இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
எரேமியா 17: 5-8
1 கொரிந்தியர் 15: 12,16-20
லூக்கா 6: 17,20-26
திருப்பலி முன்னுரை:
இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஆறாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தியில், இறைமகன் இயேசு ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். ஏழைகள் உயர்த்திப் பேசப்படுவதையும், செல்வர்கள் கடுமையாக வார்த்தைகளால் இடித்துரைக்கப்படுவதையும் விவிலியத்தில் பல இடங்களில் காண முடிகிறது.
கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை. இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு. இவ்வுலகுக் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்றச் செல்வம் கிடைக்கலாம், ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் உணரமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது. வலியோரை அல்ல எளியோரையே இறைவன் விரும்புகிறார். ஏனெனில் இவர்கள் நிலைவாழ்வில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். நாமும் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்
வாசகமுன்னுரை:
முதல் வாசகமுன்னுரை:
இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினரும் "மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டவர்" எனக் குறிப்பிடுகிறார். ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். இறைவன் மீது நம்பிக்கை வைப்பவனுக்கு நலமும் வளமும் இறைவனிடமிருந்து அருளப்படும். இறைவாக்கினர் எரேமியா அருளும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு இறைநம்பிக்கையில் வளர்வோம்.
இரண்டாம் வாசகமுன்னுரை:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இவ்வுலகில் துன்பப்படுவோர் மறுமை வாழ்வை எண்ணி மகிழ வேண்டும். நமக்கு மறுமைவாழ்வு மட்டும் இல்லை என்றால் மற்ற மக்களைவிட நாம் மிகுந்த பரிதாபத்துக்குரியவர்கள் என்கிறார். இதன் மூலம் இயேசுவின் உயிர்ப்பு நம் விசுவாத்தின் ஆணி வேரும் அச்சாணியுமாக விளங்குகிறது. என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்.
பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4-6 (பல்லவி: 40: 4a)
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி
அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி
ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு:
1 கருணைக் கடலாகிய எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் நீதியும் நேர்மையும் நிறைந்த இதயங்களால் நிரப்பி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகெங்கும் அன்பையும் நல்லுரவையும் மலரச் செய்ய உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்
2. கருணைக் கடலாகிய எம் இறைவா! மாந்தரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு நன்மைச் செய்யும் விதமாய் அமையவும், சுயநலம் பாராமல் அடுத்திருக்கும் மாந்தரின் முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் ஏற்றம் பெறச் செய்யவும். அனைவரும் இணைந்துச் செயல்பட்டு உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்றைய அரசியல் சூழலில் சிக்குண்டுத் தவிக்கும் எம் மக்களைக் கண்ணோகியருளும். தம் பயணிக்க வேண்டிய பாதைகளை நீதியுடனும் நேர்மையுடனும் தேர்வு செய்து நாட்டு மக்களைத் திறம்பட நடத்திட ஆள்பவர்களுக்கும், நடுநிலையுடன் மக்கள் சேவையில் சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு நல்ல ஞானத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கருணைக் கடலாகிய எம் இறைவா! புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்
5. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்த அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.
No comments:
Post a Comment