Monday, February 14, 2022

பொதுக்காலம் ஆண்டின் ஏழாம் ஞாயிறு

   பொதுக்காலம் ஆண்டின் ஏழாம் ஞாயிறு  


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23
1கொரிந்தியர் 15: 45-49
லூக்கா 6: 27-38

திருப்பலி முன்னுரை

பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் நம் மனதில் அன்பை விதைக்கின்றன. இறைமகன் இயேசுவின் விழுமியமாகிய அன்பைத் தம் வாழ்வில் நிலைநாட்டி, அவரே நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரின் முக்கியக் கட்டளையாகிய உன்னைப்போல் உன் அயலானை நேசி. அவர் உமது எதிரியாக இருந்தாலும் அன்புச் செய். அவருக்காய் இறைவனிடம் மன்றாடு என்பதே! அதற்கான நம் வாழ்நாள் முன்னோடித் தான் மக்களின் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். தன்னைச் சுட்டவனை மன்னித்துத் தன் நண்பனாக ஏற்றுக்கொண்ட அவர், அலி அஃகாவைச் சிறையில் சந்தித்து இறைமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார்.

நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்று இறைவன் அழைக்கின்றார். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது. தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைக் காணச் செபிப்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

தன்னுயிரைக் கொல்லத் தன்னைத் துரத்தி வந்த சவுல் அரசனைக் கொன்றுப் பழித் தீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்பப்பம் தாவீதுக்குக் கிடைத்தது. ஆனால் ஆண்டவர் அருள்பொழிவுப் பெற்றவர் மேல் கை வைக்கக் கூடாது என்று அவருக்கு ஒரு தீங்கும் செய்யாமல் மன்னித்துவிட்ட தாவீதின் பெருந்தன்மையயாகச் செயலை எடுத்துக்கூறும் இன்றைய முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம். பகைவனுக்கு அன்பு செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மண்ணகத்தைச் சார்ந்த நாம் விண்ணகலிருந்து வந்த இயேசுவின் சாயலை நாம் அணிந்து கொள்ள வேண்டும். அஃதாவது இயேசு சிலுவையில் தொங்கும்போது கூடத் தன் பகைவரை மன்னித்து அவர்களுக்காகச் செபித்துபோல நாமும் பகைவரை மன்னித்து வாழ அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ` பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1 என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் அன்பும் புனிதமும் நிறைந்த தூய ஆவியாரின் ஆலயமாகவும், தீமைச் செய்வோரை அன்பால் அரவணைத்து உம் அன்பின் பாதையில் வழி நடத்திச் செல்லத் தேவையான இறைஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! மாந்தர்கள் அனைவரும் தூய ஆவியானவரின் ஆலயம் என்பதை ஒருபோதும் மறவாமல் இருக்கவும், அவ்வாலயத்தின் தூய்மை ஒருபோதும் கேடாமல் பாதுகாத்து, பகைமையை வேரறுத்து அன்பை வளர்த்திடும் இல்லமாகவும்,  நன்மைகளின் ஊற்றாகவும் மாறிடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! இன்றைய பதட்டமான சூழலில் வரும் தேர்வுகளுக்குத் தம்மையே தயாரித்துக் கொண்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு நல்ல புரிதலையும், படித்தவற்றை மறந்திடாமல் இருக்க நல்ல ஞாபகசக்தியையும், நல்ல உடல்நிலையும் தந்துச் சிறப்பாகத் தேர்வுகள் எழுதி வெற்றிபெறத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் சகோதரப் பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திடவும், உறவுகள் மேன்படவும், தூய ஆவியின் கொடைகள் எம் இல்லங்களில் தங்கி எம் இல்லத்திலுள்ள அனைவரையும் வழி நடத்திடவும், வேற்றுமைகள் ஒழிந்து, மன்னிப்பே மாண்பு என்பதை உணர்ந்து வாழ்ந்திட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

5. என்றும் மாறப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எம் நாட்டு மக்கள் மீது நடைப்பெறும் பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்டக் குடும்பங்களை நினைவுகூர்கிறோம். அவர்களின் குடும்பங்கள் பாதிப்பால் ஏற்பட்ட சோகத்திலிருந்து விடுபட்ட ஆறுதலையும் தேற்றுதளையும் தந்து அவர்கள் வளமுடனும் நலமுடனும் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment