Saturday, May 15, 2021

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபிரேயர் 4: 1-13
மாற்கு 16 :15-20

திருப்பலி முன்னுரை:


குருவாகிய கிறிஸ்துவும், அவரது சீடர்களும் இணைந்து உருவாக்கிய 'நற்செய்தி' என்ற அற்புதப் படைப்பைச் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று, இயேசுவின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அதே வேளையில், இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்றிய சீடர்களின் அர்ப்பணத்தையும், அயரா உழைப்பையும், துணிவையும் இந்நாளில் கொண்டாடுகிறோம்.

விண்ணகம் எழுந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து அவரது சீடர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அருமையான இரகசியத்தை வெளிப்படுத்திச் சென்றார். அது என்ன இரகசியம்? நம்பிக்கைக்கொள்வோர் மீட்பு பெறுவர் என்பது தான் அது. ஆம். உலகத்தை எல்லாத் துன்பத் துயரங்களிலிருந்தும் விடுவித்து அதற்கு மீட்பளிக்கும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு!

'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறியபோது, அந்தக் குழுவில் இருந்தவர்கள் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ அல்ல. அவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.

வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் ஆல்பெர்ட் ஆல்பர்ட் ஸ்க்வேட்ஸர், புனித அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப் பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

தூய ஆவியாரின் துணையோடு நம்பிக்கையை, அதாவது கடவுளின் வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை நமது இல்லத்திற்குள்ளும். உள்ளத்திற்குள்ளும், ஆழ்மனத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம்!

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாக சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றி கற்பித்தார். சான்றுகள் மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களை துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 47: 1-2, 5-6, 7-8

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் இயேசுவின் விண்ணேற்பில் அடங்கியள்ள மறைபொருளை வெளிப்படுத்துகிறார். மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம் என்ற ஒரே எதிர்நோக்குடன் வாழ அழைக்கும் புனித பவுலடியாரின் வார்த்தைக்குச் செவிமெடுப்போம்.

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி *

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.மாட்சிமைமிக்க எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஆண்டவர் இயேசுவின் ஆற்றலைப் பெறு இவ்வுலகில் அவரின் விழுமியங்களை உலகமெங்கும் சான்று பகர, அவர் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து காட்டிட தேவையான ஆற்றலை நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2அன்பே உருவான எம் இறைவா! எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சி பறைசாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கமுள்ள எம் இறைவா! உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். கோவிட் தொற்றுநோய் காரணமாக நாங்கள் அதிகமான அருள்பணியாளர்களையும், அருட்சகோதரிகளையும் இழந்துவிட நிலையில் மேலும் இந்நிலை தொடராமல் இருக்க உம்மை மன்றாடுகிறோம். அனைவருக்கும் அரணாகவும் கோட்டையாக இருந்து அவர்களை பாதுகாக்க தேவையான வரங்களை அருள வேண்டுகிறோம்

4. அனைவருக்கும் மீட்பராகிய எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், இந்த தொற்றுநோயின் தாக்கதை ஒழிந்து அவர்கள் மீண்டும் உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

No comments:

Post a Comment