Tuesday, March 15, 2022

 தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

விடுதலைப் பயணம் 3:1-8அ, 13-15
1கொரிந்தியர். 10:1-6,10-12:17-4:1
லூக்கா 13:-1-9

திருப்பலி முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்பு வாழ்த்துக்கள்!

முதல் வாரம் நமது கண்களின் தூணை அகற்றி,  பார்வையை விரிவடையச் செய்த தேவன், இரண்டாம் வாரம் அந்த பார்வைக்கு வாழ்வு தரும் விதமாக தன்னையே முழுமையாக ஒளிவெள்ளத்தில் இறை வல்லமையை வெளிப்படுத்தி காணும்‌ வாய்‌பைத் தந்து  நானே உன் தேவன் என்றார். இந்த வாரம் ஐக்கியத்தின் வேரான‌ மனமாற்றத்தை பெற்று அவரில் நிலைத்திருக்க அழைப்பு விடுகின்றார்.

இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டு விடக்கூடாது. அத்திமரத்திற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்குத் தருவதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம்.  அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிப்பாட்டில் வரம் வேண்டிப் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல்வாசகத்தில் வித்தியாசமான கடவுளை அஃதாவது உணர்வு உள்ள, மக்களின் துயர்கண்டுத் துடிக்கிற கடவுளைக் காட்டுகிறது. மோசே கடவுளின் வெளிப்பாட்டைக் காண்கிறார். இறைவனின் குறுக்கீட்டால் அவரின் பணி மாற்றம் அடைகிறது. மேலும் அவர் இனி தனக்கென வாழப் போவதில்லை ஒட்டுமொத்த இஸ்ரயேலரின் குடும்பங்களுக்காக. கடவுளுக்கும், மோசேக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் அமைந்துள்ள முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

'கிறிஸ்துவே அப்பாறை!' எனக் கிறிஸ்துவின் மேன்மையை முன்வைக்கின்றார் திருத்தூதர் பவுலடிகளார். இரக்கம் நிறைந்த கடவுளின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற நற்கனித் தராவிட்டால் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும் நேரிடும் என்று எச்சரிக்கின்றார். 'எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடிப் பார்த்துக்கொள்ளட்டும்!' என்று கூறும் இந்தப் பவுலடிகளாரின் அறிவுரைக்குக் கவனமுடன் செவிய்மெடுப்போம்



நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

அன்புத் தந்தையே! எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் இறைஇயேசுவின் பணிவாழ்வைத் தங்கள் சொல்லாலும், செயலாலும் அனைத்து மாந்தருக்கும் வேறுபாடின்றி, இறைவனின் இரக்கத்தை அனைத்து மாந்தருக்கும் சான்றுப் பகர வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலாலோசனைக் கர்த்தரே! எம் நாட்டில் நிலவும் அரசியல், பண்பாடு, மொழி, இனவேறுபாடுகள் வேரறுக்கப்பட்டு உம் மதிப்பீடுகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் சேர்ந்த நல்ல ஆட்சி அமைக்கத் தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசாரச் சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரைப் பாதுகாத்து உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களைப் புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

ஞானத்தின் இருப்பிடமே இறைவா! உலகெங்கும் ஏற்பட்டுள்ள போர்கள், பயங்கரவாதங்கள், மீண்டும் தொற்று நோயின் தாக்கத்தினால் புதியதாய் வரும் நோய்கள் ஆகியவற்றால் மக்கள் படும் துன்பங்களிலிருந்து அனைவரையும் காத்தருளும். தங்கள் வாழ்வாதரங்களை இழந்து அவதிபடும் மக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பத் தேவையான எல்லா வசதிகளைப் பெற்றிடத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

www.anbinmadal.org


Print Friendly and PDF

1 comment:

  1. தவக்காலம்

    நான்காம் ஞாயிறு

    ReplyDelete