பொதுக்காலம் ஆண்டின் எட்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
சீராக் ஞானம் 27-4-7
1கொரிந்தியர் 15: 54-58
லூக்கா 6: 39-45
திருப்பலி முன்னுரை
பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உவமையின் வாயிலாகப் பல அறிவுரைகளை நம் மனதில் பதிவு செய்கின்றார். நாம் அடிக்கடிப் பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. தனது நிலையை அறியாமல் அடுத்தவர்களைக் குறைகூறும் மனிதர்கள் ஒரு விதத்தில் மனநோயாளிகள் எனலாம்.தன்னையே முழுவதும் அறிவதுதான் வாழ்க்கையின் முதற்படி. தன்னை முழுமையாகப் புரிந்தவன் பிறரையும் புரிந்துக் கொள்வான். ஒருவன் தன்னையே நன்கு புரிந்துகொண்டால்தான் நிறை, குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். தான் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவன் தான் பிறருக்கு வழிகாட்ட முடியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவதே மேல் என்பதை உணர வேண்டும்.
தன்னிடம் இருக்கும் தவற்றை அறியாது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று அதிகம்.முதலில் நாம் திருந்துவோம்; பிறகு மற்றவர்கள் திருந்த அறிவுரைகள் சொல்வோம், வழிக் காட்டுவோம். இத்திருப்பலியில் உளமாறக் கலந்து மாற்றம் காண்போம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
மனிதனுடைய வார்த்தைகள் தான் மனதிலுள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. "சல்லடையில் சலிக்கின்ற போது உமி தங்கிவிடுவது போல, மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கின் ஞான நூல் நாம் பேசுவதற்கு முன்னால் நம்மையே நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக அவர்களுக்குச் சாவைப்பற்றி ஏற்பட்ட அச்சத்தை நீக்குகிறார். எப்படி ஒரு விதையானது மண்ணில் மடிந்து மீண்டும் உயிர் பெற்று எழுகிறதோ அதைப் போல் நாமும் கிறிஸ்துவில் மரித்து இறுதிநாளில் சாவை வெற்றிக் கொண்டு அவரைப்போல உயிர்த்தெழுவோம் என்று நம்பிக்கைத் தரும் அவரின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்
திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; `ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் எத்தகைய துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கைக் குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக நற்செய்திகளின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வாக மாற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள்மாாிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பரிவன்பமிக்க எம் தந்தையே, இறைவா! எம் பங்கிலுள்ள ஏழைகள், திக்கற்ற எளியோர்கள், வறியோர்கள், முதியோர்கள், அனாதைகள் ஆகிய அனைவருக்கும் இரக்கம் காட்டும். அவர்கள் நோய்நெடியின்றி வாழ அவர்களுக்கு நலம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நம்பிக்கையின் புகலிடமே! எம் இறைவா! குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம், சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து அதன்படி பிறருடன் உன்னதப் பண்புடன் நடந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எம் முன்னோருக்கு வழிகாட்டி நடத்திய தெய்வமே! எம் இறைவா! கல்வியாண்டு இறுதிதேர்வை எழுதி வரும் எம் அன்பு பிள்ளைகளுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். படிப்பதற்கு நல்வழிகாட்டி, அவற்றை மறக்காமல் சரியான விடைகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, சமூகத்தில் உயர் நிலைக்கு வரத் தேவையான ஞானத்தையும், உம்மில் நம்பிக்கைப் பெற்றவும் உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..
No comments:
Post a Comment