா, எம் நாட்டில் தொற்று நோயின் அதிகத் தாக்கத்தால் துன்புறும் உம் மக்களுக்குப் பாதுகாப்பு, உம்மில் ஆழமான விசுவாசம், எம் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சவாலை எதிர்க்கொள்ளும் உறுதியான மனநிலைத் தந்து, உமது வல்லமையான கரங்களால் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில் இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பை எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

5. ஆற்றலும் வலிமையும் மாட்சியும் நிறைந்த எம் இறைவா! இவ்வருடக் கல்வியாண்டு பல தடைகளைக் கடந்து தொடங்க முயற்சிக்கும் இவ்வேளையில் தொற்று நோயிலிருந்து எம் மாணவச்செல்வங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், இறையச்சமும், ஞானமும், நல்ல மனௌறுதியும் பெற்றுச் சிறப்புடன் வலம் வரத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.


www.anbinmadal.org

1 comment: