Tuesday, January 26, 2021

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு




இன்றைய வாசகங்கள் :


இணைச் சட்டம் 18:15-20
1கொரிந்தியர் 7:32 -35;
மாற்கு 1:21-28  

திருப்பலி முன்னுரை :


பொதுக்காலம் நான்காம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகின்றோம்.

இன்றைய நற்செய்தி, இயேசுவின் அதிகாரத்தையும், அவர் யார் என்பதையும் காட்டுகிறது. அதிகாரம் என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும், தீர்க்க முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் இருக்கின்றது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவைகளைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஒருவர் சுயமாகத் தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மனச் சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும். அது கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழி நடத்தும். இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது.

குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து கொள்வோம். நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் உன்னதப் பண்புகளால் நாம் மற்றவர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என்று இயேசு வாழ்ந்துக் காட்டிய அந்த வழியில் வாழ இன்றைய திருப்பலியில் உளமாற இறையருளை மன்றாடுவோம்.

வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :


இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுளுடைய வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து அதன்படி வாழ நம்மை அழைக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் உன்னைப் போன்ற இறைவாக்கினர்களை இஸ்ரயேல் மக்களிடமிருந்தே தேர்ந்தெடுத்து நான் அனுப்புவேன். அவர்களுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன் என்று இறைவன் மோயீசனுக்குக் கூறுவதாக இணையச்சட்டத்திலிருந்து வரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவாக்கினர் இறைவனின் குரலாக ஒலித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்துவதாக!

பதிலுரைப்பாடல்


திபா 95: 1-2. 6-7. 8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி
 
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி
 

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :


இறைவனின் குரலைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டிய மனிதர்கள் பிளவுபட்டவர்களாக இருப்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டுகிறது. ஒருபுறம் கடவுளின் குரல் மறுபுறம் உலக ஈர்ப்பு. ஒருவர் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது. எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன் என்று புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் விடுக்கும் அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்போம்.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்  மன்றாட்டுகள் :


1. ஞானத்தின் ஊற்றான அன்பு இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது குரலுக்குச் செவிசாய்த்துச் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி உம் மந்தையாம் இத்திருஅவையைத் திறம்பட நடத்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஐயங்கள் அகற்றி எம்மை அன்புணர்வில் ஒன்றுசேர்க்கும் இறைவா! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நம்பிக்கையின் புகலிடமே! எம் இறைவா! குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம், சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து அதன்படி பிறருடன் உன்னதப் பண்புடன் நடந்திட தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! நாங்கள் வாழும் இந்த நவீன உலகில் இளைஞர்கள் சந்திக்கும் எண்ணற்றத் துன்பங்கள், சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, தமது வெற்றி இலக்கான இயேசுவைத் தேடிவரவும், தங்கள் பெற்றோர்களுக்கும் நற்பெயர் பெற்றுத் தரவும், தூயவாழ்வு வாழ்ந்திட அருள்வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.விடுதலை நாயகனே! எம் இறைவா! உண்மைக்கும், நீதிக்கும், உரிமைக்கும் போராடும் மக்களுக்கெதிராக நடத்தப்படும் அலட்சியபோக்கிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும், பொய் வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்று தங்களின் நியாயமானக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு நல்ல தீர்ப்பைப் பெற்றிட தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

                                                          www.anbinmadal.org

No comments:

Post a Comment