ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா
இன்றைய வாசகங்கள்
எசாயா 60: 1-6
எபேசியர் 3: 2-3அ, 5-6
மத்தேயு 2: 1-12
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் திருக்காட்சியைக் கண்குளிரக் கண்டு ஆராதிக்க ஆலயம் திரண்ட வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
மத்தேயு நற்செய்தியில் மட்டும் வரும் இந்த மூவரும் கடந்த 21 நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களின் மனங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு...
இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாருக்கும் தனிப்பட்ட வகையில் அவர் சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால், இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க, இந்த இறைவனைப் பங்குப் போட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.
உண்மையான தாகத்துடன் தன்னைத் தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகுள்ளவர் நம் இறைவன். அவர் எப்போதும் எங்கும் நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, அகக் கண்களை மூடிக் கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப் போல் உணர்கிறோம்.
தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு வந்த மூவரைப்போல் இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த இன்றைய திருப்பலியில் வேண்டுவோம்..
வாசக முன்னுரை
முதல் வாசக முன்னுரை
மீட்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கடவுள் தமது எளிமைக் கோலத்தை மறைத்து மாட்சிமையை வெளிப்படுத்துகிறார். வானில் தோன்றிய விண்மீனும், மூன்று ஞானிகளும், அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளும் இறைமாட்சிமையின் அடையாளங்கள் தான். ஆண்டவரின் மாட்சிமை உன் மேல் உதித்துள்ளது என்ற எசாயாவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆணடவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி
தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
மீட்பு என்பது யூத இனத்தார்க்கு மட்டும் உரியத் தனியுரிமை அல்ல. அது எல்லா இனத்தார்க்கும் உரியது என்பதைத் திருக்காட்சிப் பெருவிழா உணர்த்துகிறது. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப்பேற்றுக்கு உரியவர்கள் என்கிறார் புனித பவுல். பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள், மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர் என்ற கருத்துகளை எதிர் ஒலிக்கும் பவுலடிகளாரின் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. உம் மாட்சிமையை எம்மேல் உதிக்கச் செய்த எம் இறைவா! எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவியர்கள் பொதுநிலையினர் அனைவரும் உமது மாட்சிமை மிக்கத் திருக்காட்சியின் அடையாளங்களைக் கண்டுணர்ந்துத் தங்களின் நற்செயல்களாலும், நன்னடத்தையாலும் பிறர் முன் இயேசுவின் சாட்சிகளாகத் திகழும் வீண்மீனாக வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. உம்மைத் தேடியவர்களுக்கு உம்மை வெளிப்படுத்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உம்மைத் தேடிக் கண்டடையவும், எமது வாழ்வு நடத்தை, செயல்கள், பேச்சு, உடைநடை பாவனை எல்லாம் உலகமாந்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..
3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்புக் கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.எங்கள் வாழ்வின் இன்பமே இறைவா! பணம், சொத்து, சுகம் அல்ல. நீரே எங்கள் உண்மையான இன்பம் என்பதை அறிந்து நீர் மட்டும் போதும் என்ற மனநிறைவுடன் வாழக்கற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment