பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் வாரம் - ஞாயிறு
இன்றைய வாசகங்கள்
1. தானியேல் 12:1-3.
2.எபிரேயர் 10:11-14
3.மாற்கு 13: 24-32
திருப்பலி முன்னுரை:
இயேசுகிறிஸ்துவின் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! இன்று ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.
வரும் ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. எனவே இன்றைய வாசகங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி இருக்கின்றது. இவ்வாசகங்கள் நமக்கு அச்சத்தைத் தருவதாக இருந்தாலும் உலகத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியை விடுத்து உலகத்தின் முடிவை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்?என்று கேள்விக்கு விடையாகத் தான் இன்றைய இறைவாக்கு வழிபாடு அமைந்துள்ளது.
திரைப்படம், புதினம் இவற்றின் முடிவே நம் ஆர்வமாக இருக்கிறது என்றால், நாம் வாழும் இந்த உலகின் முடிவு எப்படி இருக்கும் பார்ப்பதிலும், நினைத்துப் பார்ப்பதிலும் நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும்!உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? நம் இந்தியப் பின்புலத்தில் கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா?
இந்த நிலையில் தான் இன்றைய மாற்கு நற்செய்தி வாசகம் மூன்று கருத்துகளை முன் நாம் முன் வைக்கிறது.
1 நிகழ்காலத்தில் வாழ வேண்டும். 2 கடின உழைப்பு. 3. சான்று வாழ்வு.
நம் இன்றைய வாழ்வை நன்றாக வாழ்வோம். நாம் நல்லவர்களாயினும், கெட்டவர்களாயினும் நம்மை விரும்பி தேர்ந்துகொள்வது கடவுளின் உரிமையே. அப்படியென்றால், நம்மிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும். உலக முடிவைப் பற்றிய கலக்கம் கொள்ளாமல் இன்றைய வாழ்வு நன்றாக வாழ்ந்தால், நாளை நமக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்து அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.
வாசக முன்னுரை:
முதல் வாசகம்:
தானியேல், பாரசீக மன்னன் சைரசின் காலத்தில் காட்சி ஒன்று காண்கின்றார். அந்தக் காட்சியில் முடிவின் காலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவின் காலம் எப்படி இருக்கும் என்று தென்திசை மன்னனுக்கு தானியேல் அறிவிப்பதே இன்றைய முதல் வாசகம். . இன்று நாம் காணும் விண்மீன்கள் நம் முன்னோர்கள் என்றால், நாமும் நாளை விண்மீன்களாக ஒளிவீச வேண்டும். அதற்கு நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?' பலரை நல்வழிக்குக் கொணர்வதாக இருக்க வேண்டும்.' என்று நம்மை அழைக்கும் வாசகத்தைக் கவனமுடன் வாசிக்க கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 16: 5,8. 9-10. 11
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும் உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து அவரே என் கிண்ணம் எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே! ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம் உள்ளார் எனவே, நான் அசைவுறேன். -பல்லவி
என் இதயம் அக்களிக்கின்றது என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது. என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர் உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். -பல்லவி
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. -பல்லவி
இரண்டாம் வாசகம்:
இயேசு தன் உடலால் செலுத்திய ஒரே பலி, யூத தலைமைக்குருக்களின் தொடர் ஆண்டுப் பலிகளை விட மேலானது என்று சொன்ன எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் கூறுகிறார். உயிர்த்தவர் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். வலப்பக்கம் என்பது ஆற்றலின் உருவகம். கடவுளின் ஆற்றலாக விளங்குகின்றார் இயேசு. வலுவின்மை எனக் கருதப்பட்டவர் வல்லமை பெறுகிறார். இதுதான் நம் வாழ்வின் இறுதியிலும் நடக்கும் என்பது நமக்கு ஆறுதல். இக்கருத்துக்களை புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்க கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
நம்பிக்கையாளின் மன்றாட்டு:
திருச்சபைக்காக:
எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் சான்றுவாழ்வுக்காக எங்களிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும், எம் திருஅவையில் நிறைவாய் இருந்திடவும், எதிர் கால கலக்கம் எதுவுமில்லாத நல்வாழ்வு நடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் குடும்பங்களுக்காக:
எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி சோம்பித் திரியாமல் எங்கள் கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுபட்ட உமக்குரியவர்களாக தேர்ந்துக் கொள்ளப்படவும், மற்றவர்களுக்கு உம் அன்பினை பறைச்சாற்றும் வாழ்வதின் மூலம் உம் பணியாளராக வாழ வேண்டிய வரங்களை தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
மக்களுக்காக:
எங்களை காத்து பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடைய தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
துன்பபடுவோருக்காக:
எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா! தமிழகம் எங்கும் நல்ல மழையை கொடுத்த இதே வேளையில் இயற்கை அழிவுகளால், இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகளால் உண்டான துன்பங்களாலும் பெரும் அவதிப்படும் முதியோர்களையும், குழந்தைகளையும், வீடு, பொருள் இழந்தோர் அனைவரையும் நோய்நொடியிலிருந்தும், பொருளாதர சரிவிலிருந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இளையோருக்காக:
இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருஅவைக்காக, திருஅவை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேடி, ஞானத்தை நிறைவாகப் பெற்று, தங்கள் ஆன்மீக வாழ்விலும், சமுதாயத்தில் பண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment