Friday, May 21, 2021

தூய ஆவியார் பெருவிழா


 
தூய ஆவியார் பெருவிழா   


  இன்றைய வாசகங்கள் :


திருத்தூதர் பணிகள் 2: 1-11
கலாத்தியர் 5:16-25
யோவான் 15:26-27; 16:12-15


 திருப்பலி முன்னுரை :


இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே!
உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று தூய ஆவியாரின் பெருவிழா. இப்பெருவிழாவை, ‘பெந்தக்கோஸ்து’ என்று அழைக்கிறோம். ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள்.

இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தி கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு சோர்வுற்றிருந்த சீடர்களுக்கு "அஞ்சாதீர்கள். உங்களுக்குத் துணையாளரை அனுப்புகிறேன். அவர் உங்களை உண்மையின் வழியில் வழி நடத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது" என்பதே ! தூய ஆவியாரை நம்மில் பொழிந்து, அருளடையாளங்கள் நிறைவு செய்யப்பட்டு, இயங்குகின்றோம்.

தூய ஆவியார் துணையால் துணிவுடன் ஏழுச்சிப் பெற்றனர் சோர்ந்திருந்த திருத்தூதர்கள். தூய ஆவியார் ஒருவரே! செயல்பாடுகள் பல வகையுண்டு!
கடவுள் ஒருவரே! இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை ஆழப்படுத்தி மானிடரை அன்புறவில் வாழ்ந்து வளர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு
செய்து இறையனுபவத்தில் ஊன்றிட இன்றைய தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற இன்றைய திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.


 வாசக முன்னுரை

 

 முதல் வாசக முன்னுரை :


நம் இதயங்கள் இணைந்து பேசுவது இறைவனின் அருஞ்செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை! இதனை உணர்த்தும் இன்றைய முதல் வாசகத்தில்  தூயஆவியாரின் வருகை சீடர்கள் மீதும், அன்னை மரியாள் மீது பொழியப்பட்டு அனைவரையும் அக்னி நாக்குவடிவில் ஆவியார் இறங்கி பலரும் பல மொழிகளில் பேசியதையும் வந்தவர்கள் அவரவர்கள் மொழியில் கேட்டுப் பரவசம் அடைந்ததையும் தங்கள் சொந்த மொழியில் பேசியதை கேட்டு வியந்ததைக் குறித்துத் திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1,24 29-30. 31,34
 பல்லவி : ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. - பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை :


தூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால், அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்றைய இரண்டாம் வாசகத்தை நம் உள்ளங்களில் பதிவு செய்வோம்.



    
தொடர் பாடல்  பாடல் இசையுடன்        
 
தொடர் பாடல்
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.


 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.திருஅவைக்காக…
துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூயஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நாட்டிற்காக…
எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பை தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.அமைதிக்காக…
கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட, வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அருள்பணியாளர்களுக்காய்
ஆறுதலின் வேந்தனே எம்இறைவா! தொற்றுநோய் இரண்டாம் அலையின் தாக்கத்தால் சுமார் 130க்கு மேற்பட்ட அருள்பணியார்களை இழந்து தவிக்கும் எம் இந்திய நாட்டு திருச்சபையைக் கண்ணோக்கும். அவர்களின் உறவுகளையும், அவர்களால் வழிநடத்தபட மக்களைப் பாதுகாத்து, பலப்படுத்தும். இந்த இழப்புகளை ஈடுகட்ட புதிய தேவஅழைத்தலையும் தர வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

5.தொற்றுநோயால் சோர்ந்திருக்கும் எம் மக்களுக்காய்...
விண்ணும் மண்ணும் அழிந்து போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா! எம் மக்களை உமது வார்த்தையால் வளமை படுத்தி, தொற்றுநோயால் சோர்ந்துபோயிருக்கும் அவர்களுக்கு உமது வாக்கு அவர்களுக்குப் பாதுகாப்பாய் அமைந்திடும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


No comments:

Post a Comment