திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
பாரூக் 5:1-9 ;
பிலிப்பியர் 1:4-6, 8-11 ;
லூக்கா 3:1-6
திருப்பலி முன்னுரை:
இறைஇயேசுவின் பிரியமானவர்களே, இன்று திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இது அமைதியின் ஞாயிறு.
பாதையைச் செம்மையாக்குங்கள், மேடுபள்ளங்களைச் சமமாக்குங்கள், என்ற எச்சரிக்கை இன்றைய நற்செய்தியில் ஒலிக்கிறது. நம்மில் ஒருவராகப் பிறக்கவரும் இறைவனை, தகுந்த முறையில் வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் நிறை காலம், திருவருகைக் காலம்.
வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில்/ நூறில் ஒரு பங்கு, நாம் ஆன்மீக வழிகளில் திருநாட்களுக்கு தயாரிக்கும் ஆர்வமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடை பகர்கின்றன.
இறைவாக்கினர் எசாயா இன்றைய நற்செய்தியின் வழியாக நம் அனைவருக்கும் விடுக்கும் அறைகூவல் இதுதான்:
“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்." மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”
எனவே, இத்திருவருகைக் காலத்தில் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும், நாம் அவர் தரும் அமைதியை பெற்றிடவும் இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை:
முதல் வாசகம்
அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்கள் புதிய வாழ்வுக்கு அழைக்கப்படுவதை இன்றைய முதல் வாசகம் சித்தரிக்கிறது. அவர்களிடம் எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் பலரின் முகங்கள் துயரக் கோலத்தில் இருந்தது. ஆனாலும் இறைவனின் இருப்பை அவரது அரசாட்சியை, அவரது விண்ணக மகிமையை எருசலேம் கண்டுணரும் என்று நம்பிக்கையைத் தரும் இறைவாக்கினர் பாருக்கின் வார்த்தைகள் அவர்களை ஊக்கமளித்தது. இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2. 2-3. 4-5. 6
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி
உன் ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி
ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி
இரண்டாம் வாசகம்
இன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட, நீதியின் செயல்களால் நிரப்பப்பட்டு நேர்மைக்குப் பாதை அமைக்க" அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுல். இயேசு வரும் நாளை எதிர்நோக்கி குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு இத்திருவருகைக் காலத்தை மனமாற்றத்திற்கு பயன்படுத்துவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.
நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்:
1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா! உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று இயேசுவைப்போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு எல்லா நிலைகளிலும் உமது அன்பை உணர்ந்தவர்களாய் தந்தை மகன் போல் ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளை ஆயர்கள் மாமன்றம் வழியாக உம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. கருணைக் கடலாகிய எம் இறைவா! எசாயா மூலம் எங்களுக்கு நீர் உரைத்தது போல் நாங்கள் நேரியப் பாதையில் செல்லவும், எங்கள் குடும்பங்களிலும் அன்பு, சமாதானம், விட்டுகொடுக்கும் நல்ல உள்ளங்கள், உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்கள் விரைவில் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும், புலம்பெயர்ந்தோர் மற்றம் குடிபெயர்ந்தோர் மற்றவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுப் புனர்வாழ்வுப் பெற்றிட உமது இரக்கத்தை அவர்களில் மேல் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எதிர்பார்ப்பின் நம்பிக்கையான எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. அனைவரையும் அரவணைக்கும் இறைவா! நற்கருணை வழியாக எங்கள் இளைய சழுதாயம் உம்மில் நம்பிக்கைக் கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் அருள்வரங்களையும், திறமைகளையும் பெற்று, திருஅவையின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ்ந்திட தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment