பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
1 அரசர்கள் 19:9,11-13
உரோமையர் 9:1-5
மத்தேயு 14: 22-33
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு தடைகளையும், நோய்களையும் பல தாண்டி இன்றைய திருப்பலியில் கலந்து இறைவனின் அருளைப் பெற்றுச் செல்ல வந்துள்ள இறைகுலமே உங்களை அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
பாகுபாடுகளை மீறி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் இன்றைய திருப்பலி வாசகங்களில் நமக்குத் தரப்பட்டுள்ளது.. இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் சொல்வது கனவுலகே தவிர, நடைமுறை உலகல்ல. ஊரின் எல்லைப்பகுதியில், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண் நமக்கு நம்பிக்கைத் தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறார்.
கானானியப் பெண் என்று அடுக்கடுக்கான பல தடைகளைத் துணிவுடன் தாண்டி இந்தப் பெண் தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். இயேசுவின் கடினமான சொற்களையும் சரியான கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.
தடைகள் எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கண்ட மகத்தான அந்த நம்பிக்கை முழுமையாகப் பெற்றுக்கொள்ள, இன்றைய திருப்பலியில் இயேசுவைப்போல் நாமும் தந்தையாம் இறைவனிடம் ஒருமனப்பட்டுச் செபிக்கவும், அவருக்காய் நாம் செய்யும் பணிகள் வெற்றிப் பெற, தொற்று நோயிலிருந்து விடுபட இறையருள் வேண்டிடுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்: என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும். நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று இறைவன் உறுதி அளிக்கிறார். பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணைய முடியும் என்று இறைவன் உறுதி அளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன இறைவனின் உறுதி மொழிகளைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
திபா 67: 1-2. 4. 5,7
பல்லவி : கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். -பல்லவி
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் ஒருவன் பிறமறையைச் சார்ந்தவன் என்பதற்காக இயேசு அவனைப் புறக்கணிப்பதில்லை என்பதைத் தெளிவாக்கப் பிறர் இனத்தாராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமைகொள்கிறேன் என்கிறார். இதனை மனத்தில் கொண்டு இயேசுவிடம் செல்லும்போது சாதி, மதம், குலம் போன்றவற்றை விலக்கிவிட்டு விசுவாசத்திற்கு முதலிடம் கொடுத்து இறைவனின் அருளுக்கும் ஆசிருக்கும் உரியவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா!
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. நன்மைத்தனத்தின் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையில் பணியாற்றும் அனைவரும் உம்மைப்போலத் தாராள மனதுடனும், திறந்த மனதுடனும் சாதி, சமய, இன வித்தியாசங்களை மறந்து இறையரசின் பணிகளை அன்புடன் அனைவருக்கும் நிறைவாய் செய்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
2. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகின் மேலும், நாளைய உலகின் மேலும் நம்பிக்கை இழந்துள்ள இளையோர் ”உங்கள் நம்பிக்கைப் பெரிது... நீங்கள் விரும்பியவாறே உங்களுக்கு நிகழட்டும்” என்று இயேசு இவர்களிடம் சொல்வதன் மூலம் வருங்கால உலகில் நம்பிக்கையை வளர்க்க, அன்பை வளர்க்க இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்
3. மாசின்மையின் ஊற்றாகிய எம் இறைவா, எம் இல்லங்களில், குடும்பங்களில் வேற்றுமைகள் களையப்பட்டு, அனைவரும் இறைவனின் படைப்புகளே என்ற உயரிய எண்ணங்கள் வளர்ந்து, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்லவும், மனித மாண்பு ஓங்கிடவும் எமக்குத் தேவையான ஞானத்தையும், நற்பண்புகளையும் அருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! கானானியப் பெண்ணின் மகளைப்போல் இன்று தங்கள் பிள்ளைகள் பலர் இவ்வுலகின் தீய சக்திகளிடம் மாட்டிக்கொண்டு இறைவனின் பாதையிலிருந்து விலகியிருப்பதைக் கண்டு தங்கள் பிள்ளைகளுக்கு விடுதலை வேண்டிக் கண்ணீர் விட்டுச் செபிக்கும் பெற்றோர்க்களின் செபத்தைக் கேட்டு அவர் தம் பிள்ளைகள் மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா! உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.
5. எங்கள் அன்புத் தந்தையே இறைவா! தொற்றுநோயின் தாக்கம் விரைவில் விடுதலைப் பெற்று, மக்கள் தங்கள் வழக்கமான வாழ்விற்குத் திரும்பவும், மாணவர்கள் தங்கள் கல்விநிலையங்களுக்குச் சென்று கல்விப் பயிலவும், ஏழை எளியோர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பைப் பெற்றுப் புதுவாழ்வுத் தொடங்கவும் தேவையான ஞானத்தையும், மனமும் உடலும் வலுபெறவும் தேவையான வரத்தையும் பெற வேண்டி வரங்களைப் பொழியுமாறு இறைவா! உம்மை மனம் உருகி வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment