Friday, September 4, 2020

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசேக்கியல் 33: 7-9
உரோமையர் 13:8-10
மத்தேயு 18: 15-20


 திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இயேசுவின் அன்பிற்குரியவர்களே,  ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் ஆலயகதவுகள் மீண்டும் திறந்து விட்டன , நன்றியுடன் நுழைவோம். வாரீர். பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறுத் திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள்... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம், அல்லது, புரிந்துக் கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதை ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.
அதிலும் சிறப்பாக நற்செய்தி வாசகம் சகோதரனைத் திருத்தும் முறையை நமக்குத் தெளிவுப்படுத்துகின்றது. தனியாக இருக்கும் போது அவன் குற்றத்தை எடுத்துக் கூறுங்கள். இப்படிச் செய்தால் நாம் பலருடைய வாழ்க்கையில் ஒளியேற்றுகிறோம் என்பது பொருள். தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லவே இல்லை. காரணம் இறுதிவரைப் போராடிய இயேசு அன்பின் உச்சகட்டமாகத் தனது உயிரையே நமக்காகக் கொடுத்தார். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவது ஆண்டவனின் பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமையாகும்.
தயவுசெய்து,  நன்றி,  மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான மனநிலையோடு சொன்னால், நம் குடும்பங்கள் நலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. குடும்பங்களில் நல்ல சூழல் உருவாக, முன்னதாகச் சொல்லப்பட்ட எளிதான வழிகளையும் பின்பற்ற முயல்வோமே! இந்த முயற்சிகளால் நாம் இழக்கப் போவது எதுவுமில்லை, ஒருவேளை அடையக்கூடிய பலன்கள் அதிகம் இருக்கலாம்! விட்டுகொடுத்து வாழ நல்மனம் நம்மில் அமைந்திட இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.



 வாசகமுன்னுரை



 முதல் வாசக முன்னுரை


இவ்வுலகம் தீயவர்களால் கெடுவதில்லை; மாறாகத் தீயவர்களின் தீச்செயல்களைக் கண்டு , கண்டனக் குரல் எழுப்பாமல் மெளனமாக இருப்பவர்களால்தான் கெடுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியல் வழியாகக் கூறுகிறார். தீயவர்களை நாம் எச்சரித்தும், அவர்கள் தீமையில் செத்தால், அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல; மாறாக, தீயவர்களை நாம் எச்சரிக்காமல் அவர்கள் தீமையில் இறந்தால் அவர்களுடைய அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் எனக் கூறுகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.      

 பதிலுரைப்பாடல்


பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திபா 95: 1-2. 6-7. 8-9

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.  பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!  பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.  பல்லவி      
.

 இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாவது வாசகத்தில் கடவுளின் அன்பைப் பற்றியும், அதற்குப் பதிலாக நாமும் அயலாரை அன்பு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். கடவுளை நாம் அன்பு செய்யும் போது, நாம் கடவுளோடும், கடவுள் அன்பு செய்யும் மக்களோடும் ஒன்றிப்போகிறோம். மக்கள் அனைவரையும் அன்பு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். இக்கடமையை நிறைவேற்றுவதன் மூலம் கடவுளது அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றோம் என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலின் அழைப்பை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.  
         

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவைக் கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் தயவுசெய்து, நன்றி, மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான அர்த்ததோடும், அன்பான மனநிலையோடு கூறி எங்கள் குடும்ப உறவுகளை மேன்மை படுத்தித் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. அனைவருக்கும் ஒரே நீதியை வழங்கிடும் எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும், சுயநலம், மற்றவர்களை அடிமைப்படுத்துக்கூடிய ஆணவம் இவைகளை மறந்து எல்லா மாநிலமக்களிடம் பிரிவு மனப்பான்மைக்கு இடந்தராமல், சமத்துவச் சகோதரத்துவ வாழ்வுச் சிறந்து விளங்கிடவும், மனித நேயமும், சரியான சமுக நீதியும் வழங்கப்பட்டவும், அனைவருக்கும் எல்லா உரிமைகள் கிடைத்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

4. சமூக மாற்றத்தின் நாயகனே எம் இறைவா! நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரைப் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

5.எங்கள் அன்பின் இறைவா! தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்துவந்தவரே, நோயின் வீரியம் குறைந்து மக்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழத் தேவையான அருளையும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தொற்றுநோயினால் ஏற்பட்ட மனஅழுத்தத்திலிருந்து விடுபடவும் தேவையான நல்ல சுகாதார, வளமான நல்ல சூழ்நிலையைத் தரவேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


2 comments: