Thursday, January 7, 2021

ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு

 ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு

 ஆண்டவரின் திருமுழுக்கு விழாஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 55:1-11
1யோவான் 5:1-9
மாற்கு 1:7-11

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. இதன்வழியாக இயேசு தான் யார் என்பதை உலக மக்களுக்குச் சூட்டிக்காட்டுகின்றார். இயேசு புதிய உலகைத்தைப் படைக்க வந்த ஒரு புதிய பிறவி. இந்த உண்மையை நமக்கு எடுத்துச் சொல்லும் விழாதான் இயேசுயின் திருமுழுக்குத் திருவிழா.

இயேசு புதிய கொள்கை வரைதோடு இலட்சியத் தெளிவோடும் புதிய சமுதாயம் படைக்க வந்தார். தன் செயலால், செயலால், வாழ்வால் புதிய சமுதாயத்தை அமைத்துக் காட்டியதை அறிவோம். இயேசுவின் மறைந்த வாழ்வு முடிந்துப் பொது வாழ்வு தொடங்குகிறது. அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறுவதன் வழியாகத் தந்தையாகிய இறைவனால் உலகிற்கு அடையாளப்படுத்தபட்டு, தூயஆவியானவரால் திருப்பொழிவு செய்யப்பட்டுத் தனது பணியைத் தொடங்கினார் இயேசு.

திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும், சில குறிகோள்களை, இலக்குகளையும் நமதாக்கிக் கொண்டு அதில் இறுதிவரை நிலைத்திருக்க நம்மையே உட்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று இந்த அருட்சாதனம் வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா மூலமாகக் கடவுளின் அன்புக் கட்டளைகளுக்கு வாழ மறுத்து அந்நியநாடுகளில் ஊதாரியாக அலைந்துத் திரிந்த மக்களுக்குக் கடவுள் புது வாழ்வை அறிவிக்கின்றார். மன்னிப்பும் வழங்குகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார் என ஆறுதல் மொழிகளைத் தருகிறார். இறைவனின் இரக்கமும் அன்பும் நிறைந்த இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்:


எசாயா 12: 2-3, 4, 5-6
பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்.

1. கடவுள் என் மீட்பர், அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன், ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர். - பல்லவி

2.அந்நாளில் நீங்கள் சொல்வதாவது - ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் திருப்பெயரைப் போற்றுங்கள். மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள். அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

3.ஆண்டவருக்கு புகழ்ப்பா அமைத்தப் பாடுங்கள், ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார். அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள், இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகமுன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் தான் கடவுளின் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் சுமையாய் இருப்பதில்லை. எனவே கடவுளிடமிருந்த பிறக்கும் இவை அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்வது நம் நம்பிக்கையே. கடவுள் தம் மகன் இயேசுவிற்குச் சான்று பகர்ந்துள்ளார். அதுவே சிறந்த சான்று. இயேசு இறைமகன் என்று தூயஆவியும் நீரும் சான்று பகர்கின்றன என்று பதிவுச் செய்யும் திருத்தூதர் யோவான் எழுதிய திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்துரை:


அல்லேலுயா, அல்லேலுயா! இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான் ”இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்றார். அல்லேலுயா.
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நலம் தரும் புத்தாண்டை அளித்த எம் இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம் கனிவானத் தந்தையே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே எம் இறைவா! எம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களுக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே எம் இறைவா! எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மருத்துவராய் நலம் அளிக்கும் தந்தையே, எம் இறைவா! நோய்களின் உருமாற்றத்தால் செய்வதறியாமல் தவிக்கும் எங்களைக் கண்ணோக்கும். சிறந்த மாற்றுமருந்துகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஞானத்தையும் அறிவாற்றலையும் எம் மருத்துவர்களுக்குத் தந்து எம் நலம் காக்க அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


  www.anbinmadal.org

No comments:

Post a Comment