பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எசேக்கியேல் 18: 25-28
பிலிப்பியர் 2 :1-11
மத்தேயு 21: 28-32
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
பொதுக்காலத்தின் 26ஆம் ஞாயிறுத் திருப்பலியில் செயல்வீரராய் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!
வாய்ச்சொல் வீரராக நாம் வாழாமல் நம் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடின்றி வாழ வேண்டும். இதுதான் கடவுளுக்குப் பிடித்த வாழ்க்கை நெறிமுறை என நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறைவனின் இரக்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் எந்தப் பாவியையும் இறைவன் புறக்கணிப்பதில்லை. இறைவன் ஒருபோதும் பாவி சாக வேண்டும் என்று விரும்புவதுமில்லை.
இயேசுவின் சீடர்களாக வாழ்வோம் என்ற முடிவு எடுத்துவிட்டோமென்றால் என்ன நிலை வந்தாலும் இறுதிவரை இயேசுவின் சீடராக வாழ்வதில் நிலைத்து நிற்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமேயொழிய வேற்றுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி கடவுள் இரக்கத்தின் கடவுளாகவே வெளிப்படுத்தப்படுகிறார். இந்த உண்மை நாம் மனம் திரும்பத் தூண்டுகோலாக அமைய வேண்டும்.
தீய வாழ்வை விலக்கி, மனம் மாறி நல்வாழ்வு வாழ வந்த சக்கேயு, விபச்சாரப்பெண், ஊதாரி மகனைப் போல நாமும் மனம்மாறி இறையரசின் பிள்ளைகளாக வாழ இத்திருப்பலியில் இறைவனை மன்றடுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
இன்றைய முதல் வாசகம் மனமாற்றத்தை எடுத்துரைக்கின்றது. யாவேயின் கட்டளைப்படி எசேக்கியேல் இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களிடம் சென்று, அவர்கள் தங்கள் தவறான வழிகளை விட்டுவிட்டு இறைவனிடம் மனம் திரும்பி வரவேண்டும் என அறிவுறுத்துகிறார். இருப்பினும் இஸ்ரயேல் மக்கள் மனம் மாறவில்லை. தமது வார்த்தைக் கேட்காத இஸ்ரயேல் மக்களைக் கடவுள் அழிக்கவில்லை; மாறாக, அவர்களிடம் மிகுந்த பொறுமையைக் காட்டினார் என்று மனமாற்றத்திற்கு அழைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9
பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; பல்லவி
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
நம்மை மீட்க விண்ணிலிருந்து இம்மண்ணகத்திற்கு வந்தார் மாபரன் இயேசு. கடவுள் நிலையில் இருந்த அவர் மனுவுரு கொண்டு இம்மண்ணுக்கு வந்து மானிட பாவம் போக்க சிலுவை மரத்தில் உயிர் துறந்தார். அவர் தொடக்கத்திலேயே கடவுள் தன்மையில் விளங்கியவர். எனவே தான் நாமும் நமது வாழ்வை, நமது பணியை எதையும் எதிர்பார்த்துச் செய்யக்கூடாது. நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும், மன மகிழ்ச்சியுடன் "நான் கடவுளின் பிள்ளை, அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளை. எனவே, நான் என் பணியை எந்தவிதப் பலனையும் எதிர்பாராமல் செய்வேன்" என்ற மனநிலை நம்மில் உருவாக வேண்டும் என இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. கவனமுடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. அல்லேலூயா.
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. இரக்கத்தையும், பேரன்பையும் தன்னகத்தே கொண்ட எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் எதையும் எதிர்பார்க்காத இயேசுகிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டு தங்கள் வாழ்விலும், ஏற்றப் பணிகளிலும் சிறந்த விளங்க தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எம் குற்றங்களையும், குறைகளையும் நினையாத எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் தத்தம் பணிகளை செவ்வனே செய்யவும், அதன்மூலம் தம் வாழ்வின் நிறைவை மகிழ்வாய் பெற்று உமது சாட்சிகளால் அனைவரையும் அன்புடனும் பாசத்துடனும் வாழ நடத்த தேவையான இரக்கத்தையும் பொறுமையையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்
3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்பு கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! அனைத்துப் பணியாளர்களும் தங்களுக்குரிய மதிப்பையும், உரிமைகள் பாதுகாப்பையும் பெறும்படியாகவும், பணிவாய்ப்பு தேடுவோர் பொது நன்மைக்குத் தங்களது பங்களிப்பை வழங்கும் வாய்ப்புப் பெறும்படியாகவும் வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. நலமும் வளமும் தந்தருளும் எம் இறைவா! எங்கள் மாணவசெல்வங்கள் அனைவரும் இந்த தொற்று நோய்காலத்தில் பள்ளிக்கு சென்று கல்வி பயிலும் முறையின்றி கூண்டுக்குள் அடைப்பட பறவை போல தத்தளிக்கும் மனநிலையிலிருந்து விடுபடவும், அதற்கு ஏற்றநிலையை விரைவில் உருவாக தேவையான ஞானத்தையும், சக்திகளையும் அனைவரும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
Thanks for Posting !!!!Jesus and Mother Mary Bless you Abundantly.
ReplyDeleteThank you very much!!!
ReplyDeleteMuch Needed!!!
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteCan post for 4th oct 2020? Thank you so much. Its really helpful to prepare liturgy for sunday mass
ReplyDelete